பத்தாயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கும் செல்ஃபோன்களில் சின்னப் பழுது என்றாலும், வாரண்டி அட்டையுடன் அலையும் சில நாள்களைப் பற்றி அவ்வளவு கதை எழுதலாம்! அந்த அளவுக்கு வேலை வைக்கவும் செய்வார்கள், செல்ஃபோன் நிறுவனத்தினர்.
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை எந்த நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு இல்லை எனச் சொல்லாமல் சொல்கின்றன, நுகர்வோர் விவகார வழக்குகள். இன்னொரு புறம், அரசுத் தரப்பால் அமைக்கப்படும் தொழில் ஒழுங்குமுறை அமைப்புகளின் அரிதான தீர்ப்புகளும் உத்தரவுகளும்கூட இந்த விவகாரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும். அப்படியான ஒரு தீர்ப்பைத் தந்திருக்கிறது, ஆஸ்திரேலியா தொழில் போட்டி ஒழுங்கமைப்பு, நுகர்வோர் ஆணையம்.
ஒரு காலத்தில் செல்ஃபோன் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி வகை செல்பேசிகளைப் பற்றிய விளம்பரம்தான், விவகாரமே!
தண்ணீருக்குள் மூழ்கினாலும் சாம்சங் கேலக்சி வகை செல்பேசிகள் வேலைசெய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் கூறப்பட்டது. அது தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளதால், சாம்சங் நிறுவனத்துக்கு 96.5 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் ஆஸ்திரேலியப் பிரிவானது, வாடிக்கையாளர்களிடம், தவறான விளம்பரத்தின் மூலமாக, கேலக்சி வகை செல்பேசிகளுக்கு தண்ணீர்ச்சிக்கல் தடுப்புத் தன்மை இருக்கிறது என்கிற எண்ணத்தைப் பரப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தொழில்போட்டி ஒழுங்கமைப்பு, நுகர்வோர் ஆணையமானது, இந்த நிறுவனத்தின் மீதான விவகாரத்தை 2019ஆம் ஆண்டில் பதிவுசெய்துகொண்டது. அப்போது வெளியிடப்பட்ட சாம்சங் விளம்பரங்களில் எல்லா வகை தண்ணீருக்கும் ஏற்றவை கேலக்சி செல்ஃபோன்கள் என்று குறிப்பிடப்பட்டது; அது பொய்யானது மட்டுமின்றி தவறாக வழிகாட்டுவதுமாகும் என்பது குற்றச்சாட்டு.
சாம்சங் நிறுவனத்தின் சார்பில் 2016 மார்ச் முதல் 2018 அக்டோபர் மாதம்வரை வெளியிடப்பட்ட விளம்பரங்களில்தான், உறுதிமொழி ஒன்று கூறப்பட்டது; அதாவது, குளங்களிலோ கடலிலோ எந்தவகைத் தண்ணீரில் மூழ்கினாலும் கேலக்சி வகை செல்பேசிகள் பழுதடையாமல் இயங்கும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இப்படிக் குறிப்பிட்டதை வைத்துத்தான் தொழில் போட்டி ஒழுங்கமைப்பு ஆணையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. அந்த விளம்பரங்களில் உறுதியளிக்கப்பட்டபடி, கேலக்சி செல்பேசிகள் தண்ணீருக்குள் மூழ்கியநிலையில் வேலைசெய்யவில்லை என்றும் பல செல்பேசிகள் நீருக்குள் விழுந்தபின்னர் சுத்தமாக வேலையே செய்யவில்லை என்றும் புகார்களில் கூறப்பட்டது.
தீர்ப்பை அளித்த ஆஸ்திரேலிய தொழில்போட்டி ஒழுங்கமைப்பு, நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கினா காஸ் கோட்டிலிப் எழுதிய குறிப்பு ஒன்றில், சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட விளம்பரமானது, அந்தக் காலகட்டத்தில் கேலக்சி வகை செல்ஃபோன்கள் மட்டும் கூடுதலாக விற்பனையாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் வாடிக்கையாளர்களைத் திசைதிருப்பும்படியான தவறான அந்த விளம்பரத்துக்கு ஏராளமானவர்கள் ஏமாந்துபோனார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, ஐரோப்பிய, அமெரிக்க நீதிமன்றங்களில், தவறுசெய்யும் பெருநிறுவனங்களுக்கு எதிரான அபராதத் தீர்ப்புகள் அவ்வப்போது நுகர்வோரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவதாக இருக்கும். இந்த முறை அந்த வாய்ப்பை ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் அதைச் செய்து பெயர் வாங்கியிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust