சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் வழியில் ரத்து செய்யப்பட்டது. அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது எனக் கூறப்பட்டது. இந்த சம்பவத்தைப் பிரதமருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் விமர்சித்து வந்தனர். அந்த வரிசையில் விளையாட்டு வீராங்கனை சாய்னா நெவால் “ஒரு நாட்டின் பிரதமருக்குப் பாதுகாப்பு இல்லை எனில், அந்த நாடு தன்னை தானே பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது. பஞ்சாபில் பிரதமருக்கு எதிரான அச்சுறுத்தலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்” என ட்விட் செய்திருந்தார். இதனை ரீ ட்விட் செய்த நடிகர் சித்தார்த் சாய்னாவைக் கேலியாகச் சாடியிருந்தார். சித்தார்த்தின் கேலி பேச்சில் ஆபாசமாக பொருட்படும் வார்த்தை இருப்பதாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உட்படப் பலர் அவரை திட்டி பதிவிடத் தொடங்கினர். இதன் பிறகு சித்தார்த் தான் ஆபாசமாக எதுவும் கூறவில்லை "ஒரு குறிப்பாக தான் பயன்படுத்தினேன்" என விளக்கம் அளித்தார். சாய்னாவின் கணவரான பாருபள்ளி காசியப், “உங்கள் கருத்துக்களைச் சொல்ல நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்” என அவரது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை காவல் துறையில் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் அவரது ட்விட்டர் கணக்கையும் முடக்க வேண்டும் என்றும் ட்விட்டர் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பஞ்சாபில் மோடி
பஞ்சாப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்குப் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விசாரணைக்குழு அமைத்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் தனித்தனியாக விசாரிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசியம்மாள்
தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதில் ஆசியம்மாள் என்ற டிஐஜி-யும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மிகவும் அறிவுக்கூர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளே உளவுத்துறை உயர் பதிவிகளில் அமர்த்தப்படுவர். 56 வயதான ஆசியம்மாள் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் அமைந்திருக்கும் கொரங்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஐஜியாக பதவியேற்றது அவரது கிராம மக்களைப் பெரு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
Foxconn
சென்னை ஶ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொலைப்பேசி பாகங்களை இணைக்கும் தொழிற்சாலையில் 2000த்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வந்தனர். கடந்த மாதம் அங்கு வேலை செய்யும் பெண்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இரண்டு பெண்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் சென்னை பெங்களூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு பெண்களும் இறக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மூடப்பட்டிருந்த தொழிற்சாலை மீண்டும் 1000 பணியாளர்களுடன் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைப் பழிவாங்கும் நோக்கில் செயல்படக் கூடாது, அடிப்படை வசதிகளில் எந்த குறையும் வைக்கக் கூடாது மற்றும் தரமான உணவு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Government School
உடுமலை - திருப்பூர் சாலையில் உள்ள சின்ன வீரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு போதிய இடவசதி இல்லாததால் ஓட்டு கட்டிடங்களை இடித்து ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தன்னார்வலர்கள் நிதியளித்து வருகின்றனர்.
சின்ன வீரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 4 கட்டடங்கள் கட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொதுமக்கள் தரப்பில் 15 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. மேலும் 8 வகுப்பறைகள் கட்ட கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதனை அறிந்த அந்த ஊரில் இளநீர் விற்கும் தாயம்மாள் என்ற 45 வயது பெண் தனது சேமிப்பிலிருந்து 1 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பள்ளியிலும் ஊரிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.