Sidhu Moosewala Twitter
இந்தியா

விக்ரம் : கனடா நாட்டில் உள்ள பஞ்சாபி கேங்ஸ்டர்கள் - ரத்தம் தெறிக்கும் விறுவிறு கதை

சுதீப் சிங் சித்து என்கிற சித்து மூசாவாலா, சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் மான்சா மாவட்டத்தில் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடலில் மொத்தம் 25 குண்டடிடள் இருந்ததாக தகவல்கள் கிடைத்தன

NewsSense Editorial Team

இரண்டு நாட்களுக்கு முன் பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை உலுக்கியது. கோல்டி பிரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னாய் என்கிற கேங்ஸ்டர்கள்தான் இந்த கொலையை அரங்கேற்றியதாக பஞ்சாப் காவல்துறை கூறுகிறது.

மூசாவாலா, பஞ்சாபி கேங்ஸ்டர் கும்பல்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் அவர் கொல்லப்பட்டதாக சில உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். மூசாவாலா கொல்லப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னாய் தான் காரணம் என்றும், அவர்கள் கும்பலைச் சேர்ந்த ஒருவர் இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக பஞ்சாப் மாநில காவல்துறைத் தலைவர் டிஜிபி வி கே பாவ்ரா கூறியுள்ளார்.

சித்து மூசாவாலா ஏன் இந்த கும்பலால் கொலை செய்யப்பட்டார் என்பதைப் பார்க்க வேண்டுமானால், குறைந்தபட்சம் பஞ்சாப் கும்பல்கள் உருவான வரலாற்றில் இருந்து கதையைத் தொடங்க வேண்டும்.

Sidhu Moosewala-Lawrence Bishnoi

கனடாவில் பஞ்சாப் கும்பல்கள்

பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்ட தனிநபர்களால் கனடாவில் ஒரு சமூகம் போல உருவானது தான் பஞ்சாப் - கனடா குற்ற கும்பல்கள்.

இத்தாலிய - கனடிய மாஃபியா கும்பல், ஆசியாவின் ட்ரையாட் குற்ற கும்பலைத் தொடர்ந்து, கனடாவில் செயல்பட்டு வரும் மூன்றாவது பெரிய திட்டமிட்டு குற்றச் செயல்களைச் செய்யும் கும்பல் பஞ்சாபி - கனடிய கும்பல்கள் தான். 2004 ஆர் சி எம் பி பிரிட்டிஷ் கொலம்பியாவின் வருடாந்திர காவல்துறை அறிக்கையின் படி, பஞ்சாபி - கனடா கும்பல்கள்தான் பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே அதிகம் பலம் வாய்ந்த திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Lawrence Bishnoi

எப்படி தொடங்கியது?

சினிமாவில் காட்டப்படுவது போலவே, இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக மற்றவர்களுக்குத் தெரிந்தாலும், தங்கள் இனக் குழுவைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் காவலர்களாகத் தெரிந்தார்கள், தெரிகிறார்கள்.

ஒரு காலத்தில் டொரான்டோவில் உள்ள பேப் அவென்யூ (pape avenue) பகுதி பஞ்சாபி மக்களின் மையமாக இருந்தது. அதாவது பஞ்சாபில் இருந்து பிழைப்பு தேடி வரும் மக்கள், தங்களுக்கு ஒரு நிலையான தங்குமிடம் வேலை எல்லாம் கிடைக்கும் வரை பேப் அவென்யூவில் தான் தங்குவார்கள். அப்படி பஞ்சாபி மக்கள் தங்கி இருக்கும் போது உள்ளூர் மக்கள் அவர்களை துன்புறுத்துவது, கொச்சைப்படுத்துவது என பல சம்பவங்கள் நடந்துள்ளன.

Sidhu Moosewala

ஒருகட்டத்தில் இது கடும் மோதலானது. சில பஞ்சாபி இளைஞர்கள் அடிக்கு அடி, உதைக்கு உதை என முஷ்டியை முறுக்கத் தொடங்கினர். அது தற்போது கும்பல்களாக பரிணமித்து பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. 1990களிலிருந்து இதுவரை சுமார் 165 பேர் இந்த கேங்ஸ்டர் பிரச்சனையில் உயிரிழந்துள்ளனர். பிண்டி ஜோஹல்தான் பஞ்சாபி - கனடிய குற்ற கும்பலின் தலைவராக பரவலாக அறியப்படுகிறார். '

தி எலிட்' என்கிற, சுமார் 30 கொலைகளுக்கு பொறுப்பான குற்ற கும்பலை உருவாகிய சூத்திரதாரி என்றும் கருதப்படுகிறார். இந்த கும்பல் தான் தோசான்ச் சகோதரர்கள், ரான், ஜிம்மி ஆகியோரின் கொலைகளுக்கு பொறுப்பு என்று கூறப்படுகிறது. அப்பேற்பட்ட பிண்டி ஜோஹலே 1998ஆம் ஆண்டு அவரது முன்னாள் நெருங்கிய நண்பர் பால் புட்டரால் கொலை செய்யப்பட்டார். பிற்காலத்தில் பால் புட்டரும் தாக்கப்பட்டார், ஆனால் எப்படியோ ஸ்கெட்சிலிருந்து தப்பித்துக் கொண்டார்.

Salman Khan-Sidhu

பஞ்சாபி கிரிமினல் கேங்குகள்

பிர்ட்டிஷ் கொலம்பியா, ஆல்பெர்டா, ஒண்டாரியோ ஆகிய பகுதிகளில் இந்தோ - கனடிய கிரிமினல் கும்பல்கள் அதிக அளவில் உள்ளனர். 'ப்ரதர்ஸ் கீப்பர்ஸ் கேங்' எனப்படும் கும்பல் கவிந்தர் சிங் க்ரேவாலால் உருவாக்கப்பட்டது. அந்த கும்பலில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ரெட் ஸ்கார்பியன்ஸ் கும்பலில் இருந்தவர்கள் தான்.

பஞ்சாபி மாஃபியா கும்பல் ரஞ்சித் சீமா, தோசான்ச் சகோதரர்கள், ராபி கந்தோலா, பிண்டி ஜோஹல் ஆகியோர்களால் இணைந்து உருவாக்கப்பட்டது.

Sidhu Moosewala

பஞ்சாபி மாஃபியா கும்பல் ஒரு இனவாதத்தை தூக்கிப் பிடிக்கும் குழுவாக மெல்ல மாறியது. தோசான்ச், ஜோஹல்ஸ், அதிவல்ஸ், சீமாஸ், புட்டர்ஸ், தக்ஸ், துரேஸ் என பல கும்பல்கள் இதில் அடக்கம். 1990களில் உருவான இந்த கும்பல்கள் எல்லாம் இப்போதும் செயல்பட்டு வருகின்றன.

உதம் சிங் சங்கேராவால் உருவாக்கப்பட்ட சங்கேரா குற்ற கும்பல், 2009ஆம் ஆண்டு வான்கவரில் நடந்த கேங்க் வார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சுமார் 100 துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பு என காவல்துறை குற்றம்சாட்டியது. வான்கவர் காவல்துறை கட்டம்கட்டி, இந்த கும்பலைச் சேர்ந்த பலரை சிறையில் அடைத்தது. இருப்பினும் இன்றுவரை அந்த கும்பலைச் சேர்தவர்கள் ஆங்காங்கே செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Goldie Brar

சரி யார் இந்த லாரன்ஸ் பிஷ்னாய்?

2017ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் லாரன்ஸ் பிஷ்னாய் மீது கொலை முயற்சி, திருட்டு, அத்துமீறி நுழைதல், மற்றவர்களை துன்புறுத்துவது தொல்லை கொடுப்பது என பல வழக்குகள் இருக்கின்றன. சிறையில் இருந்த படியே தன் கும்பலை இயக்கி வருகிறார்.

பாடகர்கள், பெரும்புள்ளிகள், தொழிலபதிபர்களை மிரட்டி பணம் பரிப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது இந்த கும்பலின் வழக்கம். இவர் பிஷ்னாய் இனத்தைச் சேர்ந்தவர். அவ்வினத்தில் பிளாக்பக் எனப்படும் ஒருவகையான மான் போன்ற உயிரினம், புனித விலங்காகக் கருதப்படுகிறது.

1998ஆம் ஆண்டு பிளாக்பக்குகளை வேட்டையாடிய இந்தி நடிகர் சல்மான் கானை கொலை செய்யுமாறு லாரன்ஸ் பிஷ்னாய் கூறியதாக கடந்த 2018ஆம் ஆண்டு அவர் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கூறியபோது, லாரன்ஸ் பிஷ்னாயின் பெயர் பிரபலமானது.

Goldie Brar

லாரன்ஸ் பிஷ்னாயின் தந்தை பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே லாரன்ஸ் பிஷ்னாய் கல்லூரியின் இளம் தலைவராக வலம் வந்தார். அப்பொது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவரும், அவரது கும்பலும் பிரபலமாயினர்.

கடந்த 2016ஆம் ஆண்டு பஞ்சாப் அரசியல்வாதி ஜஸ்விந்தர் சிங் கொலைக்கும் லாரன்ஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது கும்பலின் உறுப்பினர் சதிந்தர் சிங் என்கிற கோல்டி பிரார், மூசாவாலாவைக் கொன்றது தாங்கள்தான் என பொறுப்பேற்றுள்ளனர்.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் கோல்டி பிராருக்கு, காங்கிரஸ் தலைவர் குர்லால் சிங் பெஹல்வான் வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கடந்த 2021ஆம் ஆண்டு, ஒரு தேதி வரையறுக்கப்படாத கைது வாரண்டை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபரிட்கோட் நீதிமன்றம் வழங்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கோல்டி பிராரோ கனடா நாட்டில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.

இந்த கும்பல் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

கோல்டி பிரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னாய்க்கு நெருக்கமான விக்ரம்ஜித் சிங் மித்துகெரா, குர்லால் பிரார் ஆகியோரின் கொலையில் மூசாவாலாவின் பெயர் அடிபட்டது. ஆனால் மூசாவாலாவுக்கு எதிராக காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதே போல இவர்களுக்கு நெருக்கமான அங்கித் பாடுவின் என்கவுண்டரிலும் மூசாவாலா சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பிஷ்னாய் - பிரார் கும்பல் கருதியது.

பல முறை காவல்துறை மூசாவாலாவைக் குறித்து பேச்சு எடுத்த போதெல்லாம், சித்து மூசாவாலா தன் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி தப்பித்து வந்ததாகவும், ஆகையால் தான் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி பிரார் கும்பல் அவர்களை கொன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?