எதிர்த்து நின்ற பெண் கூறுவது என்ன?

 

NewsSense

இந்தியா

Morning News Wrap: ஹிஜாப் அரசியல் - எதிர்த்து நின்ற பெண் கூறுவது என்ன?

இந்த நாளை தொடங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன

Antony Ajay R

"நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன், கல்வி தான் எங்களுக்கு முன்னுரிமை" - ஹிஜாப் விவகாரத்தில் சீறிய பெண்

கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வந்த நிலையில், தற்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று காலை மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். உடனே கல்லூரி ஊழியர்கள் வந்து அப்பெண்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் அந்த மாணவி முஸ்கான், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கும்போது, “நான் கவலைப்படவில்லை. எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே கல்லூரிக்கு வந்தேன்.புர்கா அணிந்ததால் என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்தே நான் அல்லாஹு அக்பர் கூற ஆரம்பித்தேன்.

எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர். காவித் துண்டு அணிந்திருந்தவர்கள் வெளியிலிருந்து வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன். இதற்கான போராட்டம் தொடரும். ஆடைக்காக அவர்கள் கல்வியை அழிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத்

மதமாற்ற திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை, 1 லட்சம் அபராதம் - யோகி ஆதித்யநாத் தேர்தல் அறிக்கை

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லவ் ஜிகாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை; 1 லட்சம் ரூபாய் அபராதம், ராமாயண பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், லவ் ஜிகாத் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் . உத்தர பிரதேச பாஜக அரசு கடந்த ஆண்டு உ.பி. சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்டம் 2020ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின்படி, ஒருவரை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் ₹ 15,000 அபராதமும் விதிக்கப்படும்.


18 வயதுக்கு குறைந்தவர்களை மதமாற்றம் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனை 10 ஆண்டுகளாகவும், அபராதம் ₹ 25,000 ஆகவும் நீட்டிக்கப்படலாம். கட்டாய மதமாற்றம் பெரிய அளவில் நடத்தப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் ₹ 50,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், கல்லுரி பெண்களுக்கு இலவச இருசக்கர வாகனம், 60 வயதை கடந்த முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம், ஏழை பெண்கள் திருமணத்திற்கு ரூ.1 லட்சம் உதவி போன்ற அறிவிப்புகளும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ

தடுப்பூசிக்கு எதிர்ப்பு : கனடாவில் போராட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்ட அதிபர்

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் பாரவூர்தி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு' என்ற பெயரில் பாரவூர்தி சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

அந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் இரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார்.

பெருந்திரளானோர் ஒன்று கூடி நடத்தி வரும் இந்த போராட்டத்தால் ஒட்டாவா நகரம் நிலை குலைந்து போய் உள்ளது.இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஒட்டாவா நகர மேயர் ஜிம் வாட்சன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில் மக்களின் இந்த போராட்டம் “நிறுத்தப்பட வேண்டும்” என கூறி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில், “கனடா நாட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தங்கள் அரசாங்கத்துடன் உடன்படாமல் இருக்கவும், தங்கள் குரலைக் கேட்கவும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம்.

ஆனால் நமது பொருளாதாரத்தையோ, நமது ஜனநாயகத்தையோ அல்லது நமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க அவர்களுக்கு உரிமை இல்லை. அது நிறுத்தப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

ஜெய்பீம் திரைப்படம்

ஆஸ்கர்: இறுதி பட்டியலில் ஜெய்பீம் இடம் பெறவில்லை

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் இடம்பெறவில்லை.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய் பீம்’ கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்தியா மட்டுமல்லாது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தையும் குவித்தது. சமீபத்தில் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்ற நிலையில், கடந்த மாதம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் படங்கள் பட்டியலிலும் ‘ஜெய் பீம்’ நேரடியாக இடம்பிடித்து புருவம் உயர்த்த வைத்தது. இந்தத் தகுதிப் பட்டியலில் ’ஜெய் பீம்’ படத்துடன் சேர்த்து மொத்தம் 276 படங்கள் போட்டியிட்டன.

இந்தப் படங்களில் 10 படங்கள் மட்டும் தற்போது ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. இதில், ‘ஜெய் பீம்’ இடம்பெறவில்லை. நிச்சயம் ஆஸ்கர் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெய் பீம்’ இடம்பெறாததால் சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும், ‘ஆஸ்கர் வெல்லவில்லை என்றால் என்ன? மக்களின் மனங்களில் ஏற்கனவே ஆஸ்கரை வென்றுவிட்டது’ என்று அதே ஆதரவு நெகிழ்ச்சியுடன் கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

மீனவர்கள்

ராமேசுவரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கையில் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து திங்கட்கிழமை 500-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மூன்று விசைப்படகுகளையும், அதிலிருந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 22-ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி ராமேசு வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மீனவர்களை கடந்த ஜனவரி 25-ம் தேதி இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. மீனவர்களில் பலருக்கு கரோனா பாதிக்கப்பட்டு இருந்ததால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. மேலும், கடந்த வாரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மற்றும் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேட்டைச் சேர்ந்த 21 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவ சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீனவர் கள் சிறைபிடிப்பைக் கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று (புதன்) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாகவும், வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

மேலும், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு மற்றும் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதைக் கண்டித்து பாம்பன் கடற்கரையில் நேற்று கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?