போர் சேதம்

 

Twitter

இந்தியா

Morning News Tamil : 12000 ரஷ்ய வீரர்கள் மரணம்; போனி கபூர், ஹெச்.வினோத்-க்கு நோட்டீஸ்

Antony Ajay R

12000 ரஷ்ய வீரர்கள் மரணம் - பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 16வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,800க்கு மேற்பட்ட உக்ரைன் ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல், ரஷ்யாவும் போரில் ஏராளமான ராணுவ தளவாடங்களை இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுவரை 49 விமானங்கள், 81 ஹெலிகாப்டர்கள், 335 பீரங்கிகள், 2 கப்பல்கள், 526 ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட ரஷ்ய ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சுமார் 12 ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் போரில் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடையில் ரஷ்யா - உக்ரைன் நாடிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தையில் நேர்மறையான முன்னேற்றங்கள் உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருக்கிறார்.

ஏவுகணை

பாகிஸ்தானில் விழுந்த இந்திய சூப்பர் சோனிக் ஏவுகணை

பாகிஸ்தான் வான் வெளியில் 124கி.மீ ஊடுருவி விழுந்த ஏவுகணை தற்செயலான விபத்து என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து தங்கள் நாட்டு வான் பகுதியில் விழுந்த இந்திய ஏவுகணை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இதற்காக வருத்தம் தெரிவித்த இந்தியா, சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஏவுகனை பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்தாலோ அல்லது ஏவுகனைப் பாதையில் பயணிகள் விமானிகள் சென்றிருந்தாலோ பல உயிர்களுக்கு ஆபத்து விளைவித்திருக்கும். சம்பவம் மார்ச் 9ஆம் தேதி நடந்தபோதும், அது குறித்து மார்ச் 10ஆம்தேதியும் மார்ச் 11ஆம் தேதி மாலை 5 மணிவரை - இந்திய பாதுகாப்புத்துறையோ வெளியுறவுத்துறையோ எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தன.


இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் இடையில் மூன்று போர்கள், பல துப்பாக்கி சண்டைகள், சமீபத்தில் 2019ம் ஆண்டு விமான சண்டைகள் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

சீனா

சீனாவில் புதிய வைரஸ் - மீண்டும் ஊரடங்கு

சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வரும் இந்த நகரில், வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன, எப்போதிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

காட்டுத் தீ

கொடைக்கானலில் பரவும் காட்டுத் தீ

கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள் கருகிவருகின்றன. பரவிவரும் காட்டுத்தீயை அணைக்க நவீன உபகரணங்கள் இல்லாததால் தீ பரவுவதை தடுக்கமுடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இரவில் குளிர்ந்த வானிலை காணப்பட்டாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்துவருகிறது. கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவத்துவங்கியது. வெயிலின் தாக்கம் காரணமாக செடிகள் காய்ந்தநிலையில் இருப்பதால் தீ பரவுவதன் வேகம் அதிகரித்துள்ளதால் 100 க்கும் மேற்பட்ட பரப்பில் தீ பரவி அப்பகுதியில் உள்ள அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் கருகிவருகின்றன. இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

கடுமையான வெப்பம் காரணமாக தீ பற்றி எரிகிறதா அல்லது யாரேனும் தீவைத்தார்களா என்பது குறித்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் விசார‌ணை மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் தீ வைக்கும் ந‌ப‌ர்க‌ள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வலிமை

மெட்ரோ படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள் திருட்டு - வலிமை படக் குழுவிற்கு நோட்டீஸ்

மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச். வினோத் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மெட்ரோ படத்தில் வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மெட்ரோ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரபட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மார்ச் 17ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?