யோகி

 

News Sense

இந்தியா

யோகி ஆதித்யநாத் : நரேந்திர மோடிக்குப் பின் பிரதமர் நாற்காலியை பிடிப்பாரா? - விரிவான அலசல்

Govind

இந்திய அரசியலில் மிக அரிதான அரசியல் பாணியைக் கையாண்டு வருகிறார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். விரைவில் அந்த மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் அகிலேஷ் யாதவ் மற்றும் யோகி இடைலான போட்டி பலமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக 2017-ம் ஆண்டில் முதல்வராகியிருக்கிற யோகி பல சம்பவங்களை நிகழ்த்தி மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

தற்கால இந்தியாவில் இந்துவாக இருப்பது ஒரு தலைவருக்கான அடிப்படைத் தகுதியாகிவிட்டது. மாற்று மதத்தினருக்கான அதிகாரப் பகிர்வு அருகி வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களை இந்துக்களாகப் பிரகடனப்படுத்தி வருகிறார்கள். இந்திய அரசியலே இந்து - இந்துத்துவம் என்றே நகர்கிறது. தலைவர்கள் தங்களை இந்துக்களாகக் காட்டிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்கள். யோகி ஆதித்யநாத் ஒரு படி மேலே சென்று, அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி, தன்னை ஒரு மதத் தலைவராகவே காட்டிக் கொள்கிறார். ஒரு தலைவர் அதிகாரத்தில் இருக்கும்போது தன்னை மதகுரு போலவே காட்டிக்கொள்வதும், அதற்கு ஏற்றாற்போல மதக்கொள்கைகளை அமல்படுத்துவதும் இந்தியாவுக்குப் புதிது. அதுமட்டுமல்ல... யோகி தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக 'முதல்வர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் ஜி மகாராஜா' என்றே தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார்!

சரி… உத்தரப்பிரதேசத்தில் இவ்வளவு சக்திவாய்ந்த நபராக யோகி ஆதித்யநாத் எப்படி மாறினார்?

யோகி

யோகியின் கதை

'யதா யதா ஹி யோகி' என்ற யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் விஜய் திரிவேதி. அவர் அந்தப் புத்தகத்தில், '1972-ம் ஆண்டு, கட்வால் என்ற கிராமத்தில் பிறந்த அஜய் மோகன் பிஷ்ட்டு ஆரம்பம் முதலே அரசியலில் நாட்டம் கொண்டிருந்தார்' என்று எழுதியிருக்கிறார். ஆம், அஜய் மோகன் பிஷ்ட்டு என்பதுதான் யோகியின் இயற்பெயர்.

இப்போது காவி உடையும் ருத்ராஜ மாலையும் குங்குமமும் வைத்துக் கொள்ளும் யோகி, 90-களின் முற்பகுதியில் அக்காலத்துக்கே உரிய பாணியில் நாகரிக உடையும், கருப்புக் கண்ணாடியும் அணியும் ஒரு கல்லூரி மாணவன் தோற்றத்தில்தான் இருந்திருக்கிறார். கல்லூரியின் மாணவர் சங்கத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பினார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் சார்பாகப் போட்டியிட்ட மாணவரிடம் தோற்றுப் போனார். சொல்லப்போனால், இந்தத் தோல்விதான் அஜய் மோகன் 'யோகி' ஆவதற்கே காரணம் எனலாம்.

ஆம்... இந்தத் தோல்விக்குப் பிறகு பிஷ்ட் மஹ்ந்த் அவைத்யநாத் என்னும் குருவைச் சந்தித்தார் அஜய் மோகன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரிடம் தீட்சை பெற்று 'யோகி ஆதித்யநாத்' ஆனார். அப்போது அவர் மாற்றிக்கொண்டது பெயரை மட்டுமல்ல, தன் மொத்த வாழ்க்கை முறையையும்தான்.

வரலாற்றுரீதியாகப் பார்த்தால் நாத் பிரிவினர் அனைத்து உயிர்களும் சமம் என்று கருதுபவர்கள். இஸ்லாம் பின்பற்றும் வழியும் நாத் பிரிவு பின்பற்றும் வழியும் ஏறக்குறைய ஒன்றுதான். நாத் பிரிவினரும் சிலை வழிப்பாட்டை பின்பற்றாமல் இருந்தவர்களே. பிற மதத்தினருக்கு எதிராக எந்த வெறுப்பு பிரசாரத்தையும் அவர்கள் மேற்கொண்டதில்லை. ஆனால், மஹந்த் திக்விஜய் நாத் கோரக்பூர் மடத்தின் தலைமை பூஜாரியாக வந்ததும் வழக்கங்கள் அனைத்தும் மாறின. அங்கே சிலைவழிபாடு தோன்றியது. சனாதன முறையைப் பின்பற்றும் பழக்கமும் வந்தது. அவை இன்றுவரை தொடர்கிறது.

யோகி

ஆன்மிகம் டூ அரசியல்

சரி... மீண்டும் யோகி ஆதித்யநாத் விஷயத்திற்கே வருவோம். தீட்சை பெற்றவர்கள் ஆன்மிகப் பணியைத் தொடங்குவார்கள். ஆனால், யோகி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். உத்தரப்பிரதேச மண் அப்படித்தான், அங்கு எப்போதும் ஆன்மிகமும் அரசியலும் பிண்ணிப் பிணைந்தே கிடக்கின்றன.

தீட்சை பெற்ற பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் யோகி. அப்போது அவருக்கு வயது 26. அந்த நாடாளுமன்றத்தில் மிக இளைய உறுப்பினராக நுழைந்தார்.

தொடக்கத்தில் இருந்தே கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் தன் கருத்தைத் தயங்காமல் கூறி வந்தார் யோகி. இன்று இந்த இடத்தில் அவர் இருப்பதற்கு இந்தக் குணம்தான் காரணம். அதே நேரம் இந்தக் குணம் தொட்டக்கத்தில் அவரது வளர்ச்சியைத் தடுத்தது. உள்ளூர் தலைவர்களுடன் பிணக்கு ஏற்பட காரணமாக இருந்தது.

கட்சியின் பிம்பத்தில் மட்டும் தாம் இருக்கக் கூடாது என்று உணர்ந்த யோகி, தனக்கான ஓர் அமைப்பை உருவாக்க முடிவு செய்தார். 'இந்து யுவா வாஹினி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இது கலாசார அமைப்பு என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது முழுமையாக யோகியின் ஆதரவாளர்களை மட்டுமே கொண்ட அமைப்பு.

பாஜக-வில் பெரும்பாலான தலைவர்கள் மூத்த தலைவர்களின் தயவில்தான் இருந்து வருகின்றனர். யோகி விஷயம் அப்படியல்ல. மோடியும் அமித்ஷாவும் இருக்கும் இடத்தில் கூட அவரது கருத்தை வெளிப்படையாகக் கூறுவார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஒருபோதும் தவறமாட்டார். சில சமயங்களில் உத்தரப்பிரதேச அரசு விளம்பரங்களில் மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டது, ஏதோ ஏதேச்சையாக நடந்தது அல்ல!

யோகி போலத் தனித்து செயல்பட்டவர்களை கட்சி முடக்கியிருக்கிறது. பெரிய தலைவர்களே இருந்த இடம் தெரியாமல் பா.ஜ.கவில் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், யோகியை வீழ்த்த முடியாததற்கு காரணம், யோகியின் களப்பணியும், கட்சியைக் கடந்து வளர்ந்திருக்கும் அவர் பிம்பமும்தான். அவர் அளவுக்கு பா.ஜ.கவில் கரிஷ்மா கொண்ட தலைவர்கள் இல்லை. இப்படி, தனக்கான பிம்பத்தைத் திட்டமிட்டு கட்டமைத்தார் யோகி.

யோகி

காலில் விழுந்து கைது செய்த காவல்துறை

2017-ம் ஆண்டு, யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்றபிறகு, கோரக்பூரின் பத்திரிகையாளர்கள் சங்கம் அவரை வரவேற்கும் நிகழ்ச்சியை நடத்தியது. அங்கே அவர் நுழையும்போது 'நம் கடவுள் வருகிறார்' என்று கோஷங்களை எழுப்பினர்.

பெரியவர்களின் காலில் விழுவது உத்தரப்பிரதேசத்தில் வழக்கம்தான். நம் ஊரிலும்கூட அந்தப் பழக்கம் உண்டு. ஆனால், அதிகாரத்துக்கு வந்த முதல்வரின் கால்களை அன்று பத்திரிகையாளர்கள் தொட்டு வணங்கியது மிக மோசமான நிகழ்வாகப் பதியப்பட்டது.

யோகி முதல்வராவதற்கு முன்னர், 2007-ம் ஆண்டு வகுப்புவாத பிரிவினையைத் தூண்டும்படி பேசியதற்காக கைது செய்யப்பட்டார். அப்போது போலீசார், அவரைத் தொட்டு வணங்கிய பின்தான் கைது செய்தனர். அன்று அங்கிருந்த ஒரு மாடு அழுததாக விரிவான செய்தியை வெளியிட்டார்கள் பத்திரிகையாளர்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் தன்னை மகாராஜாவாக நிறுவி இருக்கிறாரே... அவர்தான் யோகி.

அவர் உத்தரப்பிரதேசம் முழுவதையும் இந்து மத அடையாளங்களால் நிறைத்து வைத்திருக்கிறார். கோரக்பூரில் உள்ள காவல் நிலையங்களில் சிறிய கோவில்கள் இருக்கின்றன. மாவட்ட நீதிமன்றங்களில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையன்றும் ஹனுமான் பாடல்களை வழக்கறிஞர்கள் பாடுகிறார்கள். அங்குள்ள கோயிலில் பூஜைகள், அர்ச்சனைகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை யோகி ஆதித்யநாத் நடத்துவார். அவரது மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்படுகின்றன. அவர் எங்கு சென்றாலும் அந்த இடம் காவியால் அலங்கரிக்கப்படுகிறது.

Narendra Modi

மோடிக்குப் பின்…

'பிரதமர் மோடிக்கு பிறகு அவரின் வாரிசாகப் பிரதமர் நாற்காலியை யோகி எட்டுவாரா?' என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுவது இயல்புதான். ஆனால், உத்தரப்பிரதேசத்துக்கு வெளியில் இருக்கிற மாநிலங்களில் அவருக்கு செல்வாக்கு மிகக் குறைவாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே தன்னை தேசியத் தலைவராக நிறுவிக்கொண்டார். ஆனால், யோகியின் செல்வாக்கு வட மாநிலங்களில்கூட பெரிதாக ஆதிக்கம் செலுத்தவில்லை. அவர் இப்போது வரை உத்தரப்பிரதேசத்தின் ஒரு தலைவர்... அவ்வளவுதான்!

அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக யோகி ஆதித்யநாத் எடுக்கும் முடிவுகள் ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியையும் மற்றவர்களுக்கு அதிருப்தியையும் தருகிறது. ஆனால், இது ஜனநாயக நாடு. இங்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் இல்லை. யோகியை நிராகரிப்பவர்கள் விகிதாசாரத்தில் அதிகம் இருந்தாலும் அவரை வீழ்த்துவது இந்தத் தேர்தல் முறையில் சுலபமல்ல. அப்படி நிராகரிப்பவர்கள் அங்கு அதிகம் இருப்பது போலவும் தெரியவில்லை.

கொரோனா காலத்தில் கங்கையில் மிதந்த பிணங்கள், மருத்துவ உதவி கிடைக்காமல் தத்தளித்த மருத்துவமனைகள், ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்த மக்கள் என ஒருவித அதிருப்தி சூழல் பாஜகவுக்கு எதிராக இருப்பது உண்மைதான். ஆனால், இவை மட்டுமே யோகியை வீழ்த்தப் போதுமானதாக இருக்குமா?

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?