கௌதம் அதானி இந்தியாவின் மிக முக்கியமான கோடீஸ்வரர்களுள் ஒருவர். சிறிய தொழிலாகத் தொடங்கி தற்போது மிகப் பெரிய வர்த்தக கோட்டையை கட்டியிருக்கிறார். துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை எரிசக்தி எனப் பல துறைகளில் தனது கால்தடத்தைப் பதித்துள்ளார். தற்போது, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் போன்ற துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி உலகின் பத்தாவது கோடீஸ்வரராக வளர்ந்திருக்கிறார்ஆதானி.
இதன் மூலம் தற்போது இந்தியாவின் முதல் பணக்காரராகவும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் திகழ்கிறார் அதானி. பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் தெரிவித்திருப்பதின் படி, முகேஷ் அம்பானி 87.9 பில்லியன் சொத்துக்களுடன் உலகிலேயே 11வது பணக்காரராக உள்ளார். கவுதம் அதானி 88.5 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகிலேயே 10வது பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அதானி
கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், நிலக்கரி சுரங்கங்கள் மட்டுமின்றி விமான நிலையங்கள், தரவுகள் மையங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் அதானி நிறுவனம் தனது முதலீடுகளைச் செலுத்தி பன்மடங்கு லாபம் கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதானியின் பங்கு மதிப்பு 600 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர்களான அம்பானியும், அதானியும் நிலக்கரியில் தங்களது முதலீடுகளைச் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 பில்லியன் மொத்தமாக அதிகரித்துள்ளது. ஆனால், முகேஷ் அம்பானி 2.7 பில்லியன் குறைந்துள்ளது. 235 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரராக நீடிக்கிறார். 183 பில்லியன் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் உள்ளார். மூன்றாவது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காவது இடத்தில் பில்கேட்ஸ் உள்ளனர்.
ஆஸ்திரேலியாபோராட்டம்
அதானிக்கு எதிராக ஆஸ்திரேலிய பழங்குடிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அவருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கம் பேச்சு பொருளாகியிருக்கிறது. கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட சுற்றுசூழலியல் ஆர்வலர்கள் அதானிக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். எனினும் அம்பானி மற்றும் அதானி ஆகிய இரண்டு கோடீஸ்வரர்களும் தொடர்ந்து நிலக்கரியில் முதலீட்டைச் செலுத்தி வருகின்றனர்.
விமான போக்குவரத்துத் துறையில் முன்னணியில் இருக்கும் அதானி நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 விமான நிலையங்களைச் சொந்தமாக்கி உள்ளது. இந்தியாவில் கால் பங்கு வான்வழி போக்குவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
இப்போது இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் அதானி, கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர் 1980-களின் முற்பகுதியில் மும்பையின் வைரத் தொழிலில் தனது அதிர்ஷ்டத்தை முதன்முதலில் முயற்சித்தார். 1988ல் அதானி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். முதல் முயற்சி வெற்றியடையாவிட்டால் குஜராத்தில் உள்ள தனது அண்ணனின் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் அவருக்கு உதவியாளராக பணிபுரிந்திருப்பார் அதானி.