என்.எஸ்.இ எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டு வந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் முகம் தெரியாத சாமியார் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை என்.எஸ்.இ-ன் ஆலோசகராக நியமித்ததாகக் கூறப்படுகிறது. அதுவும் இந்த பணியிடத்தை நிரப்ப எந்தவித விளம்பரமும் செய்யாமல் வெறும் ஆனந்த் சுப்பிரமணியனை மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைத்திருக்கிறார்.
பணியில் நியமிக்கப்பட்ட பின்னர் ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணா இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்குச் சந்தையின் பல முடிவுகளை சித்ரா முகம் தெரியாத இமாலய சாமியாரின் ஆலோசனைப்படி எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனந்த் சுப்பிரமணியனை பணியமர்த்தியதும் அப்படியே நடந்திருக்கிறது.
சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா, ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் முகம் தெரியாத சாமியாரின் கூட்டுக் கொள்ளை 2016-ல் தான் வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இருவரும் என்.எஸ்.இ-யிலிருந்து நீக்கப்பட்டனர்.
சமீபத்தில் சித்ரா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதனையடுத்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. ஆனந்த் மூலமாக அந்த சாமியார் ஆதாயம் அடைந்து வந்ததாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது அந்த சாமியார் போல ஈ-மெய்ல் அனுப்பியதே ஆனந்த் தான் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆனந்த் கைது வழக்கில் இருக்கும் பல முடிச்சுகளை அவிழ்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.