ஞானம், அறிவு, தெளிவு அத்தனையும் தியானத்தால் பெறலாம், ஆன்மீகத்தால் அடையலாம் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை செய்யதான் பலருக்கும் முடிவதில்லை. அதற்கு சுலபமான மற்றுமோர் வழிதான் சித்தர்கள் ஜீவசமாதிகளை தரிசிப்பது. ஆத்மா, மனம், புத்தி ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து ஒருநிலைப்படுவது சித்தர்கள் சமாதிகளில் நிகழும். சில நேரங்களில் அரூபமாகவும், தோன்றி மறைதலும், குரல் மட்டும் கேட்பதாகவும் கூட, தன் சூட்சம ரூபத்தை சித்தர்கள் வெளிப்படுத்துவதை பல இடங்களில் இன்றும் பார்க்க முடியும். அப்படிப்பட்ட அமானுஷ்யங்களும் அற்புதங்களும் நிகழ்த்தும் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்விலும், மயிலாக முருகன் தோன்றி, நோய் தீர்த்த அற்புதம் நடந்தது.
அப்பாவு என்ற இயற்பெயர் கொண்ட, பாம்பன் ஸ்வாமிகள் பிறந்து 1848 அல்லது 1850ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் பிறந்த இவர்,தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்கும் பாடலாகும். தினமும் கந்த சஷ்டி கவசத்தினை 36முறை பாராயணம் செய்து, முருகனின் மீது தீராத பக்தி கொண்டவர்.
சென்னையில்.. 1923வது வருடம், டிசம்பர் 27 அன்று குதிரை வண்டி அவரது காலில் ஏறி, கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும் முருக பெருமான் அருளால், 11ம் நாள், இரண்டு மயில் மேற்கு நோக்கி நின்று அவருக்கு காட்சி தந்தன. இன்னும் பதினைந்து நாட்களுக்குள் காலில் ஏற்பட்ட காயம் சரியாகிவிடும் என்ற அசரீரி ஒலித்தது. மயில் வாகன தரிசனத்தில்,எந்த வித அறுவை சிகிச்சை இன்றியும் குணம்பெற்றார். இவர் குணம் பெற்ற நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், மன்றோ வார்டில் பாம்பன் ஸ்வாமிகளின் திருவுருவப்படம், அவர் இருந்த கட்டில் ஆகியவை வைக்கப்பட்டிருக்கிறது.
மகிமை வாய்ந்த மயூரபந்தம்
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய மயூரபந்தம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இதனை தினமும் சொல்லி வந்தால் தலைமுறை கடந்த பகைகள் என அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
மேலும் மாந்திரிக, தாந்திரீக விஷயங்களும் பில்லி, சூனியங்களும் நீக்கும் வல்லமை கொண்டது மயூரபந்தம். சகலவிதமான தோஷங்களில் இருந்தும் விடுவிக்கும் வல்லமை கொண்டது. செவ்வாய்க்கிழமை அன்று செவ்வரளி பூக்கள் கொண்டு மயூரபந்தம் மந்திரத்தை சொல்லி, மனமுருகி முருகனை பிரார்த்திக்க பகைகள் அடியோடு விலகும் என்பது உறுதி.
முருகன்
முருகப்பெருமானுக்கு மந்திர மயில், இந்திர மயில், அசுர மயில், மணி மயில், ஒளக்ஷத மயில், ஆன்ம மயில் என பலவகை மயில்கள் உண்டு. மந்திரங்களை முறையாக பாராயணம் செய்து, முருகனை வழிபட்டால் முருகப்பெருமான் மயிலில் வந்தும், மயிலாக வந்தும் காட்சியளிப்பார்.
“ திருவளர் சுடர் உருவே சிவைகரம் அமர் உருவே” என்று பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய பகைகடிதல் அற்புதமான ஒரு மந்திரமாகும்.
குருவான முருகப்பெருமானின் முதலான மயிலே, நீ அம்முருகனை கொண்டு வருவாயாக” எனும் பொருளில், ஒவ்வொரு பாடல் முடிவிலும், கொணர்தியுன் இறைவனையே என்று பாடியுள்ளார்.
கடிதல் என்றால் களைதல் அடியோடு நீக்குதல் என்பது பொருளாகும்.
உட்பகையான கர்மவினைகள் மற்றும் புறப்பகை
என்ற இரண்டினையும் அடியோடு களையும் வேரறுக்கும் அற்புதமான திருப்பதிகம் இந்த பகைகடிதல். இந்நூலை பக்தியோடு படிப்பவர்கள் முருகன் அருளைப் பெற்று சிறப்புடன் வாழ்வர் என்பது உறுதி.
தம் வாழ்நாளில் மொத்தம் 6666 பாடல்களையும் 32 வியாசங்களையும் திருமுருகப்பெருமானின் புகழ் மணக்க இயற்றியுள்ளார். பாம்பன் சுவாமிகள் அருளியவற்றில் பகைகடிதல், குமாரஸ்தவம், சண்முக கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் முதலானவை மந்திரங்களின் சாரங்களாக திகழ்பவை.
மயிலாய் முருகன் வந்து காட்சிகொடுத்து கால்முறிவை குணமாக்கிய அற்புத நிகழ்வை, ஒவ்வொரு ஆண்டும் மயூரசேவையாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திருவான்மியூர் நகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பொதுமக்கள் சீரான இடைவெளியோடும், பாதுகாப்புகவசம் அணிந்தும் பாம்பன் ஸ்வாமியை வழிபட்டு வருகின்றனர். அருளும் வரமும் தரும் பாம்பன்ஸ்வாமிகளை வழிபட்டு நாமும் நற்கதியடைவோம்.
எழுத்து : ஆர்ஜே.கிரேசிகோபால்