பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியானது. அடுத்த நாளேதான் உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டார். அத்துடன் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்ததாக கூறினார்.
இந்த செயல் பலரும் கோபம் கொள்ள வழிவகுத்தது. இந்த பப்ளிசிட்டி ஸ்டன்டுக்கு பின்னால் இருந்த டிஜிட்டல் நிறுவனம் மன்னிப்புக் கேட்டது. எனினும் இதன் விளைவாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து மக்கள் அதிகம் தேடினார்கள்.
இப்படி தனது மரணத்தை பொய்யாக்குவது பாலிவுட்டில் ஒன்றும் புதிது இல்லை. 1994ம் ஆண்டு மகேஷ் பட் எடுத்த கிரிமினல் படத்தை ஹிட் ஆக்குவற்காக மனிஷா கொய்ராலா இறந்துவிட்டதாக பொய்யான செய்தி பரப்பப்பட்டது.
அந்த படத்தில் மனிஷா கொய்ராலா நடித்த டாக்டர் ஸ்வேதா பாத்திரம் கொல்லப்படும். இதனை வைத்து நாளிதழ்களில் மனிஷா கொய்ராலா மரணம் என படத்தின் போஸ்டருடன் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
மனிஷா கொய்ராலா இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இறுதியில் விஷயம் விளங்க, பலரும் கடும் கோபத்துக்கு ஆளாகினர். எனினும் அந்த படம் ,மெகா ஹிட் ஆனது.