ஜாம்ஷெட்பூரில் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வந்த சிறிய லோகோமோட்டிவ் என்றழைக்கப்படும் என்ஜின்களைத் தயாரிக்கும் ஆலையை 45 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார் ஜே ஆர் டி. டாடா என்ஜினீயரிங் அண்ட் லோகோமோட்டிவ் கம்பெனி லிமிடெட் என பெயர் மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் தான் 21ஆம் நுற்றாண்டில் டாடா குழுமத்தின் ரத்தினங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸாக பரிணமித்தது.
மெல்ல வியாபாரத்தைத் தொடங்கிய டெல்கோ நிறுவனம், ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட நீராவி என்ஜின்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதன் ஒரே வாடிக்கையாளர் ரயில்வே மட்டுமே என்பதால், தங்கள் இஷ்டத்துக்கு காலதாமதமாக பணம் கொடுத்தனர், மனிதாபிமான ரீதியிலான வியாபார ஒழுங்குமுறைகளைக் கூட ரயில்வே நிர்வாகம் கடைப்பிடிக்கவில்லை.
சுமந்த் மூல்காவுகர்
இதற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கவும், தன் டெல்கோ நிறுவனம் ஒரே நிறுவனத்தைச் சார்ந்திருப்பதையும் நிறுத்த விரும்பினார் ஜே ஆர் டி. அப்போது தான் இந்தியாவில் ஒரு நல்ல கூட்டாளியைத் தேடிக்கொண்டிருந்தது டைம்ளர் - பென்ஸ் நிறுவனம்.
ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய முடியாமல் பொட்டிப் படுக்கைகளை எல்லாம் கட்டிவிட்டன. அப்போது தான் டாடா என்ஜினியரிங் அண்ட் லோகோமோட்டிவ் நிறுவனத்தின் அச்சாணி சுமந்த் மூல்காவுகர் அந்நிறுவனத்தில் வந்து சேர்ந்தார்.
டெல்கோ நிறுவனம் ஜாம்ஷெட்பூரில் இருந்த போது, டாடா ஸ்டீல் ஆலையைக் காண வருவோருக்கு எல்லாம், டெல்கோ ஆலையையும் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர். டெல்கோ வியாபாரம் செய்து வருவாய் ஈட்டுவதை விட, சுற்றிக்காட்டியே சம்பாதிக்கலாம் எனவும் அந்நிறுவனத்தை விமர்சித்தவர்கள் உண்டு. இது போன்ற விமர்சனங்கள் டெல்கோவின் பிதாமகர் சுமந்த் மூல்காவுகருக்கு நிச்சயம் பிடித்திருக்காது.
ஆகையினாலோ என்னவோ, டெல்கோ பெரிதாக வளர வேண்டும் என்றால், டாடா இரும்பு ஆலையின் நிழலில் இருந்து வெளியேர வேண்டும் என மகாராஷ்டிராவில் உள்ள அகுர்தி எனகிற இடத்தில் புதிய ஆலையை நிறுவ, டாடா இயக்குநர் குழுவைச் சம்மதிக்க வைத்தார் சுமந்த் மூல்காவுகர். அங்கு தான் டாடா 407 உற்பத்தி செய்யப்பட்டு, இந்திய சந்தையில் சக்கைபோடு போட்டது. ஒருகாலத்தில் இந்திய டிரக் சந்தையில் சுமார் 70% சந்தையைப் பிடித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Tata Mercedes
வெறும் டிரக்குகள் மட்டும் வேலைக்கு ஆகாதென, பயணிகள் கார்களிலும் கால்பதிக்க விரும்பியது டாடா குழுமம். எனவே, டைம்லர் பென்ஸ் நிறுவனத்தின் காரை இறக்குமதி செய்து அப்போதைய வணிக அமைச்சக செயலர் கே பி பால், பாதுகாப்பு அமைச்சர் வி கே கிருஷ்ண மேனன் ஆகியோரை பயன்படுத்துமாரு கூறி பின்னூட்டம் கொடுக்கச் சொன்னார்கள். கார் அற்புதம் என்றார்கள், ஆனால் டாடா குழுமம் இந்தியாவிலேயே காரைத் தயாரிக்க உரிமம் கொடுக்கவில்லை.
பொறுமையை இழந்த டைம்லர் பென்ஸ் டாடா உடனான தன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, சிங்கப்பூரில் தன் கவனத்தைத் திருப்பியது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா… இந்தியா தன் வெளிநாட்டு கரன்சியைக் கொட்டிக் கொடுத்து பல கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது இந்தியா.
டாடா விரும்பிய ஒரு கதவு அடைபட்டாலும், அவர்கள் எதிர்பார்க்காத மற்றொரு கதவை அரசே முன் வந்து திறந்து சிவப்புக் கம்பளம் விரித்தது.
Lakmi
எந்த இந்திய அரசு ஜே ஆர் டியின் செல்லக் குழந்தையான ஏர் இந்தியாவையும், டாடா குழுமம் 1929ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்த நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ் என்கிற காப்பீட்டு நிறுவனத்தையும் அரசுடமையாக்கியதோ, அதே அரசு, அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்ய டாடாவுக்கு அழைப்பு விடுத்தது. 1952ஆம் ஆண்டு, டாடா ஆயில் மில்ஸ் அண்ட் கம்பெனி என்கிற டாம்கோ நிறுவனத்தின் துணை நிறுவனமாக லாக்மே (Lakme) நிறுவனத்தைத் தொடங்கினார். லக்ஷ்மி என்கிற சொல்லை பிரெஞ்சு மொழியில் உச்சரிப்பரிது போல் கூறினால் லாக்மே.
வந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி, அதிலும் கால்பதித்தார் ஜே ஆர் டி. லாக்மே நிறுவனத்தை நடத்தும் பொறுப்பு நவால் டாடாவின் மனைவி சிமோனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் 1996ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் லீவருக்கு விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு டிரென்ட் என்கிற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இன்று வரை இந்தியாவிந் டாப் பிராண்டுகளில் லாக்மேயும் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. லாக்மே ஃபேஷன் வீக் என ஆண்டுக்கு இருமுறை ஃபேஷன் நிகழ்ச்சிகள் எல்லாம் மும்பையில் நடத்தப்பட்டு வருகின்றன. ஜே ஆர் டி டாடா வியாபாரத்தில் பெரிய புலியாக இருந்தாலும், இந்தியாவின் அடிப்படை வாக்கரசியலில் அவரால் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. அவர் எடுத்த அரசியல் ரீதியிலான முடிவுகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அப்படி அவர் எடுத்த முடிவுகள்தான் என்ன?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust