என் மகள் இந்த நாட்டிற்காக விளையாடி பல பதக்கங்கள் பெற்று தந்திருக்கிறாள்.நடிகர் சித்தார்த் நாட்டிற்காக என்ன செய்தார் என்று சாய்னாவின் தந்தை கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.
Narendra Modi
சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் வழியில் ரத்து செய்யப்பட்டது. அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறப்பட்டது. இந்த சம்பவத்தைப் பிரதமருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் விமர்சித்து வந்தனர். அந்த வரிசையில் விளையாட்டு வீராங்கனை சாய்னா நெவால் “ஒரு நாட்டின் பிரதமருக்குப் பாதுகாப்பு இல்லை எனில், அந்த நாடு தன்னை தானே பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. பஞ்சாபில் பிரதமருக்கு எதிரான அச்சுறுத்தலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்” என ட்விட் செய்திருந்தார். இதனை ரீ ட்விட் செய்த நடிகர் சித்தார்த் சாய்னாவைக் கேலியாகச் சாடியிருந்தார். சித்தார்த்தின் கேலி பேச்சில் ஆபாசமாக பொருட்படும் வார்த்தை இருப்பதாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உட்படப் பலர் அவரை திட்டி பதிவிடத் தொடங்கினர். இதன் பிறகு சித்தார்த் தான் ஆபாசமாக எதுவும் கூறவில்லை "ஒரு குறிப்பாக தான் பயன்படுத்தினேன்" என விளக்கம் அளித்தார். சாய்னாவின் கணவரான பாருபள்ளி காசியப், “உங்கள் கருத்துக்களைச் சொல்ல நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்” என அவரது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை காவல் துறையில் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் அவரது ட்விட்டர் கணக்கையும் முடக்க வேண்டும் என்றும் ட்விட்டர் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஹர்வீர் சிங்
இந்த நிலையில் டைம்ஸ் நவ் நிறுவனத்திற்கு சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில், எனது மகள் பாட்மிண்டன் விளையாடி நாட்டுக்கு பல பதக்கங்களையும் விருதுகளையும் குவித்து சாதனை புரிந்தவர். இந்த நாட்டிற்காக நடிகர் சித்தார்த் என்ன சாதனை புரிந்தார்.அவர் சினிமா படங்களில் நடிப்பதை விட வேறு என்ன சாதனை புரிந்தார்?
என் மகளைப் பற்றி சித்தார்த் அப்படி பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் மோசமானவை. இந்தியா ஒரு சிறந்த சமூகம். சாய்னாவுக்கு பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்களின் ஆதரவு உள்ளது என்பதை நம்புகிறேன். ஏனென்றால் ஒரு விளையாட்டு வீரர் படும் கஷ்டங்கள் அனைத்தையும் அவர்கள் அறிவார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்