<div class="paragraphs"><p>Uber Travis Kalanick</p></div>

Uber Travis Kalanick

 

Facebook

பிசினஸ்

Uber Travis Kalanick : விரக்தியிலிருந்து வியூகங்கள் வரை - ஊபர் நிறுவனரின் வெற்றி கதை!

Antony Ajay R

ஒவ்வொரு பெரு நிறுவனமும் பொதுமக்களிடம் அறியப்பட வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. நிறுவனங்களை மட்டுமல்ல... அதன் நிறுவனர்கள், சி.இ.ஓ-கள் என அனைவரையும் கவனித்து உத்வேகம் பெறுகின்றனர் இக்காலத்து இளைஞர்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் சமீபத்தில் பல சர்ச்சைகளில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் எனப் பல தொழிலதிபர்கள் தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.


ஊபர் நிறுவனர்

அவர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார் ஊபர் நிறுவனர்களில் ஒருவரான ட்ராவிஸ் கலானிக் (Travis Kalanick). இவரது கதையில் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் தனித்து நிற்கிறார். கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காத ட்ராவிஸ் நிறுவனத்தை நிலைநிறுத்த எதையும் செய்யக்கூடியவர் என்பதற்கு அவர் செய்த “க்ரேபால்” சம்பவத்தை உதாரணமாகக் கொள்ளலாம். ஆபரேஷன் க்ரேபால் குறித்து விரிவாகக் காணும் முன் ட்ராவிஸ் கலானிக் என்பவர் யார் என்பதையும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

1976-ம் ஆண்டு கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார் ட்ராவிஸ். 1994-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். படிப்பு முடிந்து பட்டம் வாங்குவதற்கு ஆறு மாத காலத்துக்கு முன் கல்லூரியை விட்டு விலகினார்!

Travis Kalanick with SCOUR Team

படித்துக்கொண்டிருக்கும்போதே நண்பர்களுடன் இணைந்து ஸ்கவுர் (S-C-O-U-R) எனும் தகவல் மற்றும் கோப்புகளைப் பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினார். ஸ்கவுர் நல்ல வரவேற்பைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கும்போதே அதனை மற்றொரு நிறுவனத்திடம் விற்றுவிட்டார். அதைத் தொடர்ந்து ரெட் ஸ்வூஷ் எனும் தனது இரண்டாவது நிறுவனத்தைத் தொடங்கினார். அதுவும் நல்ல வரவேற்பைப் பெற, அகாமி எனும் நிறுவனத்திடம் ரெட் ஸ்வூஷை விற்றார்.

செயல்படு… செயல்படு… வெற்றி காண்

தான் உருவாக்கிய இரு நிறுவனங்களையும் விற்றதனால் ட்ராவிஸ் “விற்பனையாளர்” என்று கேலி செய்யப்படுவதுண்டு. அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து எதையேனும் செய்துகொண்டே இருந்தார் ட்ராவிஸ். அப்படியொரு பரபரப்பான நாளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக டாக்சிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரின் எதிரில் சென்றுகொண்டிருந்த டாக்சிகள் அவற்றின் சேவையாளருக்காக விரைந்து கொண்டிருந்தன. 'அருகில் செல்லும் ஏதேனும் ஒரு கார் நம்மை ட்ராப் செய்யக் கூடாதா' என அவர் சிந்தித்தார். அப்போது, தான் இருக்கும் இடத்திலிருந்து சில பட்டன்களை அழுத்துவதன் மூலம் டாக்சியை வரவழைக்க வேண்டும் என்கிற ஐடியா அவர் மனத்தில் உதித்தது.

டிஜிட்டல் உலகில் ஐடியாக்கள்தாம் மூலதனம். நாம் பயன்படுத்தும் பல சாதனங்கள், சேவைகள் ஒரு சிறிய ஐடியாவின் நீட்சிதான். அப்படித்தான் தன் ஐடியாவையும் புதிய நிறுவனமாக உருவாக்கினார் ட்ராவிஸ்.


2009-ம் ஆண்டு ட்ராவிஸ் மற்றும் கெரெட் கேம்ப் இணைந்து ஊபர் சேவையை நிறுவினர். ஊபர் நிறுவப்பட்டது முதல் பல நிறுவனங்கள் அதனை 'காப்பி பேஸ்ட்' செய்யத் தொடங்கின. ஆனால், அவற்றையெல்லாம் முறியடித்து தரமான சேவையை வழங்கியது ஊபர். இதற்கு அடிப்படைக் காரணம் அதன் தொழில்நுட்ப பலம்.

Companies Started by Travis Kalanick

சக்சஸ் சக்சஸ் சக்சஸ்


கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காத ட்ராவிஸ் உருவாக்கிய மூன்றாவது நிறுவனமும் சக்சஸ். இந்த முறை ட்ராவிஸ் ஊபரை விற்பது குறித்து எந்த முன்முடிவும் கொண்டிருக்கவில்லை. ஆனால், அதோடு கதை முடியவில்லை. ட்ராவிஸின் டைம் லைனில் மிகப்பெரிய பிரச்னை ஒன்று இங்குதான் காத்திருந்தது. சட்ட ரீதியான பிரச்னைகளை ஊபர் நிறுவனம் சந்திக்க வேண்டி வந்தது.

டாக்சி தொழில் அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு நிறுவனம் டாக்சி லைசன்ஸ் வாங்கப் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருந்தது. நியூயார்க்கில் ஒரு டாக்ஸி லைசன்ஸின் விலை 13 லட்சம் டாலர் வரை இருந்தது. இதுபோல எல்லா மாநகராட்சியிலும் லைசன்ஸ் வாங்க வேண்டிய சூழல். அதோடு, டாக்சிக்கான கட்டணங்களை அரசே நிர்ணயிக்கும் சூழல் நிலவியது.

ஊபர் டாக்சிகள் மீதான புகார்கள் மற்றும் சிக்கல்கள் படிப்படியாக வளர்ந்தன. ஆனாலும், மாநகராட்சி உரிமம் பெறாமலே ஊபர் டாக்சிகள் இயங்கிக்கொண்டுதான் இருந்தன. 'அனுமதி இல்லாமல் டாக்ஸி ஓட்டுவதால் உடனே நீங்கள் தொழிலை நிறுத்திவிட்டு முறைப்படி உரிமம் பெற வேண்டும்' என்று சான் பிரான்ஸிஸ்கோ நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் வரும்வரை எல்லாமே சமாளிக்கக்கூடிய பிரச்னையாகத்தான் தெரிந்தது!

அப்போது ஊபர் ஒரு வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனம். ஏராளமான பணம் முதலீடு செய்து தொடங்கப்பட்டாகிவிட்டது. சட்டென நிறுத்திவிடவும் முடியாது. சொந்தமாக ஒரு கார்கூட இல்லாத டாக்சி கம்பெனி என்பது இதுவரை உலகம் பார்க்காத புதிய பிசினஸ் மாடல். அதனால் அதற்கு எந்த மாநகராட்சியும் உரிமம் வழங்கவில்லை.

Travis Kalanick

விரக்தி அல்ல வியூகம்

கோர்ட் நோட்டீஸை கிழித்துப்போட்டார் ட்ராவிஸ். விரக்தியில் அல்ல... வியூகத்தால்! விதிகளுக்குக் கட்டுப்பட்டு நின்றால் ஒன்றுமே செய்ய முடியாது என்று உணர்ந்தார். விதிகளை உடைத்து புதிய திட்டம் ஒன்றைத் தீட்டினார் ட்ராவிஸ்.

பல நாடுகளின் முக்கிய நகரங்களில் ஊபர் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களுக்கு டாக்சி பிடிக்கும் சிரமம் குறைந்தது ஊபருக்கு பழகினர். மறுபக்கம் ஊபர் மீது வழக்குகள் குவிந்தன. அதன் நிறுவனர்கள் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான் என்றே கருதினர். ஆனால், எல்லா நீதிமன்றங்களும் ஊபர் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்தன!

“ஊபர் ஒரு டாக்சி நிறுவனமல்ல, ஒரு மென்பொருள் நிறுவனம்தான். நாங்கள் 'ஆப்' மட்டுமே வைத்திருக்கிறோம் மக்கள் அதனை உபயோகிக்கிறார்கள்” என ஊபர் நீதிமன்றங்களில் விளக்கம் அளித்தது.

ஒரு நிறுவனத்தை உருவாக்குவதைவிட முக்கியம் அதனைத் தக்க வைப்பது. ஊபரை தக்க வைப்பதில் வெற்றியடைந்துள்ள ட்ராவிஸ், அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல உறுதியாக இருந்தார்.

ஊபர் நிறுவனத்தின்மேல் வழக்குப் போட முடியாது. ஆனால், டாக்சி உரிமம் இல்லாமல் பயணிகளை ஏற்றும் ஊபர் ஓட்டுநர்களின் மீது வழக்கு தொடுக்கலாம் என முடிவு செய்தன மாநகராட்சி நிர்வாகங்கள். அதாவது, மாநகராட்சி அதிகாரிகள், காவலதிகாரிகள், மேயர்கள், கவுன்சிலர்கள் ஊபர் காரை வாடகைக்கு எடுத்து அதன் ஓட்டுநரைக் கைது செய்வார்கள்.

இது ட்ராவிஸ் சற்றும் எதிர்பாராத ஆபத்தாக இருந்தது. இதனால் ஊபர் தன் ஓட்டுநர்களை இழக்கும், அவர்கள்தானே நிறுவனத்தின் அடித்தளம்!


முடிவல்ல அரம்பம்

ஊபரின் கதை இத்துடன் முடிந்தது என அதிகாரிகள் முடிவு செய்தனர். உண்மையில் அவர்கள் அப்படி நம்பினர். ஆனால், நடந்தது வேறு!

தன் ஓட்டுநர்களைக் காக்க ஊபர் புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியது. அதுதான் ஆப்ரேஷன் க்ரேபால்!

இதற்காக ட்ராவிஸ் முன்னாள் சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ என உளவுத்துறை அதிகாரிகளைப் பணியில் நியமித்தார். மாநகராட்சி அதிகாரிகள், காவலதிகாரிகள், மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களின் போன் நம்பர்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

Uber

டேட்டா... அதுதான் டிஜிட்டல் வியாபாரத்தின் மூலதனம் என அறிவோம். இங்கு டேட்டாவை வேறு விதத்தில் பயன்படுத்தினார் ட்ராவிஸ். க்ரேபால் எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டது. ஜிபிஎஸ், கிரெடிட் கார்டு தகவல், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பிற தரவுப் புள்ளிகளைப் பயன்படுத்தி, ஊபரில் கார் புக் செய்பவர்கள் நகராட்சியுடன் தொடர்புடையவர்களா எனக் கண்டறியப்பட்டது. ஆம் எனில் அவர்களுக்கு கார் இல்லை எனக் காட்டியது. கார் புக் செய்யும் அதிகாரிகளில் சிலர் ஊபர் ஓய்ந்தது என நம்பினர். சிலர் காரணம் தெரியாமல் விழித்தனர். அமெரிக்காவின் பல மாவட்டங்களிலும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா, இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளிலும் க்ரேபால் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

என்ன செய்யப் போகிறார்?

எத்தனை அதிகாரிகளை எப்படி ஏமாற்ற முடியும் எனச் சந்தேகம் எழலாம். ஆனால், இதுதான் நடந்தது. நான்கு ஆண்டுகள் தொடர்ந்து க்ரேபால் வழக்கத்திலிருந்தது. 2017-ம் ஆண்டு அமெரிக்க பத்திரிக்கை ஒன்று அதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. அதற்குள் ஊபர் உலக அளவில் அதன் சந்தையை விரிவுபடுத்தியிருந்தது. வீடுகளைச் சுத்தம் செய்வது, உணவு டெலிவரி என அதன் சேவைகளும் விரிவடைந்தன. இருப்பினும், ஊபரில் அந்த நேரத்தில் பல சிக்கல்கள் நிலவியதாலும், பல பிரச்னைகளுக்கு ட்ராவிஸ் காரணமாக இருந்ததாலும் அவர் தனது சி.இ.ஓ பொறுப்பை விட்டு விலக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.

2019-ம் ஆண்டு கடைசியாக ஊபரில் தனக்கு இருந்த நான்கு சதவிகித பங்குகளை விற்றுவிட்டு முழுவதுமாக நிறுவனத்திலிருந்து வெளியேறியிருக்கிறார் ட்ராவிஸ். அடுத்து... என்ன செய்யக் காத்திருக்கிறாரோ!

.

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?