hijab protest

 

twitter

இந்தியா

Hijab : கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை செல்லும் - கர்நாடக உயர்நீதிமன்றம்

Antony Ajay R

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ஒரு கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. ஹிஜாப் எங்கள் உரிமை என்று இஸ்லாமிய மாணவிகள் முழக்கமிட்டனர். நாடு முழுவதும் பேச்சு பொருளான ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் கலவரங்கள் ஏற்பட வழி வகுத்தது. இந்த ஆண்டில் மிகப் பெரிய பிரச்சனையாக பேசப்பட்ட ஹிஜாப் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

ஹிஜாப் அணிவதற்கான தடையை எதிர்த்துப் போடப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியச் சட்டத்தின் படி ஹிஜாப் அவசியம் அல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அத்துடன் மத வழிபாடு முறையைக் கணக்கில் கொண்டு பள்ளியில் சீருடை அணிவதில் சமரசம் செய்யலாமா? இந்த மனு செல்லத்தக்கதா? ஹிஜாபை அரசு தடை செய்ய முடியுமா? ஆகிய கேள்விகளை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

ஹிஜாப், பள்ளியில் மற்ற மாணவர்களிடம் இருந்து இஸ்லாமிய மாணவர்களைப் பிரித்துக்காட்டுவதாகக் கர்நாடக அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

Hijab

இறுதியாக, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்குப் போடப்பட்ட தடை செல்லும் என நீதிபதிகள் ரித்துராஜ் அவஷ்தி மற்றும் ஜே.என்.கேஷி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து முதல்வர் பொம்மை, “இது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தது. கல்வியை விட எதுவும் முதன்மையானதில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும்” என்று பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடகாவில் இந்த தீர்ப்பினால் பல இடங்களில் பதட்டம் அதிகரித்திருக்கிறது. பல இடங்களில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடுகளுக்கு போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெபூபா முப்தி, "கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடையை நிலைநாட்டும் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஒருபுறம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றிப் பேசினாலும், அவர்களுக்கு எளிய தேர்வுக்கான உரிமையை மறுத்து வருகிறோம். ஹிஜாப் மதம் சார்ந்தது மட்டுமல்ல பெண்களின் உரிமை சார்ந்தது” எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?