Myanmar school students Twitter
இந்தியா

கல்விக்காக தினமும் நாடு எல்லைகளை கடக்கும் மியான்மார் குழந்தைகள் - விரிவான தகவல்கள்

"கௌமாவியில் நிலவரம் இன்னும் சீரடையவில்லை; இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை; இதற்காக எங்கள் குழந்தையின் படிப்பு வீணாவதில் எனக்கு உடன்பாடு இல்லை; ஜொகாவ்தாரில் உள்ள ஜோசப் பள்ளியில் அவளைச் சேர்ந்த்துவிட்டோம்" என்கிறார், மியான்மர் குழந்தையின் தாய்.

NewsSense Editorial Team

பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக நாள்தோறும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும் குழந்தைகளின் கதை இது... மியான்மர் எனப்படும் பழைய பர்மாவிலிருந்துதான் இப்படி இந்தியாவின் மிசோரமுக்கு குழந்தைகள் தினந்தோறும் வந்துபோகின்றனர்.

ஜூன் மாதத்தின் காலை... 7.50 மணி இருக்கும்... நான்கு வயது சிறுமி மாங்குய், அவளுடைய தாயார் சின்புய்யின் கையைப் பிடித்தபடி, தன் நாட்டு எல்லையைத் தாண்டி, இந்தியாவுக்குள் கால் வைக்கிறாள். இளஞ்சிவப்பு நிறத்திலான மழைக் கோட்டை அணிந்திருக்கும் அந்தச் சிறுமியை, ஒரு பெரிய குடையைப் பிடித்தபடி எல்கேஜி வகுப்புக்குக் கூட்டிச்சென்றபடி இருக்கிறார், குழந்தையின் தாய் சின்புய்.

தியா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தைக் கடந்தால், இரும்பினால் ஆன நுழைவு வாயிலும், அதன் மேலே ஒரு சிமெண்ட் வளைவும், அதைத் தொடர்ந்து ’நன்றி மீண்டும் வருக’ எனக் கூறும் பெயர்ப் பலகையும் அவர்களுக்குத் தென்படும்.

இது ஏதோ சுற்றுலா மைல்கல் போன்றது அல்ல, அந்தப் பாலம், அதன் கீழ் ஓடும் ஆறு, அந்த இடம் காட்டிப் பலகை என ஒவ்வொன்றுமே முக்கியமானவை.

மாங்குய்யும் அவளின் அம்மாவும் தினமும் கடந்துசெல்லும் அந்த இடம், மியான்மாருக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட சர்வதேச எல்லை ஆகும்.

மாங்குய் மட்டுமல்ல அவளைப் போன்ற பல நூறு குழந்தைகள் தினமும் இப்படி நாடுவிட்டு நாடு வந்து பள்ளியில் படித்துவிட்டுச் செல்கின்றனர்.

Border

கடந்த ஆண்டு பிப்ரவரியில் மியான்மரில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, அங்கு இராணுவ ஆட்சி வந்தது. அதையொட்டி நிகழ்ந்த வன்முறைகளால் ஏராளமான பள்ளிகள் கட்டாயமாக மூடிவைக்கப்பட்டன. குறிப்பாக, இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் இது அதிக அளவில் நடைபெற்றது.

மிசோரம் மாநிலம், சம்பாய் மாவட்டத்தின் ஜொகாவ்தார் நகர் பகுதியை ஒட்டிய கௌமாவி, இப்படிப் பாதிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில் ஒன்று.

கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த ஏப்ரலில் மிசோரமில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இரண்டரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், புதிய பிரச்னையும் வந்துசேர, அக்கரையில் உள்ள மியான்மர் குழந்தைகளுக்கு, இந்தப் பக்கம் பள்ளிகள் திறக்கப்பட்டது ஏக்கத்தை அதிகரிக்கச் செய்தது.

அதன் விளைவே, மான்குய்யைப் போன்ற சுமார் 500 குழந்தைகளைத் தினமும் இந்திய நாட்டுக்கு வந்து கல்வி கற்கச் செய்திருக்கிறது.

பள்ளிக்கல்விக்காக அந்தக் குழந்தைகளும் அவர்களின் தாய், தந்தையரும் அன்றாடம் நாடு கடக்கின்றனர்.

myanmar school students

"கௌமாவியில் நிலவரம் இன்னும் சீரடையவில்லை; இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை; இதற்காக எங்கள் குழந்தையின் படிப்பு வீணாவதில் எனக்கு உடன்பாடு இல்லை; ஜொகாவ்தாரில் உள்ள ஜோசப் பள்ளியில் அவளைச் சேர்ந்த்துவிட்டோம்" என்கிறார், சின்புய்.

ஒவ்வொரு நாளும் இந்த மியான்மர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்காக சுமார் அரை மணி நேரம் நடக்கின்றனர்.

பள்ளி நாள்களில் மிசோரம் எல்லையில் உள்ள நுழைவாயிலில் மாநில காவல்துறையினர் காலை 7 மணி முதல் 9 மணிவரை இவர்களை உள்ளே விடுகின்றனர். எல்லைப்பகுதியில் இந்த காவல்துறைச் சாவடி ஒன்றில்தான் ஆட்கள் இருக்கின்றனர். கொஞ்சம் தள்ளி இருக்கும் சுங்கச்சாவடியில் பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை. காலை 9 மணி ஆனதும் நுழைவாயிலின் இரும்புச்சங்கிலியை நெருக்கமாகக் கொண்டுவந்து விடுகின்றனர். ஆனாலும் புத்தகப் பையுடன் வரும் குழந்தைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்படாது.

மியான்மரிலிருந்து தினமும் ஜொகவ்தாருக்கு வரும் பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச்சரியாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், 500 பேர்வரை சில நாள்களில் பதிவாகிறது என்கின்றனர் எல்லைக்காவல் பணியில் இருக்கும் மிசோரம் மாநிலக் காவல்துறையினர்.

இந்திய எல்லைக்குள் வரும் மாணவர்கள் ஒரே பள்ளியில் படிப்பதில்லை. ஒன்பது அரசு, தனியார்ப் பள்ளிகளில் அவர்கள் பிரிந்துபிரிந்து படிக்கின்றனர். இங்குள்ள மாணவர்களுடன் மட்டுமின்றி மியான்மரிலிருந்து அகதியாக வந்து, இங்கு முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளும் அவர்களுடன் சேர்ந்து படிக்கின்றனர்.

கடந்த 2018இல் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பழங்குடி மக்கள் சர்வதேச எல்லையைத் தாண்டிச் செல்லவும் விசா இல்லாமல் 16 கிமீவரை சென்றுவரவும் அனுமதி உண்டு.

மிசோரம் மாநிலத்தில் மட்டும் 10 கிமீ தொலைவுக்கு நீண்டிருக்கும் எல்லைப்பகுதியில் 250 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 3 இலட்சம் பேர் வசித்துவருகின்றனர். ஜொகவ்தார் உள்பட எல்லைப்பகுதி நகரங்கள் வழியாக முறைப்படியும் முறையில்லாமலும் 150 இடங்களில் நாடுகடந்து சென்றுவருகின்றனர்.

இப்படி நாடுகடந்து வரும் குழந்தைகள் மியான்மரில் படித்த வகுப்பைவிட ஒரு வகுப்பு குறைவாகவே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

myanmar school students

"கொரோனாவாலும் வன்முறையாலும் அவர்கள் பள்ளிப்படிப்பை இழந்திருக்கின்றனர்; இதனால் அவர்களின் நிலை இன்னும்கூட மோசமாகக்கூடும். அவர்களுக்காக கூடுதல் வகுப்பறைகளை உருவாக்கியுள்ளோம்" என்கிறார் ஜோசப் பள்ளியின் முதல்வர், பிரான்சிஸ் செய்லோ. இந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படிக்கும் 524 குழந்தைகளில் 206 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள்.

பன்னிரண்டு வயது சிறுமி கிரிமிங்கின்னுக்கு ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி; ஆனால் தன்னுடைய நாட்டில் படிக்க முடியவில்லையே என அவளுக்கு மனத்தாங்கல்.

அங்கிருந்தால் நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்திருப்பேன்; இங்கு மீண்டும் என்னை 5ஆம் வகுப்பிலேயே போட்டுவிட்டார்கள் என்பது அவளின் வருத்தம்.

சிறுமி கிரிமிங்கின்னுடைய கிராமத்துக்குப் பெயர், தியோ. தியா ஆற்றைத் தாண்டினால் கௌமாவியை அடுத்து அவளின் ஊர் இருக்கிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த லால்சியமதராவும் பெரும்பாலும் கிரிமிங்கின்னுடன் பள்ளிக்கு வருகிறாள்.

அந்தச் சிறுமிக்கு, எப்படியோ பள்ளிக்கு வருகிறோமே என்பதில் அவ்வளவு ஆனந்தம்!

இந்தத் தனியார்ப் பள்ளிக்கு 2 கிமீ தள்ளி, மிசோரம் அரசாங்கம் நடத்தும் மழலையர் பள்ளி ஒன்று உண்டு. அதில் 306 படிக்கிறார்கள்; அவர்களில் 215 குழந்தைகள் மியான்மரைச் சேர்ந்தவர்கள். மேற்கொண்டும் வருபவர்களைச் சேர்க்கும்படியாக, புதியதாக முன் மழலையர் வகுப்பையும் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார், அந்தப் பள்ளியின் முதல்வர் லாய்ரிக்குமா.

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், மியான்மர் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குக் கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு சில எச்சரிக்கைக் குறிப்புகளை வழங்கியது. குறிப்பாக, அதிக அளவிலான அகதிகளை உட்புக விடவேண்டாம் என்பது அதில் முக்கியமானது.

ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே மிசோரம் மக்களும் மியான்மரின் சின் மாகாணத்தவரும் உணர்வுரீதியாகப் பிணைக்கப்பட்டவர்கள். இரு தரப்பு மக்களும் நீண்ட காலமாக அணுக்கமான உறவைக் கொண்டவர்கள்.

இதனால் அகதிகள் பிரச்னை மாநிலத்தின் உணர்வுரீதியான விவகாரம் என்பதால், மனிதாபிமான அடிப்படையில் மியான்மர் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவேண்டும் என மிசோ முதலமைச்சர் ஜோரம்தங்கா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கும் இதுபற்றி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த 4ஆம் தேதிவரை மியான்மரிலிருந்து 29ஆயிரத்து 964 பேர் மிசோரமுக்கு அகதிகளாக வந்துள்ளனர்; அவர்களில் 149 முகாம்களில் 11 ஆயிரத்து 833 பேர் அரசின் முகாம்களில் வசித்துவருகின்றனர் என்கிறார், மாநிலத்தின் உள்துறை கூடுதல் செயலர் வன்லாமாளவியா.

ஜொகவ்தாரில் உள்ள இப்படியான மூன்று முகாம்களில் ஒன்றைக் கடந்துதான், மான்குய்யும் அவளுடைய அம்மாவும் முற்பகல் 11.30 மணிக்கு வகுப்பை முடித்துவிட்டு, மீண்டும் நாடு திரும்பத் தயாராகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?