உலகத்தின் எந்த முனையிலிருந்தும் உங்கள் ஊர் தெருவைப் பார்க்கும் வசதி கிடைத்தால், மனது எப்படி பட்டாம்பூச்சி போலப் பறக்கும்... சில நாட்களாவது, வாரங்களாவது, மாதங்களாவது ஊரைவிட்டு வேறு ஒரு நாட்டுக்கோ மாநிலத்துக்கோ சென்றுவர வாய்த்தால், அந்த அனுபவம் கிடைக்கக்கூடும் என்கிறார்கள், கூகுள் நிறுவனத்தின் தெரு நோக்கி- ஸ்ட்ரீட் வியூ திட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு தெருவையும் மேப்பில் போட்டோ படமாகப் பார்க்கும் வசதியை உருவாக்கும் கூகுளின் திட்டம், 2011ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிலேயே பெங்களூரு நகரத்தில் கூகுளின் இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. சோதனையோட்டமாக கூகுள் நிறுவனம் படங்களைத் திரட்டத் தொடங்கியபோது தடை விதிக்கப்பட்டது.
பின்னர், 2016ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கூறி, மத்திய அரசே தெரு நோக்கித் திட்டத்துக்கு தடையை விதித்தது. இந்தத் திட்டத்துக்காக கூகுள் நிறுவனம் படங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது; அதையும் கூடாது என மத்திய அரசு தடுத்து நிறுத்தியது. நாட்டின் பாதுகாப்புக்கு இதனால் அச்சுறுத்தல் உண்டாகும் என உளவு அமைப்புகள், பாதுகாப்புத் துறையின் முகமைகள் அரசை எச்சரித்ததால் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், இப்போது அதே திட்டத்தை டெக் மஹிந்திரா, ஜெனிசிஸ் ஆகிய இந்திய நிறுவனங்களின் மூலமாக கூகுள் மேப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. புதிதாகக் கொண்டுவரப்பட்ட தேசிய புவியிடக் கொள்கை 2021 வந்த பிறகே இது சாத்தியமானது.
பிராஜக்ட் குல்லிஃபை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வசதி, சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை, ஐதராபாத், புனே, நாசிக், வடோதரா, அகமது நகர், அம்ரிட்ஸர் ஆகிய நகரங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது என்கின்றனர் மூன்று நிறுவனங்கள் தரப்பிலும்.
பனோரமா கோணம் (Panorama) என்பார்களே 360 டிகிரிக்கும் சுற்றிவிட்டு பார்க்கக்கூடிய பறந்த காட்சியை இது தரும் என்பது அவர்களின் தகவல்.
முதலில் பெங்களூரு காவல்துறை இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்திய நிறுவனங்களான ஒனாபோ, மேப்மைஇந்தியா ஆகியவை தங்களின் சொந்தத் தயாரிப்பான பனோரமா நிலப்படத் தொகுப்புகளை வெளியிட்டன. ஆனால், ஸ்ட்ரீட் வியூ என்கிற இந்தத் தெருநோக்கி நிலப்படத் திட்டமானது கூகுள் மேப்புடன் கைகோர்த்து, அதைவிடச் சிறந்த தோற்றத்தை நுகர்வோருக்கு அளிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சாலைகளின் நிலைமையை புதிய மேப் நன்றாக எடுத்துக்காட்டும் என்கிறார்கள்.
இதைப் போன்ற தெருநோக்கி நிலப்படத் தொகுப்பை உலக அளவில் பல இடங்களில் கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆனால் இங்கு தான் மூன்றாம் தரப்பினருடன் கூட்டாக இணைந்து இதைச் செய்திருக்கிறது. புதிய தேசிய புவியிடக் கொள்கைப்படி, உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே இப்படியான தொகுப்புக்கான தரவுகளைச் சேகரிக்கவும் அவற்றுக்கான உரிமத்தை மற்றவர்களுக்கு வழங்கவும் முடியும் என்பது முக்கியம்.
கூகுள் மேப்பில் தெருநோக்கி வசதியான ஸ்ட்ரீட் வியூவைச் சொடுக்கினால், நீங்கள் விரும்பும் எந்த சாலையோ குறிப்பிட்ட பகுதியோ தெரியும். அது மட்டுமின்றி அந்த இடங்களின் மேற்பரப்பு வெப்பநிலையையும் இது காட்டும். இதற்காக கூகுள் நிறுவனம் தன்னுடைய வாகனங்களைப் பயன்படுத்தாது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வகை வண்டிகளைப் பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வதற்கு முன்னர் அந்த இடத்தை உள்ளார்ந்து பார்த்துவிட்டுச் செல்வதற்கு இந்த வசதி பயன்படும்.
இந்தியாவில் இப்போதைக்கு 10 நகரங்களில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வசதி, ஆண்டின் கடைசிக்குள் மொத்தம் 50 நகரங்களில் கிடைக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்கின்றனர் தயாரிப்பாளர்கள். இதுவரை ஒரு இலட்சத்துக்கு 50 ஆயிரம் கி.மீ. தொலைவை இதற்குள் கொண்டுவந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குள் 7 இலட்சம் கி.மீ. தொலைவை தெருநோக்கியின் பரப்புக்குள் கொண்டுவருவது கூகுளின் திட்டம்.
தெருநோக்கி வசதியைப் பெறக்கூடிய இடங்களில், அந்தந்தப் பகுதி அளவிலான வர்த்தகத்துக்கு இது நன்கு பயன்படும் என்பது புது முனைப்பார்களின் எதிர்பார்ப்பு. வர்த்தகம் தொடர்பாக ஓர் இடத்துக்குச் செல்லவேண்டி உள்ளவர்கள் மெய் நிகர் தளத்தில் அந்த இடத்தைப் பார்வையிட்டு, கூடுதலான ஓர் அனுபவத்தைப் பெறுவதற்கு, இந்த வசதி பெரிய துணையாக அமையும் என்கிறார் கூகுள் மேப் அனுபவப் பிரிவின் துணைத்தலைவர் மிரியம் கார்த்திகா டேனியில்.
அரசாங்கத்துடனும் உள்ளூர் அளவிலான அமைப்புகளுடனும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதிலும் நிலப்படத் தொகுப்புத் தரவுகளை மக்களுக்கு கூடுதலான பயன்களைத் தரச்செய்வதிலும் நாங்கள் ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, இந்தியாவில் இதைப் போன்ற 360 டிகிரி காட்சி வசதியை மட்டுப்படுத்தப்பட அளவில் கூகுள் நிறுவனம் செய்துவந்திருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்து நாட்டின் பல்வேறு நினைவுச்சின்னங்களைப் படக்காட்சியாக வழங்கி வருகிறது.
ஆனால், இவ்வளவையும் காட்டக்கூடிய ‘கூகுள் மேப்’ செயலியில், தெருக்களின் சாலைத் தரத்தைக் காண்பிக்கப்படுமா என்பது பரவலான கேள்வியாக இருந்துவருகிறது. செயற்கைக்கோளில் இது சரிவரத் தெரிவதில்லை எனக் குறைக்கூறப்படுகிறது. பத்தாண்டுகளுக்கும் மேலான இந்தச் சிக்கலைத் தீர்க்க நவீன நுட்பங்களைப் பயன்படுத்திவருகிறோம்; குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, எந்திரக் கற்றல் நுட்பங்கள் மூலம் சாலைகளின் நிலைமையைத் துல்லியமாகத் தெரிவிக்க வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறது கூகுள் தரப்பு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust