நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் வென்று ஃபைனலுக்கு முன்னேறியதன் மூலம் 10வது முறையாக இறுதிச் சுற்றுக்குள் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதிக முறை ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு சென்றுள்ள அணியும் சிஎஸ்கே தான்.
ஐபிஎல் 2023ன் முதல் தகுதிச் சுற்று நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது. அதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் தேர்வு செய்தது. களமிறங்கிய ருதுராஜ் மற்றும் கான்வே நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
ருதுராஜ் அதிரடியாக விளையாடி, அரைசதமடிக்க, கான்வே பொறுமையாக விளையாடினார். ஆனால், ருதுராஜ்ஜின் விக்கெட் விழுந்ததும், சென்னை அணியின் ரன்ரேட் சரிந்தது.
அதிரடி ஆட்டக்காரர் தூபே ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து விக்கெட்கள் விழ, அணியின் ஸ்கோர் 150 ஐ எட்டவே 18 ஓவர்கள் ஆனது. வழக்கம்போல தோனி களமிறங்கும்போது அரங்மே அதிர, அவரும் 1 ரன்னில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் அணி 172 ரன்களே எடுத்திருந்தது.
இரண்டாவதாக களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அதிகபட்சமாக கில் 42 ரன்களும், ரஷீத் கான் 30 ரன்களும் எடுத்தனர். சாஹா தொடங்கி, ஹர்திக் பாண்டியா, சனகா, மில்லர் என அனைவரும் குறைந்த ரன்களுக்கு அவுட் ஆகினர்.
போட்டி சென்னை வசம் என்றிருந்த நிலையில், ரஷீத் கான் சிக்சர்களும், ஃபோர்களும் விளாச, குஜராத்துக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அவரது விக்கெட் விழுந்த பிறகு மீண்டும் வெற்றி சென்னை பக்கம் திரும்பியது.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 157 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் பிடித்த விஜய் சங்கரின் கேட்சும், கான்வே பிடித்த ரஷீத் கானின் கேட்சும் திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.
இந்த இரண்டு விக்கெட்களும் விழுவதற்கு முன்னால் தான் ஃபீல்டிங் மாற்றப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், குஜராத்தை முதன் முறை வென்றது சென்னை அணி. அதுவும் ஆல் அவுட் செய்து!
தற்போது இறுதிச்சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. சென்னை அணி விளையாடிய 14 சீசன்களில் 10 முறை ஃபைனலுக்கு சென்று சாதனை படைத்துள்ளது.
போட்டி முடிந்து பேசிய தோனி, “களத்தின் தன்மைக்கு ஏற்றவாரு, ஆட்டத்தின் சூழலை புரிந்து நான் ஃபீல்டிங்கை மாற்றுவேன். நான் ஒரு எரிச்சலூட்டும் கேப்டனாக இருக்கலாம், ஆனால் எனது உள்ளுணர்வு சொல்வதை கேட்டு தான் அதை செய்வேன். அதனால், என் மீது எப்போதும் ஒரு கண் வையுங்கள் என்று நான் அணி வீரர்களிடம் கூறுவேன்" என்றார்.
தொடர்ந்து ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தோனி, “அதை பற்றி சிந்தித்து முடிவெடுக்க எனக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. டிசம்பரில் தான் அடுத்த ஏலம் நடக்கும். ஏன் அவசரப்படவேண்டும்? சென்னை அணியுடன் ஏதாவது ஒரு விதத்தில் நான் இருப்பேன், அணிக்குள்ளா வெளியிலா என்பது தெரியாது” என்றார்.
இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இது நாக் அவுட் கேம் என்பதால் தோற்பவர் வெளியேறுவார். வெல்லும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும். அதில் வெல்பவர் ஃபைனலில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்வர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust