94-வது அகெடமி அவார்ட்ஸ்-ல் சூர்யாவின் 'ஜெய் பீம்' மற்றும் மோகன்லாலின் 'மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம்' படமும் ஆஸ்கர் பரிந்துரைக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கத் தகுதியான 276 படங்களின் பட்டியலை அகெடமி அவார்ட்ஸ் வெளியிட்டது. இதில் இந்த இரு படங்களும் இடம் பெற்றிருந்தன. விரைவில் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற மார்ச் 27ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கிறது.
சீன் அட் தி அகெடமி யூடியூப் வலைத்தளத்தில் ஜெய்பீம் படத்தின் சில காட்சிகளும் இயக்குநர் த.செ.ஞானவேலின் நேர்காணலும் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. ஒரு தமிழ்ப் படத்தின் காட்சிகள் ஆஸ்கார் யூடியூபில் வெளியாவது இது தான் முதன்முறை.
மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்
நடிகர் சூர்யா, லிஜமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்து இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில் வெளியான படம் ஜெய்பீம். தமிழகத்தில் நடக்கும் பழங்குடிகளுக்கு எதிரான ஆதிக்கத்தைப் பேசும் அரசியல் படமாக அமேசான் பிரைமில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது ஜெய்பீம்.
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய திரைப்படம் 'மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்'. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. வெளியாவதற்கு முன்னரே சிறந்த திரைப்படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.
ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தகுதிபெற்ற 276 படங்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 'மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்' திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.