Manipur: "எங்களை எலிகளை போல வேட்டையாடினார்கள்" BJP அரசின் இன அழிப்பா? விகடனின் ஆவணப்படம்! Twitter
இந்தியா

Manipur: "எங்களை எலிகளை போல வேட்டையாடினார்கள்" BJP அரசு செய்ததென்ன? - விகடனின் ஆவணப்படம்!

பழங்குடி மக்கள் மெய்திகளால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்ட போது காவலர்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 'ரசித்தனர்' என்றே பழங்குடி மக்கள் வேதனைத் தெரிவித்தனர். மாநில அரசும், முதலமைச்சரும் இணைந்தே இந்த தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாக குக்கி பழங்குடிகள் தெரிவிக்கின்றனர்.

Antony Ajay R

"நாங்கள் படிக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் இந்த வன்முறையினால் அது முடியவில்லை. நான் என் பள்ளியை நினைத்து ஏங்குகிறேன்"

மேலேக்கண்ட வாசகம் ஒரு 12ம் வகுப்பு படிக்கும் குக்கி இளைஞனால் கூறப்பட்டவை. 11ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 3ம்வகுப்பு என பள்ளிக்குச் சென்றுக்கொண்டிருந்த பல குழந்தைகள், கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் இன்று கல்வியை மறந்து துப்பாக்கியுடன் கிராமங்களை பாதுகாத்து வருகின்றன.

ஒரு இரவில், கிராமத்தின் எல்லையில் மணல் மூட்டைகளுக்கு பின்னால் அமர்ந்து கொண்டிருக்கும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

உள்நாட்டில் நடக்கும் இந்த இனப்போர், நாம் செய்திகளில் பார்க்கும் போராட்டமல்ல, நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணை அல்ல களத்தில் வன்முறையின் வீச்சை நாம் கற்பனை செய்துபார்க்க முடியாது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தேவாலயங்கள் நொறுக்கப்பட்டுள்ளன. இங்கு காவல் இருக்கும் இளைஞர்கள், அவர்களது துப்பாக்கியை வெறித்துப்பார்க்கும் குழந்தைகள் இதற்கு முன்னர் அளவில்லாமல் ஓடும் இரத்தத்தைப் பார்த்தவர்கள், இழப்பின் வேதனையில் பீறிட்டு வரும் கதறலையும் கண்ணீரையும் பார்த்தவர்கள், தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளையும், வெடிகுண்டுகளையும் பார்த்தவர்கள் இறுதியாக தங்கள் இனத்தைப் பாதுகாப்பதென்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

மணிப்பூரில் மெய்தி மக்கள் பெரும்பான்மை இனமாக இருக்கின்றனர். குக்கிகள், நாகாக்கள், ஹுமார், ஹோம் உட்பட பழங்குடிமக்கள் மலைகளிலும் மெய்திக்கள் பள்ளத்தாக்கிலும் வாழ்கின்றனர்.

மெய்திக்கள் ஆதிமுதலே தங்களை பழங்குடிகளை விட உயர்வான மனிதர்களாக கருதிவந்த நிலையில் எதனடிப்படையில் திடீரென பழங்குடி அந்தஸ்து வேண்டும் எனக் கேட்கிறீர்கள்? என்பதே பழங்குடி மக்களின் வாதம். இது தான் இந்த பிரச்னையின் அச்சாணி எனலாம். ஆனால் களம் இதை விட பலமடங்கு ஆழமானது.

மேலும் மத்திய மாநில அரசுகளும் தங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக பழங்குடி மக்கள் ஆதாரத்துடன் எடுத்துரைக்கின்றனர்.

2017 முதல் 2021 வரை மணிப்பூரின் மொத்த பட்ஜெட் 21,481 கோடி. அதில் 419 கோடி மட்டுமே மலைப்பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 2020-21 பட்ஜெட் 7000 கோடியில் 41 கோடி மட்டுமே மலைப்பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படி அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள குக்கி மக்களுக்கு ஓரளவு ஆதரவளிப்பது இட ஒதுக்கீடு தான். ஆனால் மெய்தி மக்கள் அதிலும் மூக்கை நுழைக்கும் போது ஏற்பட்டதன் விளைவுதான் இந்த போர் என்கின்றனர் குக்கி மக்கள்.

பள்ளத்தாக்கில் உழைத்து சம்பாதித்து ஓரளவு வசதியாக வசிந்து வந்த பழங்குடி மக்கள், மெய்தி மக்களுடன் ஒன்றுபட்டு இருந்தனர். ஓரிரவில் பிரச்னை வெடிக்கவே உயிரை கையில் பிடித்துக்கொண்டு மலைப்பகுதிகளுக்கு தப்பினர்.

பழங்குடி மக்கள் மெய்திகளால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்ட போது காவலர்கள் அங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ரசித்தனர் என்றே பழங்குடி மக்கள் வேதனைத் தெரிவித்தனர்.

மாநில அரசும், முதலமைச்சரும் இணைந்தே இந்த தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாக குக்கி பழங்குடிகள் தெரிவிக்கின்றனர். கற்களும் தீப்பந்தங்களும் ஆயுதமாக இருந்த சண்டையில் அரசின் ஆதரவுடனேயே மெய்திகளுக்கு துப்பாக்கிகளும், அதிநவீன வெடிகுண்டுகளும் கிடைத்திருக்கிறது.

இவர்களுக்கு எதிராக உண்டிகோலில் இரும்பு கற்களை வைத்து அடித்து சண்டையிட்டனர் குக்கிமக்கள். இதனால் குக்கி மக்களிடையில் உயிர்பலி அதிகமாக இருந்தது. நாட்கள் கடந்து செல்ல செல்ல குக்கி மக்களுக்கும் ஆயுதங்கள் கிடைத்தன. பழைய லாரியின் இரும்பு ராடுகளை வளைத்து, மரக்கட்டைகளை பிளந்து நாட்டுத் துப்பாக்கிகளை குக்கிகள் உருவாக்கும் இடத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஆனந்த விகடனின் இந்த ஆவணப்படம்.

குக்கி மக்களில் 150க்கும் அதிகமானோர் சடலமாக மணிப்பூரின் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிதறிக்கிடக்கின்றனர். மணிப்பூர் பிரச்னையை பின்னணியிடனும் பின்கதைகளுடனும் விளக்கம் ஆவணப்படம் மனிதர் யாவரும் பார்க்க வேண்டியது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?