14 ஐபிஎல் சீசனாக இந்த ஜெயித்துவிடுவோம், அந்த ஜெயித்துவிடுவோம் என ஐபிஎல் கோப்பையை வெல்ல முயற்சி செய்து கொண்டே இருக்கிறது பெங்களூரு அணி. ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வென்ற பாடில்லை.
இந்த சூழலில் இந்த ஐபிஎல் சீசனில் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார் விராட் கோலி; அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுவிட்டார். இப்படியொரு சூழலில் இந்த தொடரில் ஃபாப் டு பிளைசிஸ் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது ஆர்சிபி.
நேற்றைய தினம் நடந்த போட்டியில் லக்நௌ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 10 புள்ளிகளை பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் 4 போட்டிகளில் வென்றால் பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்வது கிட்டத்தட்ட உறுதி ஆகி விடும்.
நேற்றைய மேட்சில் டாஸ் வென்று பௌலிங்கை தேர்ந்தெடுத்தது லக்நௌ.
பெங்களூரு அணி பேட்டிங்கை தொடங்கியதும் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது, முதல் ஓவரிலேயே அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக விராட் கோலி டக் அவுட் ஆனார். ஐபிஎல் வரலாற்றிலேயே அவர் டக் அவுட் ஆவது இது நான்காவது முறையாகும்.
முதல் ஓவரை வீசிய சமீரா ஐந்து ரன்கள் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் அவரது அடுத்த ஓவரை மேக்ஸ்வெல் நையப்புடைத்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்து பெங்களூரு. மேக்ஸ்வெல் இரண்டு பௌண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார்.
பவர்பிளே முடிந்தவுடனேயே அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மேக்ஸ்வெல் க்ரூனால் பாண்ட்யாவிடம் வீழ்ந்தார். அப்போது 44 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது பெங்களூரு. அடுத்து பிரபுதேசாய் விக்கெட்டும் விரைவில் வீழ 63 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஆனால் டு பிளசிஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அதே சமயம் தேவையான இடத்தில் அதிரடி காட்டினார். இதனால் பெங்களூரு அணியின் ஸ்கோர் பிற்பாதியில் மளமளவென உயர்ந்தது.
சதமடிக்கும் வாய்ப்பை கடைசியில் தவறவிட்ட டு பிளசிஸ் 64 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பெங்களூரு அணி 181 ரன்கள் குவித்தது,
லக்நௌ சேஸிங்கை தொடங்கிது. பவர்பிளேவில் ஹேசில்வுட்டிடம் மணீஷ் பாண்டே மற்றும் டீ காக் வீழ்ந்தனர். அந்த அணியின் முதுகெலும்பாக விளங்கிய கேப்டன் ராகுலை பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேல் ஸ்கெட்ச் போட்டு தூக்கினார். ராகுல் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
பிறகு களமிறங்கிய க்ரூனால் பாண்ட்யா சற்று போக்கு காட்டினார். ஆனால், 28 பந்துகளில் ஐந்து பௌண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல்லிடம் வீழ்ந்தார்.
மேக்ஸ்வெல் vs க்ரூனால் பாண்ட்யா இடையிலான ஆட்டம் நேற்று சுவாரஸ்யமாக இருந்தது. அதன்பின்னர் பெங்களூரு எளிதாக வெற்றியை நோக்கி பயணித்தது. அதற்கு ஹேசில்வுட் குறிப்பிடத்தக்க பங்களித்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டு பிளசிஸ் ஆட்டநாயகன் விருது வாங்கினார்.
சென்னை அணி ஏலத்தில் எடுக்காததால் பெங்களூரு அணிக்குச் சென்ற டு பிளசிஸ், ஹேசில்வுட் அங்கே சிறப்பாக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.
KGF QUIZ-ல் பங்குக்கொள்ள: To attend the KGF Quiz Click here
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com