2019-ம் ஆண்டு பேரன்பு படத்திற்குப் பிறகு இயக்குநர் ராம் இயக்கத்தில் தமிழ் - மலையாளம் மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நிவின் பாலி நடிக்கிறார். மலையாள நடிகர் மம்முட்டியை கதாநாயகனாகக் கொண்டு ராம் இயக்கிய பேரன்பு திரைப்படம் கேரளத்தில் மிகப் பெரிய வெற்றியடைந்தது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி படங்களுடன் ராம் இயக்கும் ஐந்தாவது படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
நிவின் பாலி மற்றும் சூரி
ரிச்சி படத்தின் தோல்விக்குப் பிறகு தமிழில் நடிக்க ஆர்வம் காட்டாத நிவின் பாலி இயக்குநர் ராமுடன் இணைந்திருக்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். தங்கமீன்கள் தவிர ராமின் அனைத்து படங்களில் அஞ்சலி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிவின் பாலி, ராம், சூரி
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த படத்தின் அறிவிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரியின் பெயர்கள் இருந்தது. இதனால் சூரி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நிவின் பாலி, ராம், சூரி, மிஷ்கின், சுரேஷ்காமாட்சி
வி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தைத் தயாரிக்கிறார். சுரேஷ் காமாட்சியும் மிஷ்கினும் நேற்று படப்பிடிப்பு தளத்தைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது சூரி, நிவின் பாலி, ராம், மிஷ்கின், சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ராம் மற்றும் நிவின் பாலி
புகைப்படத்தில் படப்பிடிப்பு ரயில் நிலையம் போல் போடப்பட்டுள்ள செட்டில் நடப்பது தெரியவந்துள்ளது. இதனை வைத்து ரசிகர்கள் படத்தின் களத்தை யூகிக்க முயன்று வருகின்றனர். நிவின் பாலியின் லாங் ஹேர் கெட்டப்பும் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கிடைத்துள்ள தகவல்கள் இந்த படம் "மீனவ வாழ்க்கை முறை" சம்பந்தப்பட்ட கதைகளத்தைக் கொண்ட படமாக இருக்கும் எனக் கூறுகின்றன. ஏற்கெனவே இலங்கையில் கொல்லப்படும் மீனவர்கள் குறித்த பதிவை தரமணி படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ராம்.
படக்குழுவினருடன் மிஷ்கின்