உலக பொருளாதார மாநாடு யூடியூப் லைவில் இந்திய பிரதமர் மோடி சில வினாடிகள் பேச முடியாமல் திணறிய வீடியோ இணையதளத்தில் வைரலனது. டெலிப்ராப்டரில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்குக் காரணம் எனவும் பிரதமரால் டெலிப்ராம்ப்டர் இல்லாமல் சில வினாடிகள் கூட பேச முடியாது எனவும் காங்கிரஸ் கட்சியினரும் நெட்டிசன்களும் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். அப்படி அங்கு என்ன தான் பிரச்சனை எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். அதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்
பிரதமர் நரேந்திர மோடி திடீரென தமது பேச்சை இடைநிறுத்தம் செய்து விட்டு தனது இடதுபக்கமாகத் திரும்பிப் பார்த்து விட்டு, பிறகு பேச்சைத் தொடர முன்னோக்கிப் பார்த்தார். ஆனாலும், ஒரு வார்த்தை கூட மேற்கொண்டு பேசாமல் பிறகு தமது வலது பக்க காதில் பொருத்தப்பட்டிருந்த சாதனத்தை அழுத்தி மாநாட்டுத் தலைவரிடம் நான் பேசுவது கேட்கிறதா என்று கேட்டார். அது காண்பதற்கு அவர் எதையோ சமாளிப்பது போலத் தெரிகிறது. பிரதமரின் திடீர் கேள்வியைத் தொடர்ந்து, என்னால் உங்களின் பேச்சைக் கேட்க முடிகிறது என்று அந்த மாநாட்டுத் தலைவர் கூறவே, சுதாரித்துக் கொண்ட பிரதமர் மோடி, மீண்டும் எனது உரையை மொழிபெயர்ப்பவர் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா என்றும் பேசுகிறார்
மோடி
இப்போது ஏதோ தொழில்நுட்ப பிரச்சினையில் பிரதமர் சிக்கியிருப்பதை உணர்ந்த மன்றத்தின் செயல் தலைவர் கிளாஸ் ஸ்குவாப், பிரதமர் அவர்களே... சில நிமிடங்கள் காத்திருங்கள். அந்த இடைவெளியில் நான் முன்னுரையைக் கொடுக்கிறேன். பிறகு நீங்கள் உங்களுடைய உரையைத் தொடரலாம் என்று கூறி நிலைமையைச் சமாளிப்பதுடன் பிரதமரின் பேச்சு சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.
பின்னர், அவர் தமது உரையை ஆரம்பத்திலிருந்தே எந்த பிரச்சினையுமின்றி பேசி முடித்தார். முன்னதாக, அவர் உரையைத் தொடங்கும் முன்பு காதில் சொருகியிருந்த கேட்பொலி கருவியை வெளியே எடுத்துப் போட்டார். அவரது முகத்தை இயல்பாக வைத்திருக்க முயன்றிருந்தபோதும், அவரின் முகபாவனை நிகழ்ச்சி முடியும் வரை கடுமையாகவே இருந்தது.
இந்த குழறுபடிகள் ஏற்பட்டதற்கு டெலிப்ராம்ப்டர் சாதனத்தின் கோளாறு தான் காரணம் என ஒரு சில ஊடகங்களும், மற்றவர்கள், அது டெலிப்ராம்ப்டர் பிரச்னை இல்லை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் ஒலி கேட்பு அல்லது மொழிபெயர்ப்பு தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால்தான் அவர் தமது பேச்சை இடைநிறுத்தம் செய்தார் என்றும் கூறிவருகின்றனர்.
இதனைச் சாதாரண பிழையாகக் கடந்து செல்ல முடியாததற்குக் காரணம் அந்நிகழ்வு இடம்பெற்ற மேடை தான். அனைத்தும் உலக பொருளாதார மன்றத்தின் அலுவல் பூர்வ யூட்யூப் பக்க நேரலை ஒளிபரப்பில் இது இடம் பெற்றிருக்கிறது.
இதனை தொடர்ந்து, மோடியால் சில நிமிடங்கள் கூட சாதனத்தின் உதவியின்றி பேச முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வரிசையாக சமூக ஊடக பக்கங்களில் அவர் வார்த்தைகளுக்கு தடுமாறிய வீடியோவின் கிளிப்பிங்கை பகிர்ந்து விமர்சனம் செய்தனர்.
Teleprompter
எந்த இடத்திலும் எந்த விஷயத்தைப் பற்றியும் மணிநேரக்கணக்கில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் சொற்பொழிவோ உரையோ ஆற்றக் கூடிய புலமை பெற்றவர் மோடி என வழக்கமாகப் பலராலும் பாராட்டப்படுவார்.
ஆனால், இந்த புகழ்ச்சிக்குப் பின்புலமாக அவருக்கு உதவுவது, மோடியின் கண் முன்னே சாதாரணமாகப் பார்வையாளர்கள் காண முடியாத வகையில் இடம்பெற்றிருக்கும் டெலிப்ராம்ப்டர் எனப்படும் “திரை காண் எழுத்து ஓட்ட சாதனம்” என்றும் அதில் மோடியின் பேச்சு ஓட்டத்துக்கு தக்கவாறு அவரது அலுவலகத்தின் கணிப்பொறி ஊழியர்கள் சாதனத்தை இயக்குவார்கள் என்றும் கூறப்படுவதுண்டு.
இதன் காரணமாகவே நரேந்திர மோடி பெரும்பாலான இடங்களில் இந்தி மொழியும், ஒரு சில நேரத்தில் குறிப்பாக ஆங்கிலத்தில் பேசும் நிலை வந்தாலும் கூட இயல்பாகச் சொந்தமாக மனதில் பட்டதை உரையாற்றுவது போலப் பாவனை செய்து எதிரே பார்வையாளர் கண்டுபிடிக்காத வகையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்த மாநில மொழியில் ஒரு சில வார்த்தைகள் அல்லது கவிதைகள் அல்லது முக்கிய தலைவரின் வரிகளை அந்த மாநில மொழியில் நரேந்திர மோடி உச்சரித்து பார்வையாளர்களைக் கவருவது வழக்கம். அதற்கு பக்க பலமாக அவருக்கு உதவுவது இந்த டெலிப்ராம்ப்டர் என்றும் சொல்லப்படுகிறது.
மோடி மற்றும் ராகுல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களைத் தாங்க முடியவில்லை" என்று கேலியாகப் பதிவிட்டிருந்தார்.
காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிரதமர் மோடி மேடையில் பேசும் போது இருபுறமும் டெலி ப்ராம்ப்டர்கள் இருக்கும் படத்தை ட்வீட் செய்துள்ளார்.
பிரதமரின் உரையின் தொடர்ச்சியாக வெளியான மற்றொரு ஆதாரத்திலிருந்து வெளியிடப்பட்ட காணொளியைப் பகிர்ந்து கொண்ட ஆல்ட் நியூஸ் எனும் நிறுவனத்தின் தலைவர் பிரதிக் சின்ஹா, "பிரதமரின் டெலிப்ராம்ப்டர் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. உலக பொருளாதார மன்றத்தின் பதிவைப் பார்த்தால், பின்னால் யாரோ ஒருவர் பேசுவதைக் கேட்கலாம்” என ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
மோடி
குஜராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மோடி, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை மற்றும் பேச்சுப் பிழையின்றி உரையாற்றக் கூடிய ஆற்றலைக் கொண்டவர் என்று பலராலும் பாராட்டப்படுபவர். இந்த திறமை குறித்துப் பல நேரங்களில் அவரிடம் கேட்கப்பட்டபோதும், புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்திருக்கிறார் பிரதமர்.
ஆனால் அவரது மொழிப்புலமைக்கு பின்புலமே இந்த டெலிப்ராம்ப்டர்கள்தான் என்ற விவாதம் இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாகவே தொடர்கிறது.
2019ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி தேர்தலுக்காக பாட்னாவில் நடந்த அந்தக் கூட்டத்தில் மோதிக்கு முன்னால் இரண்டு டெலிபிராம்ப்டர்கள் நிறுவப்பட்டன.
இதனைச் சுட்டிக்காட்டி, மக்களைக் கவர ஹிந்தி பேசுவதற்காக நரேந்திர மோடி டெலிப்ராம்ப்டரைப் பயன்படுத்துவதாக ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தார். “பீகாரில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்ற பீதியால் இந்தி மொழியில் பேசக் கூட டெலிப்ராம்ப்டரை பயன்படுத்துகிறார் மோடி” என ட்விட்டரில் பதிவிட்டார்.
ஆனால் அப்போது பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மோதியின் பேச்சுக்கு டெலிப்ராம்ப்டர்கள் அவசியம் இல்லை என்று மறுத்தனர். அது சுடு சோற்றில் முழு பூசனிக்காயை மறைத்த கதை போல ஆனது. மோடி பேசிய எல்லா வீடியோக்களிலும் டெலிப்ராம்ப்டர்கள் பிரதான இடம் பிடித்தன.
அது மட்டுமின்றி பாட்னாவில் அவர் போஜ்புரி, மாகஹி, மைதிலி ஆகிய மொழிகளில் கூட பேசி அசத்தினார். ஆனால், அடிப்படையில் இந்த மொழிகள் எதுவுமே மோடிக்கு தெரியாது என்பதே உண்மை.
பிரதமர் மோடி டெலிப்ராம்ப்டர்களை பயன்படுத்தியதனால் அல்ல, அவர் டெலிப்ராம்ப்டர் இல்லாத போது அதனை சமாளிக்க முடியாமல் போனதே இந்த கேலிகளுக்கு காரணம்.