அம்பானி, அதானி இருவரும் ஆசியாவின் முதல் வரிசை பில்லியனர்களில் முக்கியமானவர்கள். அம்பானி தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் தன் சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்தார் என்றால் அதானி போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறையில் அதை நிறுவியவர். தற்போது இருவரும் மற்றவரது துறைகளிலும் கால் வைக்கத் துவங்கியிருக்கின்றனர்.
Modi Ambani
குஜராத்தைச் சேர்ந்த இரண்டு குழுமங்களும் மோடி, பாஜக-விற்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களது வணிக மோதல் அரசியல் ரீதியாகவும் மோதலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவர்களது கடைசி மோதல் சவுதி அராம்கோ நிறுவனத்தோடு நடந்திருக்கிறது. அதானி குழுமம் சவுதி அராம்கோவின் பங்குகளை வாங்குவது குறித்து யோசித்து வருகிறது. இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அம்பானியின் ரிலையின்ஸ் நிறுவனத்திற்கும் அராம்கோ நிறுவனத்திற்கும் 2 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அராம்கோவில் 25 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை ரிலையன்ஸ் வாங்குவதாகவும் அதற்கு பதில் அதனுடைய பெட்ரோல், வேதிப்பொருட்களின் உற்பத்தியில் 20% அராம்கோவிற்கு கொடுக்க வேண்டும். தற்போது இந்தப் பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டிருக்கிறது.
Saudi Aramco
உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் அராம்கோ, அம்பானியின் ரிலையன்ஸோடு இணைவது பொருத்தமானதுதான். ஏனெனில் ரிலையன்ஸ் நிறுவனம்தான் உலகிலேயே மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை குஜராத்தின் ஜாம்நகரில் வைத்திருக்கிறது. மேலும் அந்நிறுவனம் பாலிமர்ஸ், பாலியஸ்டர், ஃபைபர் இழை தயாரிப்பதிலும் முன்னணி வகிக்கிறது. அதானியும் பல நிறுவனங்களின் கூட்டணியோடு தனது துறைமுகமான குஜராத்தில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்தில் 4 பில்லியன் டாலரில் பெட்ரோகெமிக்கல்ஸ் ஆலையை நிறுவ இருக்கிறது. இது கோவிட் பொது முடக்கத்தால் தள்ளிப் போகிறது.
Coal
அதானியின் முதன்மை இலக்கு நிலக்கரிதான். இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் நிலக்கரியை வெட்டி எடுத்து மின்சாரத்தை அவர் தயாரிக்கிறார். எதிர்ப்புகள் இருந்தாலும் ஆஸ்திரேலியாவிலும் அவர் நிலக்கரியை எடுக்க முயல்கிறார். எனினும் நிலக்கரிக்கு எதிர்காலமில்லை என்பதால் அவர் சூரிய மின்சாரத்தை தயாரிப்பதிலும் கவனம் செலுத்துகிறார். அதே போன்று பிளாஸ்டிக் மறுசுழற்சி தயாரிப்பிலும்.
பெட்ரோ கெமிக்கல் துறையில் அதானி முதலீடு போட முடிவு செய்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவின் பாலிஸ்டர் இளவரசர் என்று அழைக்கப்பட்ட காலஞ்சென்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டி கொடுக்க முயல்கிறார்.
2018 இல் சவுதி அராம்கோவோடு அதானி குழுமமும் இந்திய அரசின் எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்களோடு இணைந்து 44 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்க முயன்றன. மகாராஷ்டிராவில் அந்த ஆலை அமைவதற்கு வந்த எதிர்ப்பின் பொருட்டு வேறு இடத்தை தேடி வருகிறார்கள். இப்படியாக அம்பானி, அதானி எனும் இரண்டு பில்லியனர்களும் தொழிற்துறையில் கடும்போட்டியை சந்தித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பங்குதாரர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி தனது வாழ்க்கையின் சவாலான முயற்சியில் ஈடுபடுவதாக கூறினார். அதானியோ 2030 இல் உலகின் மிகப்பெரும் புதுப்பித்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக இருக்க விரும்புகிறார். ஜாம்நகரில் சோலார் பேனர்கள், பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன், எரிபொருள் பாட்டரிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நான்கு மிகப்பெரும் தொழிற்சாலைகளுக்கான திட்டத்தை அவர் கூறியிருக்கிறார். அதே போன்று அம்பானியும் ரிலையன்ஸை காலநிலை மாற்றத்திற்கேற்ற வேறு துறையில் கால்பதிக்கும் என்று கூறியிருக்கிறார். இவர்களது இருவரது விருப்பத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோ மாநாட்டில் 2026 க்குள் சுற்றுச்சூழலுக்கு மாசு படுத்தும் எரிபொருளில் இருந்து உற்பத்தியை குறைத்துக் கொள்வோம் என்று கூறினார்.
இப்படி இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மற்ற நிறுவனங்களை அகற்றிவிட்டு இந்தியாவின் செல்வக்குவிப்பில் ஈடுபடுகின்றன. இத்தகைய பொருளாதார ஏகபோகத்தை மோடி அரசாங்கமும் ஊக்குவிக்கிறது. இதை மோடியின் ஆலோசகராக 2018 வரை பணியாற்றிய அரவிந்த் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்.
எனவே இரண்டு பெரும் வணிகக் குழுமங்களும் தங்கள் செயல்பாடுகளுக்கு அருகில் உள்ள சிறிய மற்றும் பலவீனமான நிறுவனங்களை விழுங்குவதன் மூலம் பொருளாதாரத்தில் போட்டியின் தீவிரத்தைக் குறைக்கின்றன. அதே நேரம் இரண்டு குழுமங்களும் அவர்களுக்கிடையிலும் கடுமையாகப் போட்டியிடுகிறார்கள்.
Ambani and Adani
இந்தியா மக்களின் டேட்டா அல்லது தரவுகளின் தொகுப்பை விழுங்கும் வகையில் அம்பானி தொலைத்தொடர்புத் துறையில் ஜியோ மூலம் ஆக்கிரமித்து விட்டார். மாறாக அதானி பசுமை ஆற்றலால் செயல்படும் சர்வர் சேமிப்பகங்களை வழங்குவதன் மூலம் அதே டேட்டாவை விழுங்க இன்னொரு முனையில் வருகிறார்.
அமேசான் நிறுவனத்தோடு கடும் போட்டியில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் மளிகைப்பொருள் சில்லறை விநியோகத்தை கட்டுப்படுத்த விரும்புகிறது. அதானியோ இந்திய அரசின் உணவுக் கழகத்திற்கான பிரம்மாண்டமான தானியக் கிடங்குகளையும், நாட்டின் நம்பர் 1 சமையல் எண்ணெய் பிராண்டையும் கையில் வைத்திருக்கிறார்.
கடந்த ஐந்தாண்டுகளாக அதானி குழுமம் சர்வதேச நிதிச் சந்தையில் மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிகமான கடன்களை பெற்று அதீத சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. அம்பானியும் தனது நிறுவனத்திற்கான அன்னிய நிதி மூலதனத்தை கவருவதோடு ஒரு கோட்டை போன்று தனது ரிலையன்ஸை மாற்றியிருக்கிறார்.
59 வயதான அதானி, பிரெஞ்சு நிறுவனம் ஒன்றோடு இணைந்து சமையல் வாயுவை வீடுகளுக்கு விநியோகிக்கும் வலைப்பின்னலை உருவாக்க விரும்புகிறார். 64 வயது அம்பானியோ இத்தகைய வெளியே இருந்து வரும் எரிசக்தியை விட வீடுகளும், பண்ணைகளும், தொழிற்சாலைகளும் தாமே தமது மின்சாரத்தை எதிர்காலத்தில் உருவாக்க ஏற்பாடு செய்வோம் என்று கூறுகிறார்.
சரி, இப்படி இரண்டு குழுமங்களும் தங்களது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த அரசியல் ரீதியான கொள்கை ரீதியான அழுத்தங்களை அரசுக்கு கொடுப்பார்களா? நிச்சயம் மோடி அரசுக்கு இரண்டு குழுமங்களும் வேண்டும் என்றாலும் போட்டி உறுதி. இறுதியில் அதானியா, அம்பானியா யார் வெல்வார்கள்? பொறுத்திருந்து பாருங்கள்!