குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, சந்தால் பழங்குடியைச் சேர்ந்தவர் என அவருடைய அணியினரால் பெருமிதமாகக் கூறப்படுகிறது. இசுலாமியரான அப்துல்கலாம், பட்டியல் சமூகத்தவரான இராம்நாத் கோவிந்த், பட்டியல் பழங்குடியினத்தவரான முர்மு என பா.ஜ.க.தான் சமூக நீதிக்காகப் பாடுபடுகிறது என்றெல்லாம், அந்தத் கட்சியின் சார்பில் நேற்று முதலே விளம்பரம் செய்துவருகின்றனர்.
சந்தால் என்றும் சந்தல் என்றும் அழைக்கப்படும் இந்தப் பழங்குடியினருக்கு, அமைதி, சாந்தமான மனிதர் என்று பொருளாம். அவர்களுடைய சந்தாலி/ சந்தலி மொழியில், சாந்த என்றால் அமைதி, ஆள என்றால் ஆள், நபர் என்று பொருள்.
சந்தால் இனத்தவர், இந்திய அளவில் மூன்றாவது பெரும் பழங்குடிச் சமூகத்தினர். கோண்டு, பிலு ஆகிய பழங்குடி இனத்தவர் இவர்களைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கின்றனர். சந்தால் பழங்குடியினர் ஜார்க்கண்டு, ஒதிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக வசிக்கின்றனர்.
திரௌபதி முர்முவின் சொந்த மாவட்டமான ஒதிசா மாநிலம், மயூர்பஞ்ச்சில் சந்தால் இனத்தவர் அடர்த்தியாக வசிக்கின்றனர்.
அந்த மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த - புவனேசுவரம், பட்டியல் சமூகத்தினர், பட்டியல் பழங்குடியினர் பயிற்சி நிறுவனமானது, வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து சந்தாலி மக்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது.
குறிப்பிட்ட காலம்வரை அலைகுடிச் சமூகத்தினராகவே இருந்துவந்த சந்தால் இனத்தவர், ஒரு கட்டத்தில் சோட்டாநாக்பூர் மேட்டுநிலப் பகுதியில் நிலையாகக் குடியமரத் தொடங்கினர். 18ஆம் நூற்றாண்டின் கடைசிவாக்கில் முந்தைய பீகார் - இப்போதைய ஜார்க்கண்டு மாநிலத்தில் உள்ள சந்தால் பர்கானா பகுதியில் இவர்கள் அடர்த்தியான மக்கள்தொகையினர் ஆகினர்.
நாட்டின் வடகிழக்குப் பகுதியைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் பொதுவாக, பழங்குடியினரிடம் எழுத்தறிவு குறைவே. ஆனால் சந்தால் மக்களோ அதிக அளவில் கல்வி பெற்றவர்களாக மாறினர். 1960களிலிருந்து பள்ளிக்கல்வி குறித்து இந்த மக்களிடம் விழிப்புணர்வு காணப்படுகிறது. இதே ஒதிசா, ஜார்க்கண்டு, வங்கம் மூன்று மாநிலங்களிலும் உள்ள மற்ற பழங்குடியினரை ஒப்பிட இவர்களே கூடுதலான எழுத்தறிவு கொண்டவர்களாக இருக்கின்றனர்.
சந்தால் பழங்குடியைச் சேர்ந்த பலரும் உயர் பதவிகள், பெரும் அதிகார நிலைகளை அடைந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஜார்க்கண்டு முதலமைச்சராக சந்தால் இனத்தவரான ஹேமந்த் சோரண் இருக்கிறார். இந்தியக் கணக்குத்தணிக்கை அமைப்பின் தலைவராக இருந்தவரும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப்பகுதியின் முதல் துணைநிலை ஆளுநருமான கிரிஷ் சந்திர முர்முவும் சந்தால் இனத்தவரே.
இப்போதைய மைய அரசின் நீர்வளத் துறை அமைச்சர் பிசேஸ்வர் டுடுவும் இதே பழங்குடி சமூகத்தவர். இவர், திரௌபதி முர்முவின் மாவட்டமான மயூர்பஞ்ச்சிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சந்தால் இனத்தவரான திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பது, சந்தால் பழங்குடியினரின் பொற்காலம் என அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பிரமுகர்களும் குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகள் இதைக் காட்டுகின்றன.
என்னதான் சமூகத்தில் ஏற்றங்களைப் பெற்றாலும், சந்தால் இன மக்கள் தங்களின் வேர்களை விட்டுவிடாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் இயற்கையை வழிபடுகிறார்கள். கிராமங்களில் குறிப்பிட்ட மரத் தோப்புகளுக்கு தெய்வீகமாகக் கருதி அவர்கள் மரியாதை செலுத்திவருகின்றனர். மற்ற பகுதிகளைப் போல அல்லாமல், அந்த மரங்களைக் கொண்ட பகுதியில் இந்த மக்கள் வேட்டையாடுவதோ, மரங்களை வெட்டுவதோ, வேறு பொருள்களை அறுவடைசெய்வதோ இயற்கைக்கு விரோதமாக அவர்கள் எதையும் செய்வதில்லை.
சந்தால் மக்களின் பாரம்பரிய உடை என்பது ஆண்களுக்கு வேட்டியும் கமுச்சா எனப்படும் சட்டையும்; பெண்களுக்கு சிறுகட்டம் போட்ட நீலம் அல்லது பச்சைநிற சேலையாகவே இருக்கும். பெண்கள் பொதுவாக டாட்டூ எனப்படும் பச்சை குத்தியிருப்பார்கள். சந்தால் பழங்குடியினர் இடையில் பல்வேறு திருமணம் முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உடன்போக்கு, விதவை மறுமணம், இறந்துபோன கணவனின் சகோதரனைத் திருமணம்செய்வது, வலுக்கட்டாய மணம், கருவுண்டாக்கியவனை சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் கட்டிவைப்பது என பலவாறாக இது இருக்கிறது.
மணமுறிவு என்பது சந்தால் மக்களிடம் ஒரு குறையாகப் பார்க்கப்படுவது இல்லை. தம்பதியரில் யார் ஒருவரும் திருமண உறவை முறித்துக்கொள்ளலாம். தன் மனைவி மாந்திரகவாதி என்றோ தன் சொல்படி கேட்கவில்லை என்றோ தனக்குப் பிடிக்காவிட்டாலும் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்குப் போய்விடுகிறார் என்றோ ஒருவன் நிரூபித்துவிட்டால், அவன் மணமுறிவு செய்துகொள்ள முடியும்.
பெண்ணின் தரப்பில், அவளுக்குத் தரவேண்டியதை வழங்காவிட்டாலோ அல்லது வேறு ஒரு ஆணை மணம்புரிய அந்தப் பெண் நினைத்தாலோ அவள் முறிவு பெறமுடியும். ஆனால் என்ன... இரண்டாவதாக அந்தப் பெண்ணைக் கைப்பிடிக்கும் ஆண், அந்தப் பெண்ணின் முதல் கணவனுக்கு அவர்களுடைய திருமணச் செலவைத் தந்துவிட வேண்டும்.
இதைப்போல, கணவனாக இருப்பவன் மனைவியைக் கைவிட நினைத்தால் ஊர்க் குழு கூடி அறிவிக்கும் இழப்பீட்டை அவன் தன் மனைவிக்கு வழங்கியாக வேண்டும்.
சந்தால் இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்கென சில விதிகள் இருக்கிறன. தன் மனைவி கருவுற்று இருக்கும் காலத்தில் அந்த ஆண் ஒரு விலங்கைக்கூடக் கொல்லக்கூடாது; சாவு நிகழ்வில் கலந்துகொள்ளவும் கூடாது. அதைப்போல, கருவுற்ற பெண்ணும் அப்போது யார் துணையும் இல்லாமல் காட்டுக்குள் செல்லக்கூடாது. கருவுற்ற காலத்தில் யாருடைய சாவுக்காகவும் அழவோ இரங்கல் தெரிவிக்கவோ கூடாது.
சந்தால் பழங்குடியினர் தங்களின் மரபார்ந்த பாடல், ஆடலில் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். சமூகரீதியான அனைத்து நிகழ்வுகளிலும் அவர்களின் பாரம்பரிய ஆடலும் பாடலும் இடம்பெறும். அப்போது கமக், டோல், சாரங்கி, புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை மீட்டி மகிழ்வார்கள்.
பெரும்பாலான சந்தால் மக்கள், தம்மிடம் இருக்கும் நிலத்தை வைத்தோ காட்டைச்சார்ந்தோ விவசாயம் செய்கிறவர்கள். அவர்களின் குடியிருப்பை ஓலா என்கிறார்கள். இதன் சுவரில் மூன்று நிறங்களில் காணப்படும். சுவரின் அடிப்பகுதி கருமையான மண்ணாலும் நடுப்பகுதியில் வெள்ளையடித்தும் மேற்பகுதி சிவப்பாகவும் இந்த வீடுகள் காட்சியளிக்கும்.
சந்தால் இனத்தவரிடையே தாமோதர் நதி சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த இனத்தவர் ஒருவர் இறந்துபோய்விட்டால் அவருடைய சாம்பலும் எலும்புகளும் தாமோதர் ஆற்றுக்குள் விடப்படுகின்றன; அப்படி விட்டால்தான் அமைதி பெறும் என்பது இவர்களின் நம்பிக்கை.
சந்தால் மக்களின் பழமையான மொழியான சந்தாலி, ஒல் சிக்கி எனும் வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. சந்தாலி மொழி வல்லுநர் பண்டித இரகுநாத முர்மு என்பவரால் இதை மேம்படுத்தப்பட்டது. மூலத்தில் சந்தாலி மொழி முண்டா குழுவினருடையது. ஒல் சிக்கி வரிவடிவத்தில் எழுதப்படும் சந்தாலி, அரசமைப்புச் சட்டத்தின் பதினெட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust