அம்பானி NewsSensetn
பிசினஸ்

Jio அம்பானியின் கதை : முதல் நஷ்டம் - திருபாய் என்ன சொன்னார் தெரியுமா? | பகுதி 6

ரிலையன்ஸ் அடுத்து பந்தயம் கட்ட வேண்டிய குதிரை பாலியஸ்டர்தான் என்பதை உணர்ந்தார் திருபாய் அம்பானி. முதலில் பாலியஸ்டரை இறக்குமதி செய்து விற்கத் தொடங்கியது ரிலையன்ஸ் நிறுவனம்.

Gautham

பாலியஸ்டர்... உடுத்திக் கொள்ள சௌகரியமாகவும், துவைத்துப் பராமரிப்பதற்கு எளிதாகவும், இஸ்திரி செய்யாமலேயே ஓரளவுக்கு விரைப்புத்தன்மையோடும், தொடர் பயன்பாட்டுக்குப் பிறகும் அதன் வடிவம் பெரிதாக மாறாமல் இருப்பது... போன்றவை எல்லாம் போக பாலியஸ்டர் உடுத்திக் கொள்ளும் இந்தியர்களுக்கு, சீமை சில்க் என்கிற பெருமிதமும் இருந்தது.

இவையெல்லாம் கலந்துகட்டி பார்க்கும்போது, ரிலையன்ஸ் அடுத்து பந்தயம் கட்ட வேண்டிய குதிரை பாலியஸ்டர்தான் என்பதை உணர்ந்தார் திருபாய் அம்பானி. முதலில் பாலியஸ்டரை இறக்குமதி செய்து விற்கத் தொடங்கியது ரிலையன்ஸ் நிறுவனம்.

1965ஆம் ஆண்டு, இனி பாலியஸ்டரை வாங்கி விற்றால் போதாது, அதைத் துணியாக நெய்து விற்றால் இன்னும் நாலு காசு சேர்த்துப் பார்க்கலாம் எனத் தீர்மானித்து, நூற்பாலைக்குக் கடன் வாங்கலாம் என ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் சம்பக்லால் தமானிக்கும் திருபாய் அம்பானிக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றி, இருவரும் தங்கள் வழிகளில் பிரிந்தனர்.

polyster

1966 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில், அஹமதாபாத் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் நரோடா என்கிற ஊரில் ரிலையன்ஸ் நிறுவனம் தன்முதல் நூற்பாலையை நிறுவியது.

சுமார் 10,000 சதுர மீட்டரில் நரோடாவில் தொடங்கப்பட்ட நூற்பாலைக்குத் தேவையான நல்ல பணியனுபவமுள்ள நபர்கள், ஏடனிலிருந்து எளிதாகக் கிடைத்தனர். 1967ஆம் ஆண்டு பிரிட்டன் ஏமன் நாட்டிலிருந்து வெளியேறிய பிறகு, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பல இந்தியர்கள், குறிப்பாகக் குஜராத்திகள் திருபாயின் நரோடா ஆலையில் வேலைபார்க்கத் தொடங்கினர்.

ஆரம்ப நாட்களில் ஆலை எதிர்பார்த்தது போல் செழிப்பாகச் செயல்படவில்லை. அந்தளவுக்கு நரோடா ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை விற்க முடியாமல் திணறினர். 1967ஆம் ஆண்டிலேயே ஆலையை மூடிவிடலாமா என்று கூட ரிலையன்ஸ் நிறுவனத்துக்குள்ளேயே ஆலோசிக்கத் தொடங்கினர்.

ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் காலையில் உற்பத்தி, மாலையில் மார்கெட்டிங் என ஓவர்டைம் பார்க்கத் ஹொடங்கினர். எப்படியும் ஆலையைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென கங்கனம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தனர். கடைசியில் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி கிடைத்தது.

திருபாய்

திருபாய் வெறுமனே டீல்களை முடிப்பதிலும், பேசி பொருட்களை விற்பதில் மட்டும் வியாபாரியாக இல்லாமல், ஒவ்வொரு நொடியும் தொழிலதிபர்களைப் போல இயல்பாக யோசித்து, ரேஷனலான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்பதற்கு ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

நரோடா ஆலையில் இறக்குமதி செய்து பயன்பாட்டிலிருந்த எந்திரங்களின் சில பாகங்கள் பழுதடைந்தன. எனவே மிக அவசரமாக உதிரிப் பாகங்கள் தேவை ஏற்பட்டது. விமானம் வழியாகப் பாகங்கள் வெளிநாட்டிலிருந்து விமான நிலையத்துக்கு வந்துவிட்டன. ஆனால் அதை ஆலைக்குக் கொண்டு வர டிரக்கு போன்ற வாகனங்கள் கிடைக்கவில்லை.

பிரச்சனையைப் புரிந்து கொண்ட திருபாய் அம்பானி, உடனடியாக இரு டிரக்குகளை விலை கொடுத்து வாங்கி, பாகங்களை ஆலைக்குக் கொண்டு வந்தார். பிறகு அந்த இரு டிரக்குகளையும் அஹமதாபாத்தில் விற்றுவிட்டார்.

அதே போல, தன் ஆலையில் பணியாற்றிய நண்பர் ஒருவர், வியாபாரத்தைப் பெரிதாக விரிவாக்க ஒரு நபரிடம் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரக்கை விற்றார். அதற்கான பேமென்ட் ரசீதுகளைக் காட்டி ரயில் நிலையத்திலிருந்து சரக்கை எடுத்துச் செல்லுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சொன்னது போல அவரும் ஒரு பேமென்ட் ரசீதைக் கொடுத்து சரக்கை எடுத்துச் சென்றார்.

அந்த ரசீதை வங்கியில் கொடுத்து பணத்தை வாங்கச் சென்ற போதுதான் அது போலி ரசீது எனத் தெரியவந்தது. சொலையாக 9 லட்சம் நஷ்டம்.

Dhirubhai Ambani

ஒரு சராசரி மனிதன் "நீ எல்லாம் ஒரு மனுஷனா... யோசிக்க வேண்டாமா... உன்ன டிஸ்மிஸ் பண்றேன்" என ஊரையே கூட்டி அவரை அவமானப்படுத்தி இருப்போம்.

ஆனால், இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட திருபாய் "பவரவாயில்ல நாது... பாத்துக்கலாம். வியாபாரத்துல இது சகஜம். அடுத்த வேலையை பாரு" என ஊக்கப்படுத்தினாராம்.

அதே போல அம்பானியின் ரிஸ்க் எடுக்கும் அந்த வைர மனநிலைக்கு மற்றொரு சம்பவத்தையும் கூறுகிறார்கள்.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும், கண்டெயினரில் வரிசையாக அடுக்கி வைத்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பழக்கத்தை Containerisation என்பார்கள். 1960களின் இறுதி, 1970களின் தொடக்கக் காலத்தில் அது இந்தியாவில் பெரிதாகப் பின்பற்றப்படாமல் இருந்தது.

எனவே கடும் மழை, கடல் சீற்றம் போன்ற பிரச்சனைகளால் சரக்கு சேதமடைந்து வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் அல்லது காப்பீடு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கும் எனப் பலரும் இந்தியாவோடு வியாபாரம் செய்ய அஞ்சிய காலமது.

திருபாய் அம்பானி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டூ பாண்ட் நிறுவனத்தோடு பாலியஸ்டரை இறக்குமதி செய்வதற்கு பேச்செடுத்த போது, கண்டெயினரைசேஷனைச் சுட்டிக்காட்டி டீலை ஓகே செய்யத் தயங்கியது அமெரிக்கா. கடைசியில், தனக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்கு பாதிக்கப்பட்டால் காப்பீட்டில் கிளைம் கோர மாட்டேன் என திருபாய் அம்பானி தில்லாகக் கூறி, தனக்கான ஏற்றுமதி டீலை உறுதி செய்து கொண்டார்.

முந்தைய பாகத்தை படிக்க,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?