நாகராஜ் மஞ்சுளேவின் ஜுண்ட் படம், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுகிறது. இந்த வாழ்க்கை வரலாற்று, ‘விளையாட்டுத் திரைப்படத்தில்’ அமிதாப் பச்சன் முக்கியக் கதாபாத்திரத்திலும், ஆகாஷ் தோசர் மற்றும் ரிங்கு ராஜ்குரு ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் ‘ஸ்லம் சாக்கர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவிய ஓய்வுபெற்ற விளையாட்டுப் பேராசிரியரான விஜய் பார்சேயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். மும்பை சேரிகளில் வாழும் குழந்தைகளைக் கால்பந்து வீரர்களாக மாற்றுவதன் மூலம் பேராசிரியர் எப்படித் தன் பயணத்தைத் தொடர்ந்து வெற்றி பெறுகிறார் என்பதே இந்தப் படத்தின் கதை.
Vijay Barse
2001 ஆம் ஆண்டில், சமூகச் சேவகராகத் தொடங்கிய இவரது பயணம்... நாக்பூர் ஹிஸ்லாப் கல்லூரியில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி ஆசிரியராகத் தனது பயணத்தை மேற்கொண்டார். அப்போது, ஒருநாள் சில குழந்தைகள் மழையில் கால்பந்தாக உடைந்த வாளியை வைத்து, விளையாடி கொண்டு இருந்ததை இவர் பார்த்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தக் குழந்தைகள் தொடர்ந்து விளையாடுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒரு கால்பந்தை விளையாடுவதற்காகக் கொடுத்தார்.
அடுத்த ஆண்டு, 2002-இல், அவர் ‘ஸ்லம் சாக்கர்’ என்ற கால்பந்து அகாடமியை நிறுவினார். இந்த அகாடமி அங்கிருந்த குடிசைப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்குக் கால்பந்து பயிற்சியும் மற்றும் மறுவாழ்வும் அளித்தது. ஓய்வுக்குப் பிறகு, ‘கிரிடா விகாஸ் சன்ஸ்தா நாக்பூர் (KSVN)’ எனும் நிறுவனத்தை நிறுவுவதற்காக அவரது சொந்த பணத்தை எடுத்து சுமார் ₹18 லட்சம் செலவிட்டார். எதற்காக என்றால்? பல கால்பந்து போட்டிகளை நடத்துவதற்காகவும் பின் தங்கிய குழந்தைகளுக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் அவர் செலவிட்ட தொகை இது. விஜய் பார்ஸ் தனது மனைவி ரஞ்சனா பார்ஸ் மற்றும் மகன் அபிஜீத் பார்ஸுடன் சேர்ந்து ஸ்லம் சாக்கர் எனும் நிறுவனத்தை நடத்தினார்.
Amitabh Bachchan with Vijay Barse
2007 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த ‘ஹோம்லெஸ் உலகக் கோப்பையின்’ போது நெல்சன் மண்டேலாவை சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. புகழ்பெற்ற சிறந்த மனிதரான நெல்சன் மண்டேலாவை சந்தித்ததை அவர் சொல்கையில், “அன்று என்னுடைய உழைப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த நாள் அது… நெல்சன் மண்டேலா அவர்கள் என்மீது கைப்போட்டு சொன்னார், ‘என் மகனே, நீங்கள் செய்வது மிக பெரிய சிறந்த விஷயம் என்று’.
2012 ஆம் ஆண்டில், பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் புதிய கால்பந்து திறமைகளைக் கண்டுபிடித்து வளர்க்கும், அவரது தன்னலமற்ற பணிக்காக சச்சின் டெண்டுல்கரிடமிருந்து, ‘ரியல் ஹீரோ’ விருதைப் பெற்றிருக்கார் விஜய் பார்ஸ்.
2014 இல், அமீர் கான் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ் ஜெயதே’ என்ற நிகழ்ச்சியில் 3வது சீசனின் 1-வது எபிசோடில் அவரது கதை மிகவும் பிரபலமடைந்தது.
2016 ஆம் ஆண்டில், அவரது NGO, ஸ்லம் சாக்கர் நிறைய விருதுகளைப் பெற்றது. FIFA டைவர்ஸிட்டி விருது, FICCI இந்தியா விளையாட்டு விருது மற்றும் மந்தன் NGO விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது.
2019 இல், அவருக்கு நாகபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
விஜய் பார்சேயின் வாழ்க்கைக் கதை பலருக்கு உத்வேகமாகவும், ஒருவரின் விடாமுயற்சி உலகை மாற்றும் என்பதை உணர்த்தியது. இவரைப் பற்றிய கதைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் மகிழ்ச்சியே. அமிதாப் பச்சன் எனும் மாபெரும் ஸ்டார் இவரது கதையைத் தழுவிய படத்தில் நடித்து இவருக்கு மென்மேலும் புகழை சேர்ப்பது இவருக்கான பயணத்தில் இன்னொரு மைல்கல்தான்.