Trevor James

 

Twitter

Good News

Trevor James - The Food Ranger: Youtubeல் கோடிகளில் ஈட்டும் கனடா யூட்யூபர்

Antony Ajay R

கனடாவை சேர்ந்த இளைஞர் சீன உணவுகளை ருசிப்பார்பதில் லயித்து ஊர்சுற்றும் பறவையாகிய கதையை அறிந்திருக்கிறீர்களா? ட்ரெவர் ஜேம்ஸ்-ன் கதை தான் அது.


இப்போது யூடியூபில் வெளியாகும் கன்டென்ட்களில் மிக முக்கிய இடத்தைப்பிடிக்கிறது உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள். சமையல் குறிப்புகள், எப்படிச் சமைப்பது, 100 கோழிகள் அல்லது முழு கிடாய்களை வேகவைக்கும் மெகா சமையல், மினியேச்சர் சமையல் இவற்றுடன் ஃபுட் ரிவியூ வீடியோக்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் இதில் புதுமையாகப் பயணத்தையும் உணவையும் கலவையாகக் கொடுப்பது ஜேம்ஸ்-ன் ஸ்டைல்.


உணவு உலகத்துக்குள் என்டரி

கனடாவைச் சேர்ந்தவரான ட்ரெவர் ஜேம்ஸ் தற்போது இருப்பது துபாயில். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஊர் சுற்றுவதற்காக மட்டுமே செலவு செய்தார். அந்த அளவிற்கு இவர் ஒரு பயணப்பிரியர். பின்னர் ஸ்காலர்ஷிப்பில் உலக வர்த்தகம் குறித்த மேற்படிப்புக்காகச் சீனா சென்றார். சீனா அவருக்கு மிகப் பிடித்தமான நாடாக இருந்தது. சீன மக்களின் கலாச்சாரமும் பழக்கவழக்கமும் அவரை வெகுவாக ஈர்த்தன. ஏற்கெனவே ஊர் சுற்றுவதில் அதிகப் பற்றுகொண்ட ஜேம்ஸ் கல்லூரியில் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் சீனாவின் பல பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள உணவு வகைகளை ருசி பார்த்து யூடூபில் வீடியோவாக பகிர்ந்து வந்தார். பார்ட் டைமாக சீன மொழியைத் தரவாக கற்றுக் கொண்ட ஜேம்ஸ் சீன மக்களுக்கு பார்ட்டைமாக ஆங்கில வகுப்பெடுத்து அதில் வரும் பணத்தைப் பயண செலவுகளுக்கு உபயோகப்படுத்தினார்.

Trevor with Food

தனித்துவமான ஃபுட் ரிவியூ


ஒரு உணவை வாங்கி அதனை பரிபூரணமாக அனுபவித்து உண்ணும் கலை அனைவருக்கும் வாய்க்காது. அத்துடன் அந்த உணவை தரம் பார்க்கும் கலையும் ஜேம்ஸ்-க்கு கைவந்தது. பாரம்பரிய உணவோ புத்தம் புதிய பர்கர் வகையோ வாயில் முதல் கடி கடிக்கும் போதே அதனைச் சோதனைக்கு உட்படுத்தி அதன் சுவைகளை விளக்குவார் ஜேம்ஸ். அப்போது அதன் ருசியில் லயித்து மிகிழ்ச்சியில் கத்தும் அவரது முக பாவனைகளே நம்மைச் சாப்பிடத் தூண்டும். வெறுமனே சாப்பிடாமல் அதன் மணம், அதிலிருக்கும் மசாலாக்கள் அது தரும் ஒரு வினாடி மயக்கம் ஆகியவற்றை அவர் சொல்லி முடிக்கும் போது நாமே சாப்பிட்டு முடித்த உணர்வு ஏற்படும்.

ஆரம்பத்திலிருந்தே தனது வீடியோக்களின் ரசிகர்கள் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை முடிவு செய்து களத்தில் இறங்கிய ஜேம்ஸ் சீன உணவு மட்டுமில்லாமல் கலாச்சாரத்தையும் அதன் சிறப்புகளையும் வீடியோக்களின் இடையே பதிவு செய்வார்.

“இது மாதிரியான பல ஐரோப்பியர்கள் சீனாவில் VLOG செய்யும் காணொளிகள் இணையத்திலிருந்தாலும் அவர்கள் மொழிப்பெயர்ப்பாளர்களை அருகில் வைத்துக்கொண்டு விளக்குவது நாடகத்தன்மையுடன் இருக்கும் ஆனால் ஜேம்ஸின் சீன அறிவு அவர் மிக இயல்பாகப் பேச உதவுகிறது” என்கின்றனர் அவரது ஆங்கிலேய ரசிகர்கள்.

2015-ல் ஆரம்பித்தது முதல் இப்போது வரை ஜேம்ஸ் தனக்கென குழு எதையும் வைத்துக்கொள்ளவில்லை. ஒரு கேமராவும் அவரும் போதும். அவரின் கேமர உமனாக செயல்படுபவர் காதல் மனைவி டிங்!

Ting and Trevor

பயணக்காதல்

2015-ம் ஆண்டு அவர் பயணத் திட்டத்தை விரிவுபடுத்திய போது தான் டிங்-ஐ சந்தித்தார். இருவருக்குமே இருந்த பயணக்காதல் அவர்களை நண்பர்களாக்கியது. அவர்கள் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.

படிப்பெல்லாம் முடிந்த உடன் சீனாவுக்குக் குடி பெயர்ந்து உணவு வீடியோக்கள் எடுக்கத்தொடங்கிய இளைஞனுக்கு யார் உறுதுணையாக இருந்திருப்பார். பாரம்பரியமான அல்லது சாதாரணமான வாழ்க்கை முறையில் நாட்டம் இல்லாத ஜேம்ஸ் எடுத்த பைத்தியக்காரத்தனமான முடிவுதான் பயணம் மற்றும் ஃபுட் ரிவியூ! அந்த பைத்தியக்காரத்தனம் தானே காதலுக்கும் அடிப்படை.

2015ம் ஆண்டு ஜூலை மாதம் துருக்கியில் உணவுக்கடைகளுக்கு சென்று ருசி பார்த்து ரிவியூ செய்ய கிளம்பினார் ஜேம்ஸ் அங்குதான் அவர் முதன் முதலாக டிங்கை பார்த்தார். அதன் பின் நடந்ததெல்லாம் அற்புதம் தான். இப்போது டிங் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை என ஜேம்ஸ் சொல்லும் அளவு அவர்களின் காதலும் வளர்ந்திருக்கிறது.

சுத்துதே சுத்துதே பூமி


டிங்கும் ஜேம்ஸும் இணைந்து பல நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டு வீடியோக்கள் பதிவிடத் தொடங்கினர். டிங், ஜேம்ஸின் கேமரா உமனாக கலக்கிக்கொண்டிருந்தார். “தி ஃபுட் ரேஞ்சர்” எனும் அவர்களது சேனல் வளரத் தொடங்கியது. இந்தியா, பூடான், நேபாளம், பாகிஸ்தான் என ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டர். சென்னையில் கூட மசால் வடையும் சீம்பாலும் சாப்பிடும் வீடியோ வைரலானது!

சீனாவில் அவர் தெரு ஓரக்கடைகளின் அற்புதமான உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பதிவிட்ட வீடியோக்களை சீனர்கள் பார்க்க முடியாது.

சீன அரசு யூடூபை தடை செய்திருக்கிறது ஆனாலும் ஜேம்ஸின் யூடூப் சேனலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை ஏனெனில் அவரின் பார்வையாளர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

Trevor James and ting

சீனாவிலிருந்து மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த ஜேம்ஸ் மற்றும் டிங் லாக்டவுன் காரணமாக வீடியோக்கள் பதிவிடுவதை நிறுத்தி வைத்தனர். சமீபத்தில் அவர்கள் துருக்கிக்குக் குடிபெயர்ந்து துருக்கியின் உணவுப் பட்டியலைப் புரட்டத் தொடங்கியிருக்கின்றனர். நாடு நாடாகப் பறவைகளைப் போலக் குடிபெயர்ந்து வித விதமான உணவுகளுடன் கலாச்சாரங்களுடன் மனிதர்களுடன் வாழ்வைக் கடக்கும் ஜேம்ஸ் மற்றும் டிங்-ஐ பார்க்கும் போது யாருக்குத் தான் தோனாது “இது போல வாழ வேண்டுமென்று”

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?