அடடா சொல்ல வைக்கும் உலகின் 5 குட்டி நாடுகள்

இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகப் பெரிய நாடுகளாக திகழ்வது நமக்கெல்லாம் நன்கு தெரிந்த விஷயம். ஆனால், அரை கிலோ மீட்டர் அளவுக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட நாடெல்லாம் உலகில் இருக்கிறது.
அடடா சொல்ல வைக்கும் உலகின் 5 குட்டி நாடுகள்
அடடா சொல்ல வைக்கும் உலகின் 5 குட்டி நாடுகள்Pexels
Published on

இந்தப் பூமி பந்து, நமக்கு இன்னும் தெரியாத ஏராளமான ஆச்சரியங்களையும் அழகான இடங்களையும் கொண்டதாக திகழ்கிறது. உலகில் பெரியதாகவும் சிறியதாகவும் உள்ள பல பெரிய மற்றும் சிறிய நாடுகள் ஒவ்வொன்றும் அதன் இயல்புகேற்ற வகையில் அற்புதமான நாடுகளாக உள்ளன.

இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகப் பெரிய நாடுகளாக திகழ்வது நமக்கெல்லாம் நன்கு தெரிந்த விஷயம். ஆனால், அரை கிலோ மீட்டர் அளவுக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட நாடெல்லாம் உலகில் இருக்கிறது; அந்த நாடுகள் தனித்த கலாச்சாரமும், பாரம்பரியமும் கொண்ட நாடுகளாகவும், மற்ற நாடுகளைப் போன்றே முழுமையான அரசு நிர்வாகத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது என்பதும் ஆச்சரியமான தகவல்தானே..?

வாருங்கள்... அத்தகைய உலகின் முதல் 5 மிகச் சிறிய நாடுகள் எவை என்பதைப் பார்க்கலாம்...

Pexels

1) வாடிகன் சிட்டி (0.44 சதுர கி.மீ)

இந்தப் பட்டியலில் முதலில் வருவது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புனிதமான நகரமான் வாடிகன் சிட்டி. நகரம் எனச் சொன்னாலும், அது ஒரு தனித்த நாடுதான். போப்பாண்டவர் வசிக்கும் அந்த அழகான வாடிகன் நகரம், உலகின் மிகச்சிறிய தேசமாகத் திகழ்கிறது. 110 ஏக்கர் அல்லது 0.44 சதுர கி.மீ ( ஒரு சதுர கி.மீ என்பது ஒரு கி.மீ நீளமும், ஒரு கி.மீ அகலமும் கொண்டது) நிலப்பரப்பிலேயே அடங்கி உள்ளது இந்த நாடு. இதன் மக்கள் தொகை சுமார் 1,000 பேர் மட்டுமே. மைக்கேலேஞ்சலோ மற்றும் லியோனார்டோ டா வின்சி உள்ளிட்ட உலகின் தலைசிறந்த கலைஞர்களுடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய நாடு இது.

Monaco
MonacoNewsSense

2) மொனாக்கோ (2 சதுர கி.மீ)

"நல்ல விஷயங்கள் சிறிய பொதிகளில் வரும்" என்று யாரோ மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அதற்கு மிகச் சரியான உதாரணம்தான் உலகின் இரண்டாவது சிறிய நாடான மொனாக்கோ. 499 ஏக்கர், அதாவது 2 சதுர கி.மீ நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் இந்த தேசத்தின் அழகை நீங்கள் பார்த்தால் நீங்கள் திகைத்துப் போய் விடுவீர்கள். அளவி 'சிறிய நாடு' என்றாலும், அதன் அழகு, உலகின் மிகப் பெரிய நாடுகளைக் காட்டிலும் பிரமாண்டமான அழகுடன் காட்சியளிக்கிறது.

மேலும், சூதாட்டம் மற்றும் பொழுபோக்குக்குப் பெயர் பெற்ற மான்டே கார்லோ கேசினோ இங்குதான் உள்ளது. அதேபோன்று இந்த நாட்டில் நடக்கும் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயமும் உலகளவில் புகழ்பெற்றது.

சுற்றுலா இடங்கள்: மான்டே கார்லோ கேசினோ, மொனாக்கோ கதீட்ரல், மொனாக்கோவின் கடல்சார் அருங்காட்சியகம், பழங்கால ஆட்டோமொபைல்ஸ் அருங்காட்சியகம்

அடடா சொல்ல வைக்கும் உலகின் 5 குட்டி நாடுகள்
லிச்சென்ஸ்டீன் எனும் பூலோக சொர்க்கம் - ஆஹா இப்படியும் ஒரு நாடா?
NewsSense

3) நவ்ரு (21 சதுர கி.மீ)

உலகின் மிகச் சிறிய நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள நவ்ரு முன்பு, 'இன்பத் தீவு' என்று அழைக்கப்பட்டது. அந்த அளவுக்கு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் தீவு நாடு அது. ஆஸ்திரேலியாவின் கிழக்கே அமைந்துள்ள இந்நாட்டின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 13,000 பேர். அமைதியான நாடு. ஆனால், ஏனோ தெரியவில்லை, இந்த நாடு பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் கவனத்தில் இருந்து விலகி இருக்கிறது. அதே சமயம் சுற்றுலா செல்வதற்கு எல்லா தகுதிகளையும் கொண்ட நாடு இது.

சுற்றுலா இடங்கள்: அனிபேர் விரிகுடா, மத்திய பீடபூமி, ஜப்பானீஸ் கன்ஸ் (Japanese Guns) மொக்குவா கிணறு

NewsSense

4) துவாலு (25.9 சதுர கிமீ)

ஓசியானியாவில் உள்ள பிரம்மிக்க வைக்கும் நாடு, துவாலு. பாலினேசியாவில் உள்ள இந்த நாடுதான் உலகின் நான்காவது சிறிய நாடு. முன்பு 'எல்லிஸ் தீவுகள்' என்று அழைக்கப்பட்ட இந்த தீவு நாட்டின் மக்கள் தொகை சுமார் 11,000. தொலைதூரத்தில் அமைந்திருப்பதன் காரணமாக, இந்த நாடு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இருந்து விலகி உள்ளது, ஆனால் இது மனதை கொள்ளைக் கொள்ள வைக்கும் ஒரு பிரபலமான தேசமாகும்.

NewsSense

5) சான் மரினோ (61.2 சதுர கிமீ)

61.2 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள சான் மரினோ, உலகின் சிறிய நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 33,000. சான் மரினோவின் பொருளாதாரம் பெரும்பாலும் நிதிச் சேவை, தொழிற்சாலைகள், சேவை அடிப்படையிலான தொழில்கள் மற்றும் சுற்றுலாவை சார்ந்துள்ளது. இந்த அழகான நாட்டில், எல்லோரையும் கவரக்கூடிய ஒரு முக்கியமான இடம் என்றால், அது மாயாஜாலமாகத் தோற்றமளிக்கும் குன்றின் மேல் அமைந்திருக்கும் அரண்மனைகள்தான்.

சுற்றுலா இடங்கள்: குவாடா டவர், விடுதலை சதுக்கமான பியாஸ்ஸா டெல்லா லிபர்டா, கடல் மட்டத்திலிருந்து 739 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைக் குன்றானமவுண்ட் டைட்டன், சான் மரினோவின் பாராளுமன்றம் அமைந்திருக்கும் பலாஸ்ஸோ பப்ளிகோ

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com