ட்விட்டர்: கோஷ்டிங் முதல் ஆபாச படங்கள் வரை - எலான் மஸ்க் எதிர்கொள்ள போகும் சவால்கள் என்ன? News Sense
பிசினஸ்

Twitter : எலான் மஸ்கின் சாம்ராஜ்யத்தை காலி செய்யுமா? - என்னென்ன சவால்கள் உள்ளன?

எலான் மஸ்க் கூட ஒரு கூட்டத்தில், ட்விட்டர் நிறுவனத்துக்கு தற்போது கூடுதல் விலை கொடுப்பதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இங்கு நினைவுகூறத்தக்கது. சுருக்கமாக ட்விட்டரில் எல்லாம் இருக்கிறது... பணத்தைத் தவிர.

Gautham

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்போது வாங்குவார், அப்போது வாங்குவார் என எலான் மஸ்கின் ரசிகர் பட்டாளங்கள் காத்துக் கிடந்தன. ஆனால் எதார்த்தத்தில் ட்விட்டர் நிறுவனம் மற்றும் எலான் மஸ்க் பல்வேறு விஷயங்களைக் காரணம் காட்டி பல வாரங்களுக்கு குழாயடிச் சண்டை போட்டனர்.

கடைசியாக கடந்த 2022 அக்டோபர் 27ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிவிட்டதாக எலான் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தான் நேசிக்கும் மனித இனத்துக்கு உதவும் நோக்கத்திலேயே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதாக எலான்மஸ்க் கூறியுள்ளார். மேலும் தான் பணம் சம்பாதிக்கவோ, எளிதில் வாங்க முடியும் என்றோ ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை என்றும் பதிவிட்டு இருக்கிறார். அப்பதிவை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்.

தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிவிட்டதாக எலான் மஸ்க் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டாலும், அரசு அல்லது அதிகாரபூர்வ முகமைகள் அல்லது எந்த ஒரு அமைப்பிடம் இருந்தும் இதுவரை எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிவிட்டதாகத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என சில சர்வதேச ஊடகங்கள் சொல்கின்றன. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த ட்விட்டர் டீலால் எலான் மஸ்குக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா..? ஒருவேளை இந்த டீல் சொதப்பினால் யாருக்கு என்ன பிரச்சனை? வாருங்கள் பார்ப்போம்.

ஓடாத தேருக்கு - ஓட்டுநர் எதற்கு

உலகின் மிக முக்கிய சமூக வலைதளமான ட்விட்டரை மிகப்பெரிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைதள ஆளுமைகள் எல்லாம் பயன்படுத்துகிறார்கள். எலான் மஸ்க் போன்ற நாயக பிம்பம் கொண்டவர்கள் தங்கள் ரசிகர்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்ள ட்விட்டர் தளத்தைப் பெரிய அளவில் பயன்படுத்துகின்றனர்.

இத்தனை பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் கூட வெறும் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே வருவாயாக ஈட்டியது. எனவே, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 44 பில்லியன் அமெரிக்க டாலர் என அதிக விலை கொடுத்துவிட்டார் என வருத்தப்படுகிறார் மேன்ஹாட்டன் வெஞ்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா வால்னெ.

எலான் மஸ்க் கூட ஒரு கூட்டத்தில், ட்விட்டர் நிறுவனத்துக்கு தற்போது கூடுதல் விலை கொடுப்பதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டது இங்கு நினைவுகூறத்தக்கது. சுருக்கமாக ட்விட்டரில் எல்லாம் இருக்கிறது... பணத்தைத் தவிர.

எலான் மஸ்கோ, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை இரு மடங்காக அதிகரிப்பேன் என்கிறார். அதோடு செலவீனங்களைக் குறைக்க 75% ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பேன் என்றும் கூறியுள்ளார். இது சாத்தியமா, செய்துகாட்டுவாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு சிலர், பேபல், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற நிறுவனங்களின் வெற்றிக் கதையை அரங்கேற்றிய மனிதருக்கு இதுவும் சாத்தியம்தான் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒருவேளை இவர்கள் நம்புவது போல எலான் மஸ்க் சாதித்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஒருவேளை சொதப்பிவிட்டால், அது சர்வதேச பத்திரிகைகள் தொடங்கி, உள்ளூர் வலைதளங்கள் வரை தலைப்புச் செய்தியாகிவிடும். எனவே எலான் மஸ்கின் கெளரவம் இதில் அடங்கி இருப்பதாக ஒருசாரார் கருதுகின்றனர்.

கோஷ்டிங் - அடிவாங்கும் வருவாய்:

இதெல்லாம் போக ட்விட்டரில் தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே கோஷ்டிங் (Ghosting) தான். ஒரு பயனர் தன் சொந்தக் கணக்கை பயன்படுத்தாமல் அம்போவென விட்டு தொலைதூரத்தில் இருப்பதை டெக்னாலஜி உலகில் கோஷ்டிங் என்கிறார்கள்.

இப்படி பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கோஷ்டிங் மோடில் இருப்பது இனி எலான் மஸ்கின் கவலைகளில் ஒன்று. பெரிய எண்ணிக்கையில் பின் தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்கள் அதிக நாட்கள் கோஷ்டிங் மோடில் இருந்தால், அது ட்விட்டரின் வருவாயை நேரடியாக பாதிக்கும்.

எலான் மஸ்க்

பந்திக்கு பிரியாணி சொல்லிட்டு பக்கோடா போட்டா எப்படி

யார் இந்த எலான் மஸ்க்... ஒரு விஞ்ஞானி, அறிவியல் புனைவுக் கதைகள் திரையில் காட்டிய விஷயங்களை பூமித் தரையில் கொண்டு வரும் அசாத்திய புத்திசாலி, உலகமே எதிர்த்து நின்று முடியாது என்று சொல்லும் விஷயங்களை முடியும் என செய்துகாட்டி கோடிக் கணக்கில் காசு பார்க்கும் தொழிலதிபர்.

இப்படித் தான் இதுநாள் வரை எலான் மஸ்கைப் பற்றி பேசினோம். ஆனால் இன்று முதல் ஒரு பழைய டெக்னாலஜி நிறுவனத்தை விலைக்கு வாங்கி, அதில் வரும் பதிவுகள், காணொளிகளை எல்லாம் சரிபார்த்து அனுமதிக்கும் சிக்கலான சமூக வலைதளத்தில் முதலாளியாகியுள்ளார் எலான் மஸ்க்.

செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறிக் கொண்டிருந்த மனிதருக்கு இப்போது சனி பிடித்தார் போல அரசியல் பஞ்சாயத்துகள், குழந்தைகள் தொடர்பான ஆபாசப் பட பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க வேண்டிய சகதிச் சுழலில் சிக்கியுள்ளார் என்கிறது 'தி வெர்ஜ்' பத்திரிகை.

அதோடு டிக்டாக், இன்ஸ்டாகிராம் காலத்தில் ட்விட்டர் மெல்ல அவுட் டேட் ஆகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் எதிர்காலத்தைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் எலான் மஸ்க், இந்த நேரத்தில் ட்விட்டரை வாங்கி தன் ஒட்டுமொத்த வாழ்கைக்கே ரிவர்ஸ் கியர் போட்டுக் கொண்டாரோ என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

ட்விட்டர் தளத்தில் பதிவேற்றபடும் சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசப் பதிவுகளை அவர் எப்படி சமாளிப்பார், கருத்துச் சுதந்திரத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார், இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து ட்விட்டருக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வார் என பல கேள்விகளுக்கு எலான் மஸ்கின் நடவடிக்கைகள்தான் விடை சொல்லப் போகின்றன.

இதுநாள் வரை தன் டெஸ்லா மின்சார கார்களுக்கு பெரிய போட்டி இல்லாமல் ஜாலி தாதாவாக வலம் வந்த டெஸ்லாவுக்கு, செவ்ரொலெட் போன்ற கார் நிறுவனங்கள் போட்டிக்கு களமிறங்க இருக்கிறது. இப்போதைக்கு வேண்டுமானால் டெஸ்லா மின்சாரா வாகனங்களில் முன்னணியில் இருக்கலாம், ஆனால் மற்ற நிறுவனங்களும் களத்தில் குதிக்கத் தொடங்கினால், டெஸ்லாவின் தனிக்காட்டு ராஜாங்கம் போட்டி நிறைந்த சந்தையாவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இப்படிப்பட்ட நேரத்தில் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தை இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்வதை விடுத்து, ட்விட்டரைக் கையில் எடுத்திருப்பது, டெஸ்லா நிறுவனத்துக்கும், அந்நிறுவனத்தின் பங்கு விலைக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் என டெஸ்லா ஆதரவாளர்கள் அஞ்சுகிறார்கள்.

விற்ற டெஸ்லா பங்குகளால் வினை வரலாம்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்க, 15.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான, தன் டெஸ்லா பங்குகளை இரு வேறு காலத்தில் விற்று திரட்டினார். எனவே இப்போது எலான் மஸ்கிடம் நிறுவனர் என டெஸ்லா நிறுவனத்தின் மீது அதிகாரம் செலுத்த போதிய பங்குகள் இல்லை என்கிறது 'தி வெர்ஜ்' பத்திரிகை.

யாராவது டெஸ்லாவில் அதிகப்படியான பங்குகளை வாங்கி டெஸ்லா நிறுவனத்தை கட்டுப்படுத்தும் நிலைக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்பதையும் இங்கு மறுப்பதற்கு இல்லை.

ட்விட்டரைப் பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டுமா? எடிட் ஆப்ஷன் கிடைக்குமா..? என மக்கள் ஒருபக்கம் ட்விட்டர் அப்டேட் குறித்து ஆர்வத்தோடு காத்திருந்தாலும், எலான் மஸ்க் கையில் எடுத்து இருக்கும் ட்விட்டர் நிறுவனத்தை எதையாவது செய்து வெற்றி பெற வைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. புதிய ட்விட்டர் தலைவர் எலான் மஸ்குக்கு நம் வாழ்த்துகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?