கடலுக்குள் நீந்திக்கொண்டு இருக்கையில், ஒரு திமிங்கலம் வாய்க்குள் போட்டுக்கொண்டு போன பிறகு, உயிரோடு திரும்பி வந்தவர் யாரையும் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா... அப்படியொரு ஒரு திகிலான சம்பவத்தில் உயிர் மீண்டு வந்து இப்போது நலமாக இருக்கிறார், மைக்கேல் பேக்கார்டு.
அமெரிக்காவின் மாகாண நகரமான மசாசுசெட்ஸ் கடலோரப் பகுதியில் வசித்துவருகிறார். 56 வயதாகும் மைக்கேலுக்கு, கடலுக்குள் மூழ்கி லாப்ஸ்டர் எனப்படும் கல் இறால்களைப் பிடிப்பதே, தொழில். அவரின் மொத்த வாழ்வாதாரமும் அதுவே.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில்... ஹெர்ரிங் கோவ் கடற்கரையில் உள்ள கடற்படுகையில் வழக்கம்போல மைக்கேல் கல் இறால்களைப் பிடிக்க முக்குளிப்பில் இறங்கினார். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தேறியது.
மசாசுசெட்ஸ் கடற்கரையில் அந்த கூனல் முதுகுத் திமிங்கலத்தை மைக்கேலும் அடிக்கடி பார்த்திருக்கிறார்.
அன்றைக்கு நிகழ்ந்ததை மனதில் கொண்டுவந்து நிறுத்தும்படியாக, ‘கேப் கோட் டைம்ஸ்’ எனும் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார், மைக்கேல்.
அதில், ” அன்றைய நாளும் எனக்கு வழக்கமான ஒன்றாகவே இருந்தது. சரியாக சூரியன் உதிக்கையில் வீட்டைவிட்டுக் கிளம்பினேன். கடலுக்குச் சென்று அன்றாட வேலையைத் தொடங்கினேன். இரண்டு முறை தண்ணீருக்குள் பாய்ச்சல் போட்டுவிட்டு வந்தேன். மூன்றாவது முறையாக குதியலைப் போட்டேன்.”
“ஆழத்துக்குப் போனேன். அப்படியே மேலும் ஆழத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது ஏதோ தட்டுவதைப் போல இருந்தது. சரக்கு ரயிலைப் போல... திடீரெனப் பார்த்தால் சுற்றிலும் கன்னங்கரேல் என முழுக்க கருப்பு...” என, திமிங்கலம் தன்னை விழுங்கப் பார்த்த கதையை விவரிக்கிறார், மைக்கேல் பேக்கார்டு.
திமிங்கலத்தின் வாய்க்குள் போய்விட்ட மைக்கேலுக்கு, அதன் வாய்க்கு உள்ளேயே நகர முடிவதை உணர்ந்திருக்கிறார். அந்தத் திமிங்கலம் அவரின் வாயில் இருக்கும் தசைகளை அழுத்தவும் செய்திருக்கிறது.
“ அவ்வளவுதான்... அதன் வாயிலிருந்து வெளியே வர வாய்ப்பே இல்லை என நினைத்துக்கொண்டேன். நம் கதை முடிந்தது. செத்துக்கொண்டு இருக்கிறேன் என நினைத்தேன். என்னுடைய இரண்டு மகன்கள்- 12 வயது, 15 வயது- என்ன ஆவார்கள் என்பதைப் பற்றி நினைத்துக் கவலைகொண்டேன்.” என மைக்கேல் சொல்லச்சொல்ல நமக்கு மயிர்க்கால்கள் சில்லிடுகின்றன.
இந்த கூனல் முதுகுத் திமிங்கலங்களின் வாயில் கெரட்டினால் ஆன சீரான பற்கள் அமைப்பு இருப்பதை நாம் அறிவோம். அவை எப்போதும் தண்ணீரை வடிகட்டி கொப்பளித்துத் துப்புவதற்கு வசதியாக உள்ளன. அப்படி தண்ணீரைத் துப்பும்போதும் தன் இரையை வாயில் வைத்துக்கொள்வது கூனல் முதுகுத் திமிங்கலத்தின் இயல்பு.
மைக்கேலை விழுங்கப் பார்த்த அந்தத் திமிங்கலத்துக்கு ஓர் அளவுக்கு மேல் இரை கிடைத்திருக்க வேண்டும்போல்... அதனால்தான் அவரை அது வாயில் வைத்து பிறகு சாப்பிடலாம் என விட்டுவைத்திருக்கலாமோ என்னவோ! எப்படியோ அதன் இயல்புப்படி வாயில் உள்ள தண்ணீரைத் துப்புவதைப்போல வாய்க்குள் பிடித்துவைக்கப்பட்டு இருந்த மைக்கேலையும் துப்பிவிட்டது.
இப்படித்தான்திமிங்கலத்தின் வாய்க்குள் இரையாகச் சென்று, பாதி வழியில் உயிர் மீண்டு வந்தார், மைக்கேல்.
அது எப்படி என அவரே சொல்வதைக் கேட்போம்.
” பிறகு அந்தத் திமிங்கலம் கீழேயிருந்து தண்ணீர்மட்டத்தை நோக்கி மேலே எழும்பியது. சட்டென அது தரைப்பகுதியை ஒட்டி நகர்ந்தது. தலையைச் சிலுப்பத் தொடங்கியது. எல்லாம் தலைகீழாக மாறியது... பிறகென்ன சாதகம்தான்!”
“ சரியாகச் சொல்லவேண்டுமானால், அதன் வாயிலிருந்து துப்பி எறியப்பட்டேன். என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. கடவுளே எனக் கதறினேன்... வானத்தில் மிதப்பதைப் போல இருந்தது... ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது... நான் பிழைத்துக்கொண்டேன். நான் சாகப் போவதில்லை...”
“ கடவுளின் கிருபையால்... எனக்கு மூச்சு வந்துவிட்டது. வேறு எதையும் அப்போது என்னால் செய்ய முடியவில்லை. என்னுடைய நுரையீரல்களுக்கு பெரும் பாதிப்பு இல்லை.. நன்றாக மூச்சுவிட முடிந்தது. சரியான நேரத்தில் அந்தத் திமிங்கலம் தண்ணீருக்கு மேலே வந்தது. அதனால் தப்பித்தேன்.” என விவரிக்கும் மைக்கேல் பேக்கார்டு, நாற்பது வினாடிகளுக்கும் மேல் அந்தத் திமிங்கலத்தின் வாய்க்குள் இருந்திருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust