வாவ சுரேஷ்

 

Twitter

இந்தியா

வாவ சுரேஷை கடித்த 7 அடிப் பாம்பு - சோகத்தில் கேரளம்

Antony Ajay R

வாவ சுரேஷ் கேரளத்தில் பிரபலமான பாம்பு பிடிகாரர். இவரை ஒரு பாம்பு கடித்தது கேரளத்தில் தலைப்பு செய்தியாகியிருக்கிறது. வாவ சுரேஷுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும், இது சம்பந்தமாக கோட்டயம் மெடிக்கல் காலேஜ் சூப்பிரன்ட்டிடம் பேசியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார். அவரை பாம்பு கடித்த வீடியோ-வை உண்மை தானா? என நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் கேரள வாசிகள். ஒரு பாம்பு பிடிகாரரைப் பாம்பு கடித்ததற்கு இவ்வளவு பரபரப்பா என யோசிக்கும் போதே “யாருப்பா அந்த வாவ சுரேஷ்?” என்ற கேள்வியும் எழுகிறது தானே

மேனியெங்கும் பச்சை போர்த்தியிருக்கும் கேரளம் மனிதர்களுக்கு மட்டுமா கடவுளின் தேசமாக இருக்கும்? பாம்புகளுக்கும் தான். கேரளத்தில் வீடுகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடிப்பதற்காக வனத்துறையினரை விட அதிகமாக மக்கள் அழைப்பது சுரேஷை தான். சுரேஷுக்கு பாம்பு பிடிப்பது தொழில் அல்ல. அவர் அதனைக் கலையாகப் பார்க்கிறவர். பாம்பு பிடிப்பதை நிறுத்திவிட்டால் என் மூச்சும் நின்றுவிடும் என்பவர்.

தொடையில் கடித்த பாம்பு

திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் எப்போது யார் பாம்பு பயத்தில் அழைத்தலும் முதல் ஆளாக உதவிக்கு சென்றுவிடுவார். எந்த கருவியும் இல்லாமல் கையாலே பாம்பை பிடிக்கும் திறமைக் கொண்டவர்.

சிறு வயதிலிருந்தே பாம்புகள் மீது அதிக ஆர்வம் உடையவர் பாம்புகளைப் பற்றி அதிகமாகப் படித்துத் தெரிந்துகொண்டு பாம்பு பிடிக்கும் கலையை வளர்த்துக்கொண்டுள்ளார். எந்த வகை பாம்பாக இருந்தாலும் அசால்ட்டாக களத்தில் இறங்கி பாம்பை கப்சிப் ஆக்கிவிடுவார்.

பல்லுயிர் சமன்பாட்டுக்குப் பாம்புகள் எவ்வளவு முக்கியம் என்பதைப் படித்துத் தெரிந்து கொண்ட அவர். பிடிக்கும் எல்லா பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் பாதுகாப்பான காட்டில் விட்டுவிடுவார்.

“பாம்புகள் மனிதர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட அப்பாவி உயிரினங்கள்” எனக் கூறும் சுரேஷை நேற்று ஒரு பாம்பு தவறாகப் புரிந்து கொண்டு கடித்தே விட்டது.

பாம்பு பிடிக்கும் சுரேஷ்

கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி அருகே உள்ள குறிச்சி பகுதியில் நாகப் பாம்பு ஒன்று ஊருக்குள் சுற்றித்திரிவதாக வாவ சுரேஷுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 3 மணியளவில் அங்குச் சென்றவர் பாம்பைத் தேடினார். பாம்பு ஒரு கருங்கல் காம்பவுண்ட் சுவர் இடுக்கில் புகுந்தது. காம்பவுண்டை உடைத்தபோது சுமார் 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பு வெளியே வந்தது. பாம்பின் வாலைப் பிடித்த வாவ சுரேஷ், அதை ஒரு டப்பாவில் அடைக்க முயன்றார். பாம்பின் சீற்றம் காரணமாக முடியாமல் போகவே, பிளாஸ்டிக் சாக்கில் அடைக்கும் முயற்சியில் இறங்கினார்.

பிளாஸ்டிக் சாக்கினுள் மூன்று முறை உள்ளே சென்ற பாம்பு உடனடியாக வெளியே வந்தது. ஆனாலும் விடாமல் பாம்பை சாக்குப்பைக்குள் அடைக்க முயன்ற சமயத்தில் திடீரென வாவ சுரேஷின் வலது கால் தொடையில் பாம்பு பலமாகக் கடித்துப் பிடித்துக்கொண்டது. பாம்பைப் பலமாக இழுத்து கீழே போட்ட சுரேஷ் கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தி ரத்தத்தை வெளியேற்றினார். அப்போது பாம்பு மீண்டும் கல் சுவருக்குள் செல்ல முயன்றது. அந்தப் பாம்பை மீண்டும் பிடித்து ஒரு டப்பாவுக்குள் அடைத்த வாவ சுரேஷ் அங்கேயே மயக்கநிலைக்குச் சென்றார்.

எப்போதும் பாம்பு விஷத்திற்கு முறிவு மருந்து அவரின் கையில் இருக்கும் ஆனால் இந்த முறை அவை கை கொடுக்கவில்லை.

பாம்பை நெகிழிப் பைக்குள் போட முயலும் சுரேஷ்

பாம்பு பிடிப்பதை வேடிக்கை பார்க்கக் கூடி நின்ற பொதுமக்கள் வாவ சுரேஷை மீட்டு கோட்டயத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதயத்துடிப்பு சீராக இருப்பதாகவும், மூளையிலும் பாதிப்பு பெரிதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. பாம்பு கடித்திருப்பதால் 48 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டயத்தில் பாம்பு பிடிக்கும்போது வாவ சுரேஷை பாம்பு கடித்த சம்பவத்தைப் பொதுமக்கள் சிலர் மொபைல்போனில் பதிவு செய்திருந்தனர். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

இது வரை 50 ஆயிரம் பாம்புகள் வரை பிடித்திருக்கிறார் சுரேஷ். அவற்றில் 150க்கும் மேல் ராஜ நாகங்கள். அவரை 300 முறை விஷப்பாம்புகள் தீண்டியிருக்கின்றன. 10 முறை பாம்புக் கடியால் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 2 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவு என்பதால் தான் கேரள மக்கள் சோகமாக இருக்கின்றனர் தவிர, ஆனைக்கும் அடி சருக்கும் தானே?

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?