திருபாய் அம்பானி

 

Twitter

பிசினஸ்

Jio அம்பானி கதை : திருபாய் நவீன இந்திய பொருளாதாரத்தின் குருபாய் | பகுதி 1

பத்தாம் வகுப்பைக் கூட அரியர் வைத்து தேர்ச்சி பெற்ற, அத்தனை சரளமாக ஆங்கிலம் பேச வராத, ஒருவர் தான் ஆசியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனத்தை அஸ்திவாரம் போட்டு கட்டியெழுப்பினார். அவர் பெயர் திருபாய் அம்பானி.

Gautham

யுனிகார்ன் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? $1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு யுனிகார்ன் என்று கூறுவார்கள். எல்லா நிறுவனங்களும் ஒரு நாள் ஒரு சிறு புள்ளியில் இருந்து தொடங்கப்பட்டு, பெருங்கடலைப் போன்ற சாம்ராஜ்ஜியமாக உருவெடுப்பவைதான். ஆக, எல்லா நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் ஆகிவிடுமா?

இல்லவே இல்லை.

அப்படி என்றால், ஒரு சாதாரண நிறுவனத்துக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குமான வித்தியாசம் என்ன?

அம்பானி

அவர் பெயர் திருபாய் அம்பானி

தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும், உலக அளவில் பிரபலமடைய வேண்டும், எல்லோருக்கும் தெரிந்த பெயராக இருக்க வேண்டும், அதிக பயனர்கள் இருக்க வேண்டும்.... இதை எல்லாம் தாண்டி, ஒரு சகாப்தத்தில் பார்க்க வேண்டிய வளர்ச்சியை ஒரு தசாப்தத்துக்குள் காட்டும் நிறுவனங்களே அக்மார்க் ஸ்டார்ட் அப்.

வளர்ச்சி என்பது வெறுமனே பயனர்கள், வாடிக்கையாளர்களின் எண்களில் மட்டுமின்றி, நிதி நிலையிலும் எதிரொலிக்க வேண்டும். நாளுக்கு நாள் நிறுவனம் வளர்ந்தது என சொல்லக் கூட நேரமில்லாமல், ஒவ்வொரு நொடியையும் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் நிறுவனமாக இருக்க வேண்டும்.

இன்று இந்தியாவில், அப்படி சில நிறுவனங்கள் வளர்ந்திருக்கின்றன, பல நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டில் அதற்குத் தோதான தொழில்நுட்பங்களும் வியாபாரத் தேவைகளும் சந்தையில் இருக்கின்றன.

ஆனால் இவை எல்லாம் எதுவும் இல்லாத 1960களிலேயே அப்படி ஒரு பகாசுர வளர்ச்சியைக் ஒரு நிறுவனம் இந்தியாவில் காட்டியது.

அப்படி காட்டிய நிறுவனத்தை, டாடாக்களோ, பிர்லா குழுமமோ, வாடியா குடும்பமோ, கோத்ரேஜ் பரம்பரையோ கட்டமைக்கவில்லை. பத்தாம் வகுப்பைக் கூட அரியர் வைத்து தேர்ச்சி பெற்ற, அத்தனை சரளமாக ஆங்கிலம் பேச வராத, சராசரி இந்தியர்களைப் போல, கருத்த, கொஞ்சம் தொந்தியும் தொப்பையும் கொண்ட ஒருவர் தான் அஸ்திவாரம் போட்டு கட்டியெழுப்பினார். அவர் பெயர் திருபாய் அம்பானி. அவரின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மனித எண்ணங்களை விட வேகமாக வளர்ந்தது.

அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எப்படி உருவானது ?

50 - 60 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் லட்சாதிபதி ஆவதற்குள்ளேயே ஆயுசு முடிந்துவிடும். ஒருவர் பணக்காரர் ஆக வேண்டுமானால் உற்பத்தித் துறை தான் ஒரே வழி. இன்று போல் சேவைத் துறை, தகவல் தொழில்நுட்பம் எல்லாம் என்னவென்ற தெரியாத காலமது. ஆலைக்கு நிலம் வாங்கி, அரசு அதிகாரிகளை எல்லாம் சமாளித்து, எந்திரங்களை நிறுவி, நல்ல நாள் பார்த்து கணபதி ஹோமத்தோடு ஆலையின் உற்பத்தியைத் தொடங்கி, பொருளை சந்தைப்படுத்தி, விற்று, லாபம் பார்த்து.... எப்பா சொல்வதற்கே சோர்வாக இருக்கிறது. அத்தனை விஷயங்களையும் செய்தால் தான், அவர் பணக்காரர் ஆக குறைந்தபட்ச வாய்ப்பு கிடைக்கும்.

திருபாய் அம்பானி, ரிலையன்ச் மூலம் அதைச் செய்தார், ஆனால், இதை எல்லாம் தாண்டி சாமானிய இந்தியர்கள் மத்தியிலும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது எப்படி?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எப்படி உருவானது? அது முதன் முதலில் செய்த வந்த தொழில் என்ன? பிறகு கச்சா எண்ணெய் வியாபாரத்துக்குள் எப்படி நுழைந்தார்கள்? நாளடைவில் ரிலையன்ஸ் எப்படி இந்திய கச்சா எண்ணெய் சுத்தீகரிப்புத் தொழிலிலின் ராஜாவானது? வாரிசுச் சண்டையில் நடந்தது என்ன? இப்போது கச்சா எண்ணையை மெல்ல கைவட்டு சில்லறை வணிகம் தொலைத்தொடர்பு சேவைகளில் எப்படி களமிறங்கியது என்பதையெல்லாம் இந்த தொடரில் பார்க்கவிருக்கிறோம்.

Reliance

கணிதத்தில் சிறந்து விளங்குபவர்கள் தான், வாழ்வில் பல உச்சங்களைத் தொடுவார்கள் என்கிற பொதுக்கருத்துக்கு மாறாக, பிதாகரஸ் தேற்றம் புரிந்துகொள்ள முடியாமல் திணறிய திருபாய் அம்பானி பின்னாளில் பாலியஸ்டர் ராஜாவாக பல்லாயிரம் கோடி ரூபாயை சம்பாதித்தார்

ஏழைப் பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தார் திருபாய் அம்பானி

ரிலையன்ஸ் என்கிற நிறுவனத்தை குறித்து பார்க்கும்போது அந்நிறுவனத்தின் பிதாமகன் குறித்தும் அவரின் தளபதிகளைக் குறித்தும் பேசாமல் ரிலையன்சஸின் வரலாற்றை நிறைவு செய்ய முடியாது. எனவே திருபாய், முகேஷ்பாய், அனில்பாயின் கதையும் இத்தொடரில் கூடவே பயணிக்கும்.

ஒரு காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு, அந்நிறுவனத்தை கையகப்படுத்திக் கொள்ள விரும்பிய பலருக்கும் இன்று சிம்ம சொப்பனமாக 'இப்ப வந்து மோது டா... கிட்ட வந்து பாருடா' என மீசையை முறுக்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணகர்த்தாவாக இருந்த, திருபாய் அம்பானியில் இருந்து தொடங்குவோம்.

குஜராத்தில் சௌராஷ்டிரா மாகாணத்தில் சோர்வாட் என்கிற கிராமத்தில் ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தார் திருபாய் அம்பானி. வாத்தியார் மகன் படிப்பில் படுசுட்டி, கணக்கில் நூற்றுக்கு நூறு... என்கிற கிளிசேக்களுக்கு இடம் கொடுக்காத திருபாய், வகுப்பில் நடுபெஞ்சு மாணவர் தான். பின்னாளில் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்த திருபாய் அம்பானிக்கு கணக்கோடு பிணக்காகத் தான் இருந்தது.

கணிதத்தில் சிறந்து விளங்குபவர்கள் தான், வாழ்வில் பல உச்சங்களைத் தொடுவார்கள் என்கிற பொதுக்கருத்துக்கு மாறாக, பிதாகரஸ் தேற்றம் புரிந்துகொள்ள முடியாமல் திணறிய திருபாய் அம்பானி பின்னாளில் பாலியஸ்டர் ராஜாவாக பல்லாயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து, மெத்தப் படித்த கணிதப் புலிகளை வைத்து தன் நிறுவனத்துக்கு வரி கணக்கிட வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்தார்.

திருபாய் அம்பானி

ஏமன் நாட்டுக்கு வேலைக்கு போக ஒரு வாய்ப்பு கிடைத்தது

படிப்பு ஏறவில்லை, பெரிய வேலைவாய்ப்பு எதும் இல்லை, இனி வியாபாரம் செய்யலாம் என எல்லா முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு நல்ல நாளில் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தொழில் தொடங்கியவரல்ல திருபாய் அம்பானி.

குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறது அவ்வப்போது தன்னால் என்ன முடியுமோ அதை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற சூழலில், சனி ஞாயிறுகளில் ஒரு சின்ன கடை போட்டு வியாபாரம் பார்த்தாலென்னவென இயல்பாக வியாபாரம் செய்தவர் திருபாய் அம்பானி.

அம்பானியின் கிராமத்திற்கு அருகிலேயே 'மவுண்ட் கிர்னார்' என ஒரு சுற்றுலாத்தலம் இருந்தது. அங்கு மிகப் பழமையான கோயில்கள் எல்லாம் இருந்தன. வார இறுதிநாட்களில் அதைச் சுற்றிப் பார்க்க வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

பகுபதம் பகாப்பதத்தில் தடுமாறிய திருபாய் அம்பானிக்கு, இங்கு பலகாரங்களை போட்டால் நாலணா எட்டணா பார்க்கலாம் என்பது புரிந்திருந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கான விதை அப்போதே விழுந்துவிட்டது.

ஒரு வியாபாரத்தைத் திறம்பட நடத்த வெறுமனே வியாபார அறிவு மட்டும் போதாது. பிரச்சனைகளை போலத் தோற்றமளிக்கும் விஷயங்களை அசால்டாக எதிர்கொள்ளும் தைரியம் அவசியம், அதுவும் திருபாய் அம்பானிக்கு மிக இளம் வயதிலேயே இருந்தது.

தவறு செய்யாத தன் நண்பர் ஒருவரை காவல்துறை கைது செய்தபோது காவல் நிலையத்திற்கே சென்று காவல்துறை உயர் அதிகாரிகளோடு பேசி, போராடி தன் நண்பரை மீட்டு வந்த நிகழ்வே அதற்கு சாட்சி.

அரை டிராயர் போட்டு, நாளனா எட்டனா பார்த்துக் கொண்டிருந்த திருபாய் அம்பானி, 10ஆம் வகுப்பில் வைத்த அரியரை ஒருவழியாக முட்டிமோதி தேறிய பின், குடும்ப சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது.

சரி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றலாமென முடிவெடுத்த திருபாய் அம்பானிக்கு அதிர்ஷ்ட தேவதை சிவப்பு கம்பளம் விதிக்கவில்லை. உள்ளூர் முதல் பம்பாய் வரை தேடியும் ஜோலி கிடைக்கவில்லை.

கடைசியாக தன் 17வது வயதில் பெற்றோர், உற்றார் உறவினர், சோறு, ஊரு... என எல்லாவற்றையும் விட்டு ஏமன் நாட்டுக்கு வேலைக்கு போக ஒரு வாய்ப்பு கிடைத்தது. 'சின்னப் பையனா இருக்கானேப்பா சமாளிச்சுக்குவானா? என சந்தேகப்பட்டவர்களுக்கு, புன்னகை பூக்க ஓகே சொல்லி பயணப்பட்டார் திருபாய் அம்பானி. 20ஆம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த தொழிலதிபர் ஒருவருக்கு எம்பிஏ வகுப்பெடுக்க காலம் ஏமனில் காத்திருந்தது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?