(மே மாதம் வெளியான கட்டுரையின் மீள்பகிர்வு இது. இப்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எண்ணத்தை கைவிட்டு இருக்கிறார் மஸ்க். அது குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.)
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக சமர்ப்பித்த திட்டத்தை ட்விட்டர் இயக்குநர்கள் குழு ஏற்றுக் கொண்டது.
அத்திட்டத்துக்கு எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்க இருக்கிறார் என நீங்கள் செய்திகளில் படித்திருக்கலாம்.
'பணம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்...' எனப் பலர் நமக்குப் போகிற போக்கில் வெவ்வேறு விதத்தில் கூறி இருக்கலாம். இன்று உலகில் பல நாடுகள், பல மாநிலங்கள் தொடங்கிப் பல தனி மனிதர்களுக்குக் கூட மிக மிக அத்தியாவசியமாகப் பணம் தேவைப்படுகிறது.
உதாரணமாக இலங்கை மொத்த நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் கூறலாம். உக்ரைன் ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாகப் புலம் பெயர்ந்த மற்றும் புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கூறலாம், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பணமின்றி காத்திருக்கும் மக்கள், பசியோடு போராடிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்கள் எனப் பணம் மிக மிகத் தேவையாக இருக்கும் மக்கள் பட்டியல் மிக நீண்டது, கொடியது.
சரி உண்மையிலேயே 44 பில்லியன் டாலரைக் கொண்டு என்ன எல்லாம் செய்திருக்க முடியும்?
இலங்கை அரசு 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது எனக் கையை விரித்துவிட்டதாகச் சமீபத்தில் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானது. இது சர்வதேச அளவிலும், இலங்கை பொருளாதாரத்திலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ட்விட்டரை வாங்கச் செலவழித்த பணத்தோடு இன்னும் சில பில்லியன் டாலர் கொடுத்தால், இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன்களையும் மொத்தமாக அடைத்திருக்கலாம் என ட்விட்டரில் உமர் சைஃப் என்கிற பாகிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஆலோசகர் பதிவிட்டுள்ளார். இவர் ஒரு கணிப்பொறி விஞ்ஞானி மற்றும் கல்வியாளர்.
தி வெர்ஜ் பத்திரிகையின் கணிப்புப் படி, பசி கொடுமையால் வாடிக் கொண்டிருக்கும் 4.2 கோடி மக்களுக்கு, தினமும் ஒரு வேளை மட்டும் உணவு கொடுத்து ஓராண்டு காலத்துக்குக் காப்பாற்ற 6.6 பில்லியன் டாலர் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
வெறும் 6.6 பில்லியன் டாலரில் இத்தனை கோடி பேரின் பசியைப் போக்க முடியுமானால், 44 பில்லியன் டாலரில் எத்தனை கோடி பேரின் பசியைத் தீர்க்க முடியும் என நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.
2022 - 23 நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த பட்ஜெட் தொகை 3.33 லட்சம் கோடி ரூபாய். மேலே குறிப்பிட்ட 44 பில்லியன் அமெரிக்க டாலரை இந்திய ரூபாயாக மாற்றினால், சுமார் 3.33 லட்சம் கோடி ரூபாய் வரும். ஆக, ட்விட்டர் பணத்தைக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழக அரசையும் ஓராண்டுக் காலத்துக்கு நடத்தலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com