இன்றைய பிரான்ஸ் நாட்டில் இருக்கிறது ஸ்ட்ராஸ்பொர்க் என்கிற நகரம். பழங்கால தேவாயலங்களுக்கு பெயர் போன இந்த அழகிய நகரத்தில் 16ஆம் நூற்றாண்டில் ஒரு விளக்கமுடியாது சம்பவம் நடந்தது.
மக்கள் கொத்து கொத்தாகப் பைத்தியம் பிடித்தவர்களைப் போலச் சாகும் வரை நடனமாடினர். இது எப்படித் தொடங்கியது? எப்படி இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது? என்பதை எல்லாம் இக்கட்டுரையில் பார்ப்போம்.
1518ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஃப்ரா ட்ரொஃபியா (Frau Troffea) என்கிற பெண்மணி திடீரென நடனமாடத் தொடங்கினார். அப்போது எந்த ஒரு கோர்வையான இசையோ, பாடல்களோ எதுவும் அவரைச் சுற்றிக் கேட்கவில்லை. எனவே சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அப்பெண்ணைப் பார்த்துச் சிரித்தனர். இப்போது நிறுத்துவார், அப்போது நிறுத்துவார் என எதிர்பார்த்த மொத்த கூட்டமும் சில மணி நேரங்களில் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டது.
ஆனால் ஃப்ரா ட்ரொஃபியா தன் ஆட்டத்தை நிறுத்தியபாடில்லை. இரவு, பகல், பசி, தூக்கம்... என எதையும் பார்க்காமல் தொடர்ந்து நடனமாடினார். உணவு இடைவேளைக்குக் கூட தன் ஆட்டத்தை நிறுத்தவில்லை. இப்படியே அவரது ஆட்டம் கிட்டத்தட்ட ஆறு நாட்களைக் கடந்தது. அப்போது தான் இப்படி பித்துப் பிடித்தாற் போல ஆடுவது மக்களிடையில் பரவத் தொடங்கியது. அடுத்த ஏழு நாட்களுக்குள் இப்படி ஆடுவோரின் எண்ணிக்கை 34ஆகவும், ஒரு மாத காலத்துக்குள் கிட்டத்தட்ட 400 பேரும் ஆடியதாக பிபிசி வலைத்தள காணொளி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வயதானவர்கள், இதய நோய் போன்ற உடல் நலக் கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து ஆடியதன் விளைவாக மரணிக்கத் தொடங்கினார். ஆனால் அது மற்றவர்களைப் பாதிக்கவில்லை. ஆட்டம் தொடர்ந்தது.
ஊர் பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடி இதை எப்படிச் சமாளிப்பதென விவாதித்தனர். ஒரு பெரிய மேடையை நடனமாடும் ஆட்டக்காரர்களுக்கு அமைத்துக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. ஆட விரும்புவோர் தங்களின் ஆசை தீர ஆடி முடித்துவிட்டால், தங்களின் சுய நினைவுக்குத் திரும்பிவிடுவர், பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்துவிடும் எனக் கருதினர். அதோடு இசைக் கலைஞர்களை அழைத்து, நடனமாடுவோருக்கு இசைக்கருவிகளை வாசிக்குமாறும் கூறப்பட்டது.
ஆனால் சூழல் நேருக்கு மாறாக நடந்தது. நகரத்தில் பித்துப்பிடித்தாற் போல நடனமாடுவோர்களின் எண்ணிக்கை சகட்டுமேனிக்கு அதிகரித்தது. திட்டம் சொதப்பலில் முடிந்தது.
1518 ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாத காலத்தில் திடீரென ஆட்டம் நின்றுபோனது. மக்கள் தங்கள் சுய நினைவுக்கு வந்த போது கை கால்களில் வலி உயிர்போனது. அதுவரை தலைகால் புரியாமல் நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் அமைதியாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பி, பழைய வாழ்கையை வாழத் தொடங்கினர்.
இப்படி சுயநினைவின்றி, பசி தூக்கம் மறந்து நடனமாடியதை வரலாற்றில் டான்சிங் பிளேக் (Dancing Plague) என்று அழைக்கின்றனர். இதை கோரியோமேனியா (Choreomania) என்றும் அழைக்கின்றனர். இது வரலாற்றில் நிகழ்ந்த மிக அரிதான நிகழ்வு என்கிறார்கள் வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்கள்.
இன்னும் சில வரலாற்றாசிரியர்கள், இந்த சம்பவத்தை 1237ஆம் ஆண்டு ஜெர்மனியில் நிகழ்ந்த பைட் பைப்பர் சம்பவத்தோடு ஒப்பிடுகின்றனர்.
அதெல்லாம் ஒருபக்கம் இருக்க, எப்படி இந்த டான்சிங் பிளேக் நோய் வெளிப்பட்டது என்கிற கேள்விக்கு இன்றுவரை பல கருத்துகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு எதார்த்த நோயா அல்லது சமூகத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவமா? என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டது.
சிலர் இது எபிலெப்சி (Epilepsy) போன்ற ஒரு விதமான நரம்பியல் சார்ந்த நோய் மற்றும் டைஃபஸ் (Typhus) எனப்படும் ஒரு வித தொற்று நோயாக இருக்கலாம் என்கிற வாதங்களை முன்வைத்தனர்.
ஆனால், இந்த டான்சிங் பிளேக் ஒரு கலாச்சாரத் தொற்று என்றே பல்வேறு ஆதாரங்கள் கூறுவதாக பிபிசி காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. கடும் மழை வெள்ளம், கடுங்குளிர் அதனைத் தொடர்ந்து கடும் வெப்பம் என மோசமான நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாஸ் ஹிஸ்டீரியா காரணமாக இப்படி மக்கள் நடனமாடி தங்களை மறந்த நிலையிலிருந்ததாக அக்காணொளியில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த டான்சிங் பிளேக்கை மையமாக வைத்து பாப் நட்சத்திரம் ஃப்ளோரென்ஸ், டான்ஸ் ஃபீவர் (Florence + The Machine's album Dance Fever) என ஒரு ஆல்பத்தை வெளியிட்டார். கிரண் மில்வுட் ஹார்கிரேவ் என்கிற எழுத்தாளர் 'தி டான்ஸ் ட்ரீ' (The Dance Tree) என்கிற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp