மகாராஷ்டிர ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் அரங்கேறியபடி இருக்க, ஜூலை 11வரை ஆளும் கட்சிக்கு ஒரு பாதகமாக உச்சநீதிமன்றக் கெடு வந்திருக்கிறது.
மாநிலத்தை ஆளும் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக, சிவசேனாவில் மட்டும் 39 அதிருப்தி எம்.எல்.ஏ.கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களுடன் 10 சுயேச்சை எம்.எல்.ஏ.களும் சேர்ந்து மொத்தம் 55 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அதிருப்தியாளர் பிரிவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
அதிருப்தியாளர்களில் 16 பேரைக் கட்சியை விட்டு நீக்கியதாக, சட்டப்பேரவைத் துணைத்தலைவரிடம் சிவசேனா கடிதம் அளித்தது. அதன்படி அவர்களிடம் அவர் விளக்கம் கேட்டதுடன், நேற்று திங்கள் வரை தான் அதற்குக் கெடு அளித்திருந்தார்.
அந்தக் கெடுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், அடுத்த மாதம் 11ஆம் தேதிவரை 16 பேர் மீதும் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.
அதே கையோடு, அதிருப்தி எம்.எல்.ஏ.கள் தரப்பினர் தங்கள் பாதுகாப்புக்கான உத்தரவையும் உச்சநீதிமன்றத்திடம் பெற்றுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அதிருப்தியாளர்கள் மொத்தமாகவோ குழுக் குழுவாகவோ மகாராஷ்டிராவுக்குத் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைமை கைமீறிப் போனபோதும், முதலமைச்சர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகவில்லை. எப்படியும் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றிவிட முடியும் எனும் நம்பிக்கையில் அவருடைய தரப்பில் காய்களை நகர்த்துகின்றனர்.
மூன்றாவது முறையாக, நேற்று, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததும், கூட்டணித் தலைவர்களுடன் உத்தவ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முன்னாள் முதலமைச்சரும் இப்போதைய அமைச்சருமான அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் திலீப் வல்சே பாட்டீல், ஜெயந்த் பாட்டீல், காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோலே ஆகியோர் அச்சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவி இராஷ்மி தாக்கரே, அதிருப்தியாளர்களின் மனைவியருடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் ஆட்சியைக் காப்பாற்றும்படி தனிப்பட்ட உரிமையோடு அவர்களிடம் இராஷ்மி உருக்கமாகப் பேசுகிறார். திங்கள்வரை 10 அதிருப்தியாளர்களின் மனைவியருடனாவது அவர் பேசியிருப்பார் என்கின்றன சிவசேனா வட்டாரங்கள்.
அசாமில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் அதிருப்தியாளர்கள் சிலருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, காயம்வரை ஆனதாகவும் மும்பையில் தகவல்கள் பரவின. இந்த சூழலில், அசாமிலிருந்து முதலில் அவர்களை ஊருக்கு வரச் சொல்லுங்கள் என வற்புறுத்திப் பேசியிருக்கிறார், இராஷ்மி.
அவருக்கு சிவசேனாவின் 55 எம்.எல்.ஏ.களின் குடும்பத்தினரிடமும் நன்கு பழக்கமும் அணுக்கத் தொடர்பும் உள்ளது; அவர் மீது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதிப்பு மரியாதை உண்டு என்பதை வைத்து, உத்தவ் தாக்கரே இந்த முயற்சி பலனளிக்கட்டும் என எதிர்பார்க்கிறார்.
இதைத் தவிர்த்து, இன்னொரு வேலையையும் உத்தவ் தரப்பு தீவிரமாக உசுப்பிவிட்டுள்ளது. சிவசேனா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவசேனாவைப் புதுப்பிக்கும் பணியில் மும்முரமாகி உள்ளார், உத்தவ்வின் மகனும் யுவசேனாவின் தலைவருமான ஆதித்ய தாக்கரே.
சூறாவளி சுற்றுப்பயணமாக மூன்றாவது கூட்டத்தில் கர்ஜாத்தில் நேற்று அவர் கலந்துகொண்டார்.
குறிப்பாக, மும்பையைத் தவிர்த்த கிராமப்புற மாவட்டங்களைக் குறிவைத்து இந்த வேலையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் ஒரு சுற்று வரக் கிளம்பியிருக்கிறார், ஆதித்யா.
மாநிலப் பல்கலைக்கழகத்தில் முதல் கட்டமாக புதிய புத்துயிர்ப்புப் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள். சட்டமேலவை இருக்கக்கூடிய மகாராஷ்டிர மாநிலத்தில், அதற்கான பட்டதாரி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை உண்டு. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பட்டதாரி தொகுதிகள் உண்டு எனும் நிலையில், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கு ஒரு யுவசேனா நிர்வாகியை இப்போது பொறுப்பாக நியமித்துள்ளனர்.
முன்னரைப் போல, மும்பை மாநகரத்தை மையமாக வைத்தபடி இல்லாமல், அடுத்த தலைமுறை ஊரகப்புற இளைஞர்களை ஈர்ப்பதில், சிவசேனா தலைமை இந்த நெருக்கடியில்தான் நன்றாக யோசிக்கிறது போலும்!
சிவசேனையின் நிறுவனர் பால் தாக்கரேவால் 2010 அக்டோபர் 17ஆம் தேதி அன்று யுவசேனா ஆரம்பிக்கப்பட்டது. தசரா பண்டிகை நிறைவுப் பேரணியின்போது சிவாஜி பூங்கா மைதானத்தில் அவரால் தொடங்கப்பட்டது முதல் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஆதித்ய தாக்கரேவுக்கு, இப்போது அதன் மீது ரொம்பவும் பாசம் பாசமாக வந்திருக்கிறது.
காலம் போன காலத்தில் சங்கரா சங்கரா என்பதைப்போலவா அல்லது தனக்கான நேரத்தில் தகுந்தபடி யுவசேனாவை உசுப்பிவிடுகிறாரா உத்தவின் மகன் என்பதா..
உண்மை என்ன என்பது ஓரிரு வாரங்களில் தெளிவாகிவிடும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust