சித்ரா ராமகிருஷ்ணா

 

Twitter

இந்தியா

சித்ரா ராமகிருஷ்ணா : இமயமலை சாமியாருடன் பங்குச் சந்தையில் செய்த ஊழல் !

பங்குச் சந்தையின் ஊழல்கள் அவ்வப்போது நடப்பது வழக்கம். அனேகமாக 90-களில் அர்ஷத் மேத்தா ஊழலுக்கு பிறகு இப்போதுதான் பெரும் ஊழல் ஒன்று வந்திருக்கிறது. இது முதற்கட்டமாக வந்திருப்பதால் இதன் உண்மையான அளவு போகப்போகத்தான் தெரியும்.

Govind

இந்தியப் பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்புதான் செபி. இது பங்குச் சந்தையின் வர்த்தகம் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை கண்காணிப்பதோடு முறைகேடு நடந்தால் நடவடிக்கையும் எடுக்கும்.

தேசியப் பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலை சாமியாருடன் ஆலோசித்து பங்கு சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாகவம், அவருடன் முக்கியமான ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் தற்போது செபி அறிவித்திருக்கிறது.

சித்ரா ராமகிருஷ்ணா

2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசியப் பங்குச் சந்தை என அழைக்கப்படும் என்எஸ்இ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பணியாற்றினார். அப்போது அவர் பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டி உள்ளது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தலைமை அதிகாரியாக நியமித்து அவருக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் பல சலுகைகளை அளித்துள்ளார். இந்த நியமனம் கூட முகம் தெரியாத அந்த இமயமலை சாமியாருடன் கலந்தாலோசித்து சித்ரா எடுத்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் அந்த சாமியார்தான் தேசிய பங்கு சந்தயை, சித்ரா மூலம் இயக்கியிருக்கிறார். சித்ரா அந்த சாமியாரின் கைப்பாவையாக செயல்பட்டிருப்பதாக செபி தெரிவித்துள்ளது. 1990-களின் துவக்கத்தில் தேசிய பங்குச் சந்தை நிறுவப்பட்டபோது அதன் செயல் அதிகாரியாக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணன் 2016-இல் பதவி விலகினார். பதவி விலகியதற்கு காரணம் தனது தனிப்பட்ட காரணங்கள் என்றும் அவர் கூறினார்.

அந்த சாமியாரின் பெயர் சிரோன்மணி என்றும் அவரோடு மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டுள்ளதாகவும் சித்ரா தெரிவித்துள்ளார். பங்கு சந்தை வர்த்தகம், திட்டங்கள், ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அவர் அந்த சாமியாருக்கு வழங்கியிருக்கிறார். இதற்காக சாமியாருக்கு பணம் வழங்கப்பட்டிருப்பதாகவும் செபி தெரிவித்துள்ளது.

SEBI

இந்த மின்னஞ்சல்களை ஆய்வு செய்த செபி அந்த சாமியாரோடு சித்ரா அடிக்கடி தொடர்பு கொண்டதையும், தேசிய பங்கு சந்தையின் பணிநியமனங்கள் குறித்து அவரோடு ஆலோசித்ததாகவும் தெரிவித்திருக்கிறது.

அந்த மின்னஞ்சலில் அவர் தேசியப் பங்குச் சந்தையின் நிர்வாகிகளில் யாரை வைத்திருக்க வேண்டும், யாரை எந்த பதவிகளில் நியமிக்க வேண்டும், யாரை மாற்ற வேண்டும் என்பது வரை பெயர்களோடு குறிப்பிடுகிறார். காசம் என்பவரை நீக்க வேண்டும், மயூரை தலைமை வர்த்தக நடவடிக்கை தலைவராக மாற்ற வேண்டும், உமேஷை தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று நிறைய பெயர்களை அந்த மின்னஞ்சலில் சாமியார் குறிப்பிடுகிறார். அதில் வரும் சுப்ரபாத் லாலா என்பவர் என்எஸ்இ யின் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி பின்னர் ஒரு ஊழல் குற்றச்சாட்டில் 2015-ஆம் ஆண்டில் மாட்டிக் கொண்டார். இந்த ஊழலை என்எஸ்இயில் பணியாற்றிய ஒரு விசில் ப்ளோயர் அம்பலப்படுத்தினார்.

ஒரு மின்னஞ்சலில் செபியை சரிப்படுத்துவதற்காக தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், நிதியமைச்சர் அலுவலகம் வரை என்ன செய்ய வேண்டும் என்றும் அந்த சாமியார் கூறுகிறார். இந்த மின்னஞ்சல் டிசம்பர் 4, 2015 அன்று சாமியாரால் சித்ராவுக்குஅனுப்பப்பட்டிருக்கிறது.

முதலில் சித்ரா அந்த சாமியாரை பார்த்ததே இல்லை என்று குறிப்பிட்டார். ஆனால் ஒரு மின்னஞ்சலில் சாமியார் சித்ராவின் முடியலங்காரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இருவரும் விடுமுறையில் செஷல்ஸ் தீவுகளுக்கு சென்றிருக்கின்றனர். இதெல்லாம் சித்ரா செபியிடம் அளித்த வாக்கு மூலங்களோடு முரண்படுகிறது. மின்னஞ்சலின் படி இருவரும் இணைந்து தமிழ் பக்திப் பாடல்களை ரசித்திருக்கின்றனர். இன்னும் ஒருபடிமேல் போய் சாமியார் சித்ரா இளமையாக தோன்றுவதற்கு ஆலோசனையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்தால் இருவரும் பல முறை சந்தித்திருப்பது உறுதியாகிறது.

Seychelles island

விசில் ப்ளோயர் மூலம் ஊழல் வெளியான 2015-ஆம் ஆண்டில் சாமியார் பைகளை தயார் செய்து சித்ராவை செஷல்ஸ் தீவுக்கு அழைத்திருக்கிறார். அங்கே கடலில் குளித்து விட்டு கடற்கரையில் ஓய்வெடுக்காலம் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஹாங்காங் அல்லது சிங்கப்பூர் வழியாக பயணிக்கலாம் அதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

இவ்வளவு இருந்தும் அந்த சாமியார் யார் என்று செபியால் கண்டுபிடிக்கவில்லை. ஐ.பி முகவரியை வைத்து பின்தொடர முடியவில்லை. காரணம் சித்ரா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட ஆனந்த சுப்ரமணியம் இருவரது லேப்டாப்பும் அழிக்கப்பட்டு வட்டன.

மேலும் என்எஸ்இ போர்டு மீட்டிங் பற்றிக் கூட சித்ரா சாமியாருடன் கலந்து ஆலோசித்திருக்கிறார். இயக்குநர்களாக யார் யாரைப்போடலாம் என்றும் பேசியிருக்கிறார். அதில் ஸ்டேட் பாங்க், எல்ஐசி, வெளிநாட்டு நிறுவனங்களான சாய்ப், கோல்டுமென் ஆகியோரும் உண்டு. இவர்களில் யாரை வைக்கலாம், யாரை தவிர்க்கலாம் என்பது வரை இருவரும் பேசியிருக்கின்றனர்.

தற்போது செபி, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடிரூபாய் அபராதமும், தலைமை செயல் அதிகாரி ரவி நரேன், ஆனந்த சுப்ரமணியன் இருவருக்கும் தலா 2 கோடி ரூபாயும் அபராதம் விதித்திருக்கிறது. ஒழுங்கு முறை அதிகாரி நரசிம்மனுக்கு ரூபாய் ஆறு இலட்சம் அபராதம் விதித்திருக்கிறது. ஆனால் சித்ரா பதவி வகித்தபோது வாங்கிய ஆண்டு சம்பளமே 10.5 கோடி ரூபாய். இது போக இந்த முறைகேடுகளில் அவர் சாமியாரோடு எவ்வளவு சம்பாதித்தார் என்பது அந்த சாமிக்கே வெளிச்சம்.

இவ்வளவு பெரிய ஊழல் நடந்த பிறகும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது கூட செய்யாமல் அபராதத்தோடு கடந்து போகிறது செபி. சித்ரா பதவிக்காலத்தில் பங்குச்சந்தையில் பணம் போட்டு ஏமாந்த நடுத்தர வர்க்கம் எவ்வளவு இழந்தது என்பதை இனிமேல்தான் தெரிய வரும்.

உறுதிப்படுத்தப்படதா மற்றொரு தகவலின் படி ஆனந்த சுப்ரமணியன் என்ற அந்த நபர் உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும் அவர்தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை ஒரு கைப்பாவையாக ஆட்டி வைத்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் மின்னஞ்சல்களின் படி சாமியாரும், சித்ராவும் குறைந்தபட்சம் வீடியோ காலிலாவது பேசியிருக்க வேண்டும். மற்றபடி யார் அந்த சாமியார் என்பதை செபி கண்டுபிடிக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

மோடியின் ஆட்சியில் ரஃபேல் விமான ஊழலோடு இனி தேசியப் பங்கு சந்தை ஊழலும் நடந்திருக்கிறது. மேலதிக ஊழல் செய்திகளுக்கு காத்திருப்போம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?