இன்றைய உலகில் வியாபாரம் அதிவேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தைத் தொடங்கிய நபர், கடைசி வரை அந்நிறுவனத்தை நடத்தி, தன் குழந்தைகளிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும் காலம் மெல்ல மலை ஏறிக் கொண்டிருக்கின்றன.
இந்த கலாச்சாரம் இந்தியாவிலும் எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஃப்ளிப்கார்டை நிறுவிய முக்கிய நிறுவனர்கள் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினர். வால்மார்ட் பல பில்லியன் டாலர் கொடுத்து நிறுவனத்தைக் கையகப்படுத்தியதை நினைவுக்கூரலாம்.
சரி டெக்னாலஜி உலகில், எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கியதை விடப் பெரிய டீல்கள் நடந்துள்ளனவா? பில்லியன் கணக்கில் பணம் புரண்ட சில முக்கிய டெக்னாலஜி துறை டீல்கள் இதோ
கடந்த ஜனவரி 2022-ல், ஆக்டிவிஷன் பிளிசார்ட் என்கிற வீடியோ கேம் நிறுவனத்தை 67 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியது உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட். இதுதான் இன்றுவரை டெக்னாலஜி உலகில் நடந்த மிகப்பெரிய டீல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆக்டிவிஷன் பிளிசார்ட் நிறுவனம் தான் கால் ஆஃப் டியூட்டி, வார்கிராஃப்ட் போன்ற பல பிரபல வீடியோ கேம்களை வடிவமைத்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய கணினி தயாரிப்பாளர்களில் ஒன்றான டெல் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு நெட்வொர்க் சேமிப்பு வியாபாரத்தில் இருந்த இ எம் சி என்கிற நிறுவனத்தை, சுமார் 67 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. அதன் பிறகு தான் சேமிப்பு அமைப்புகள் (Storage System) விற்பனையில் டெல் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. 2015 காலகட்டத்தில் இது தான் உலகின் மிகப்பெரிய டெக் துறை டீலாக இருந்தது.
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்க சுமார் 44 பில்லியன் டாலர் செலவிடுகிறார். இது டெக் உலகின் மூன்றாவது பெரிய டீலாக இருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் திட்டத்தை ஆமோதித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு, அவாகோ டெக்னாலஜீஸ் என்கிற நிறுவனம், தன் போட்டியாளராக இருந்த ப்ராட்காம் நிறுவனத்தை 37 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.
பிரபல சிப் உற்பத்தியாளரான ஏ எம் டி, தன் போட்டியாளராக இருந்த சிலினிக்ஸ் நிறுவனத்தை அக்டோபர் 2020-ல் 35 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.
கடந்த ஜூலை 2019-ல், உலகின் முன்னணி கணினி உற்பத்தியாளரான ஐபிஎம், நிறுவனங்களுக்கான மென்பொருள் துறையில் முன்னணியில் இருந்த ரெட் ஹேட் நிறுவனத்தை 34 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com