ஒவ்வொரு ஆண்டும் மத்திய மாநில அரசுகள் அந்தந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல்.
இவர் சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். பூபேஷ் சத்தீஸ்கரின் முதல்வராகவும் நிதியமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
பட்ஜெட்டின்போது ஆவணங்களை ஒரு பெட்டியில் (பிரீப்கேஸ்) வைத்து சட்டசபைக்குக் கொண்டு சென்று தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று கொண்டுவந்த பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய பெட்டி பேசுபொருளாகியுள்ளது.
முழுவதும் பசு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் அவர் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டுசென்று தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வரலாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசால் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உரங்களை உபயோகிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த சூட்கேஸை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இயற்கை விவசாயம் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையை குறிப்பதாக இது பார்க்கப்படுகிறது.