ஜெசிந்தா ஆர்டர்ன்

 

Twitter 

இந்தியா

Morning News Wrap : கொரோனா காரணமாக திருமணத்தை நிறுத்திய பிரதமர்- இன்றைய முக்கிய செய்திகள்

Antony Ajay R

நியூசிலாந்து பிரதமர் திருமணம் நிறுத்தம்

வெலிங்டன்-கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், 41, தன் திருமணத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி பொது நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் மக்கள் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் இறுதிவரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் வெளியிட்டார். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் காரணமாகப் பிரதமர் ஜெசிந்தா, தன் திருமணத்தைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு முதல் கிளார்க் கேபோர்ட், 45, என்பவருடன் பிரதமர் ஜெசிந்தா ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

கிளார்க்கை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வரும் ஜெசிந்தா, 2018ல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.இவர்கள் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர். தேதி குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளால் தன் திருமணத்தை ஜெசிந்தா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அகிலேஷ் யாதவ்

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு டி.வி. சேனல்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாடி கட்சியும் நேற்று கடிதம் எழுதியுள்ளது. அதன் நகல், உத்தரப்பிரதேச மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் வழங்கப்பட்டுள்ளது

சமாஜ்வாடி கட்சி மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் கூறுகையில், “முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையிலும் டி.வி. சேனல்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. நியாயமான தேர்தலுக்குக் கருத்துக்கணிப்பு இடையூறாக அமையும் என்பதால், இதற்குத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்” என்றார்.

பி.வி.சிந்து 

சர்வதேசப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி.சிந்து

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச சையது மோடி 2022 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சர்வதேச சையது மோடி 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது.

தகுதிச் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற இருவருக்கு இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் மகளிர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில்

2ம் ஆண்டு பி டெக் படித்து வரும் நாக்பூரைச் சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் என்ற மாணவி நேருக்கு நேர் மோதினர்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதால் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் மாளவிகா பன்சோட்டை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, ரஷ்யாவின் ஈவ்ஜீனியா கொசெட்ஸ்கயாவை முதல் செட்டில் 21-11 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

பி.வி.சிந்து வெற்றி பெற ஒரு செட் மீதம் இருந்த நிலையில், ரஷ்ய வீராங்கனை பாதியிலேயே விலகிக் கொள்வதாக அறிவித்ததால் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

மு.க.ஸ்டாலின் 

ஐ.ஏ.எஸ் தேர்வு விதிகளில் மாற்றம் கொண்டுவருவதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

ஐஏஎஸ் - ஐபிஎஸ் விதிகளில் மாற்றம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், மாநில அரசின் ஒப்புதலின்றியே ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மத்திய அரசு அழைத்துக் கொள்ள முடியும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனக் கூறி, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த திட்டத்தை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்றும் இந்த உத்தேச திருத்தங்களுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

IND vs SA 

மூன்றாவது ஒரு நாள் போட்டி வெள்ளை சலவை செய்யப்பட இந்திய அணி

கேப்டவுனில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. விராட் கோலி, தீபக் சாகர் ஆகியோரின் அரை சதம் வீணானது. தொடர்ந்து இந்திய அணி தோல்வியடையும் ஐந்தாவது போட்டி இதுவாகும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?