Parle G : How Shaktiman boosted Parle G sales from 50 tons to 2,000 tons a month Twitter
இந்தியா

சக்திமானால் சாதித்த ParleG : பார்லே கம்பெனி இந்திய பிஸ்கெட் சந்தையின் பாஷா ஆனது எப்படி?

ஒவ்வொரு பெருநிறுவனமும் தன்னுடைய பொருட்கள் அல்லது சேவைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஒரு விளம்பரத் தூதரை நியமிப்பர். அப்படி பார்லி நிறுவனம், தன் விளம்பரத் தூதராக முகேஷ் கண்ணா என்கிற நடிகரைத் தேர்வு செய்தது.

NewsSense Editorial Team

பார்லே என்கிற நிறுவனத்துக்கு பார்லி ஜி பிஸ்கெட்டுகள் தான் முகவரி என்றால் அது மிகையல்ல. அப்பேற்பட்ட பார்லி ஜி பிஸ்கெட்டுகள் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியர்களின் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச், ஏப்ரல், மே மாத காலங்களில் பார்லே நிறுவனம், கடந்த 8 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிக பிஸ்கெட்களை விற்பனை செய்ததாக, அந்நிறுவன தரப்பிலிருந்தே செய்திகள் வெளியாயின என்றால், பார்லி ஜி இப்போது எந்த அளவுக்கு இந்திய மக்களோடு நெருக்கமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவில் சுமாராக 130 உற்பத்தி ஆலைகளில் பார்லி கம்பெனியின் பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறதாம். அதில் 10 ஆலைகள் மட்டுமே பார்லி நிறுவனத்துக்கு சொந்தமான தயாரிப்பு கம்பெனிகள். மற்ற 120 உற்பத்தி ஆலைகள் ஒப்பந்த அடிப்படையில் பார்லி பிஸ்கெட்களை தயாரித்துக் கொடுப்பவைகளாக இருக்கின்றன.

பொதுவாக, பார்லி கம்பெனி, நாள் ஒன்றுக்கு சுமார் 400 மில்லியன் (40 கோடி) பார்லி ஜி பிஸ்கெட்களை தயாரிப்பார்களாம். இது 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய கணக்கு. கொரோனாவுக்குப் பிறகு இது அதிகரித்திருப்பதாக சில வணிக பத்திரிகை வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இப்படி கோடிக் கணக்கில் பிஸ்கெட்டுகளை இந்திய மக்கள் வாங்கிக் குவிக்கவும், சுமார் 8 தசாப்தங்களைக் கடந்தும் இந்தியர்களிடமிருந்து பார்லி ஜி பிஸ்கெட்டைப் பிரிக்க முடியாமல் இருப்பதற்கும் என்ன காரணம்? ஒரு சொல்லில் விடை வேண்டுமானால்... விளம்பரம்.

1980களின் பிற்பகுதி மற்றும் 1990களின் தொடக்கத்தில் இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு சுமார் 50 டன் பார்லி ஜி பிஸ்கெட்டுகளை விற்றுக் கொண்டிருந்த பார்லி நிறுவனம், 1990களின் பிற்பகுதியில் மேற்கொண்ட ஒரே ஒரு விளம்பர யுக்தியில் தடாலடியாக 2,000 டன் பிஸ்கெட்டுகளை விற்கத் தொடங்கியது.

சக்திமான் எனும் தூதன்

ஒவ்வொரு பெருநிறுவனமும் தன்னுடைய பொருட்கள் அல்லது சேவைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஒரு விளம்பரத் தூதரை நியமிப்பர். அப்படி பார்லி நிறுவனம், தன் விளம்பரத் தூதராக முகேஷ் கண்ணா என்கிற நடிகரைத் தேர்வு செய்தது.

யார் இந்த முகேஷ் கண்ணா? யாரோ இந்தி நடிகர் போல... என நம்மில் பலரும் கடக்கலாம். ஆனால் சக்திமான் என்றால், இந்த செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் ஒரு பூரிப்பு ஏற்படலாம். சக்திமான் சீரியலில் சக்திமானாக நடித்த நடிகர் தான் முகேஷ் கண்ணா.

மகாபாரத சீரியலில் கூட பீஷ்மராக நடித்து வலதுசாரி அமைப்பினர் மத்தியில் பெரும் புகழ்பெற்ற நடிகர் இவர்.அப்போது பார்லி நிறுவனம் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த பிரச்னையோடு விளம்பர பிரசாரகர் சஞ்ஜய் முத்னானேவை (Sanjay Mudnaney) அணுகியது பார்லி நிறுவனம். அப்போது பார்லி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவராக இருந்த பிரவீன் குல்கர்னி தமிழ்நாட்டுச் சந்தையில் நிலவும் சவால்களையும் முத்னானேவிடம் விளக்கினார்.

தமிழ்நாடு பிஸ்கெட் சந்தையில் பால் பிஸ்கெட்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் அதில் பிரிட்டானியா நிறுவனத்தின் மில்க் பிகீஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதை உடைத்து பார்லி ஜியை தமிழ்நாட்டு மக்கள் கையில் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒரு யுக்தி - "வருகிறார் சக்திமான்"

1990களின் பிற்பகுதியிலேயே, தமிழ்நாட்டில் சக்திமான் சீரியல் மிகப் பிரபலம். தமிழ்நாட்டு குழந்தைகள் தங்கள் சூப்பர் ஹீரோ சக்திமானுக்கான எதையும் செய்யத் தயாராக இருந்தனர்.

சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்து வந்த முகேஷ் கண்ணா, சென்னையில் தன் குழந்தை ரசிகர்களை சந்திப்பார். ஆனால், குறைந்தபட்சம் இரு பார்லி ஜி பிஸ்கெட் ரேப்பர்கள் கையில் இருந்தால் தான், சக்திமான் இருக்கும் அரங்கத்துக்குள் ஒருவர் நுழைய முடியும் என ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். பள்ளிகள், நாளிதழ்களில் எல்லாம் இது தொடர்பான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டன. சில ஆயிரம் குழந்தைகளாவது கட்டாயம் வந்து சேர்வர் என சஞ்ஜய் முத்னானேவின் அணி கணித்திருந்தது.

சென்னையில், ஒரு பெரிய மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகேஷ் கண்ணாவும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்கு வந்தடைந்தார். காலை நேரத்தில் ஈ ஆடியது. ஒரு சில குழந்தைகளைத் தவிர வேறு யாரும் வரவில்லை.

மெல்ல ஒற்றை இலக்கத்தில் இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை, இரட்டை இலக்கமாகவும், பிறகு மூன்று இலக்கமாகவும் அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த குழந்தைகள், அடுத்தடுத்து பேருந்துகளில் கூட்டங்கூட்டமாக வரத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறியது விளம்பர அணி. நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. மாலை 6 மணி வரை நடந்த இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சக்திமானைச் சந்தித்து இருந்தனர்.

இந்த செய்தி, அடுத்த நாள் பல்வேறு நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாகவும், மற்றவர்களின் சுவாரசியத்தைத் தூண்டக் கூடிய செய்திகளாகவும் வெளியாயின. சஞ்ஜய் முத்னானவே கணித்ததைவிட அந்த விளம்பரப் பிரசாரம் பெரிய வெற்றி பெற்றது.

விளைவு என்ன?

முகேஷ் கண்ணா சென்னைக்கே சென்று தன் குழந்தை ரசிகர்களைச் சந்தித்துவிட்டார், அது தலைப்புச் செய்தியாகிவிட்டது. மறுபக்கம் பார்லி ஜி பிஸ்கெட்டின் விற்பனை மாதம் ஒன்றுக்கு 50 டன்னாக இருந்தது. காலப் போக்கில் 2,000 டன்னைத் தொட்டது. கிட்டத்தட்ட 40 மடங்கு வளர்ச்சி கண்டது பார்லி ஜி.

இவை அனைத்தும் இணையம், கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற எதுவுமே இல்லாத காலத்தில் செய்து காட்டினர். வாடிக்கையாளர்கள் & நுகர்வோர்கள் வெறுமனே ஒரு பொருளை வாங்குவது இல்லை, அப்பொருளின் பின்னிருக்கும் கதையையும் சேர்த்து வாங்குகிறார்கள் என்பதை இப்பிரசாரம் நிரூபித்தது.

எனவே, எப்போதும் ஒரு பொருளை விற்காதீர்கள், கதை சொல்லுங்கள். ஒரு பொருளின் சாதகங்களை விற்காதீர்கள், ஒருவர் மனதில் நிலைத்து நிற்கும் படியான ஓர் அனுபவத்தை உருவாக்குங்கள். மக்கள் பொருட்களைத் தேடி வந்து வாங்குவர். சேவைகளை தேடி வந்து பெறுவர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?