இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவையே பிரதமர் மோடி அரசு எல்லா பிரச்னைகளுக்கும் குற்றம்சாட்டுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ''அரசியல் காரணங்களுக்காகவும், பொய்யை மறைத்தும் நாட்டை ஒருபோதும் காங்கிரஸ் பிளவுபடுத்தவில்லை. மக்கள் ஒருபுறம், பணவீக்கம், வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். மறுபுறம் நாட்டை ஏழரை ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பாஜக தனது தவறை ஒப்புக்கொள்ளாமல், அதை திருத்தி கொள்ளவும் முன்வராமல், எதற்கெடுத்தாலும், முன்னாள் பிரதமர் நேருவையே குற்றம்சாட்டிவருகிறது,” என்று கூறி உள்ளார்.
Narendra Modi
“பலவீனமானவன், அமைதியானவன், ஊழல்வாதி என்று என் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மற்றும் அதன் பி, சி டீம்கள் நாட்டின் முன் அம்பலபட்டு வருகின்றன என்பதில் எனக்கு ஓரளவு திருப்தியாக உள்ளது. பாஜக அரசு கடைபிடிக்கும் தேசியவாதம் என்பது பிரிட்டிஷின் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது. ஒன்றிய அரசுக்கு பொருளாதார கொள்கை குறித்து எந்த புரிதலும் இல்லை,” என்று கூறி உள்ளார்.
“வெளியுறவுக்கொள்கையில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. சீனா நமது எல்லையில் அமர்ந்துகொண்டு நம்மை ஒடுக்க பார்க்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்,’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.