ராஜஸ்தானை போட்டுப் பொளந்த குஜராத் டைட்டன்ஸ் NewsSense
ஸ்போர்ட்ஸ்

IPL 2022 : ராஜஸ்தானை போட்டுப் பொளந்த குஜராத் டைட்டன்ஸ் - வெற்றிக்கு காரணம் இது தான்

NewsSense Editorial Team

37 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

நேற்றைய மேட்சில் ஜெயிச்சததால் பாயின்டஸ் டேபிளில் ஐந்தாமிடத்தில் இருந்து ஒரே தாவாக தாவி முதலிடத்தை பிடித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

இந்த ஐபிஎல் சீசன் ஏலத்திலும் சரி, கேப்டன் பொறுப்பை ஹர்டிக் பாண்ட்யாவிடம் கொடுத்தபோதும் சரி, இந்த அணி தேறுமா எனும் சந்தேகம் பலரிடமும் இருந்தது. பிளே ஆஃபுக்குள் நுழைய வாய்ப்புள்ள அணியாகவே குஜராத் கருதப்படவில்லை.

ஆனால், குஜராத் இந்த சீசனில் ஆட்டும் ஆட்டம் ஒவ்வொரு அணியையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

மிரட்டல் பேட்டிங் ஆர்டர் இல்லை, அச்சுறுத்தும் பௌலிங் லைன் அப்பும் கிடையாது, பத்தாததுக்கு தமிழ்நாட்டு பிளேயர் விஜய் சங்கர் வேற அணியில் நடுவரிசையில் களமிறங்குகிறார். இருந்தும் ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் மாஸ் காட்ட, அசால்ட்டாய் எதிரணியை துவம்சம் செய்து வருகிறது குஜராத், இந்த வரிசையில் ஹர்டிக் அணியிடம் லேட்டஸ்ட்டாக சிக்கிய அணிதான் ராஜஸ்தான்.

புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான், மேற்கொண்டு தனது இடத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் ரன்ரேட்டும் குறைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அப்படி நேற்றைய போட்டியில் என்ன தான் நடந்தது?

மற்ற அணிகளை போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டாஸ் வென்று சேஸிங்கையே தேர்ந்தெடுத்தது.

குஜராத் அணியில் மேத்யூ வேட் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் மூன்று பௌண்டரி அடித்து வேடு வேடிக்கை காட்ட, இரண்டாவது ஓவரிலியே அவரை ரன்அவுட் செய்து செக் வைத்தது ராஜஸ்தான் அணி.

மூன்றாவது ஓவரில் விஜய் சங்கரை வீழ்த்தியது. பவர்பிளேவில் வழக்கம்போல பந்துகளை தின்றுவிட்டு 7 பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்து வெளியேறினார் சங்கர்.

சுப்மன் கில் மற்றும் ஹர்டிக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியை மீட்க முயற்சித்தனர். பவர்பிளே முடிவில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது குஜராத். அதற்கடுத்த ஓவரை வீசிய ரியான் பராக் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தி குஜராத்துக்கு அதிர்ச்சி தந்தார்,

அதன்பின்னர் ஹர்டிக் பாண்ட்யா ஆடிய ஆட்டம் பக்கா கிளாஸ், ஒரு கேப்டனாக பொறுப்பை உணர்ந்தும் அதே சமயம் ரன்ரேட்டை சரியவிடாமலும் இளம் வீரருக்கு பக்கபலமாகவும் மெச்சூர்டான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய ஆட்டத்தை பார்த்த இந்திய தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஹர்டிக்கை தவறவிடக் கூடாது என கணக்குப்போட்டுக் கொண்டிருக்கக்கூடும்.

ஹார்டிக்கு துணையாக அபினவ் மனோஹரும் அசத்தலாக விளையாடி, ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்து கௌரவமான ரன்ரேட்டை தாண்டியது.

17 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது குஜராத். அதன் பின்னர் மில்லர் கில்லர் ஆட்டம் காட்டினார், பௌண்டரி சிக்ஸர் மழையாக பொழிந்தார். 14 பந்துகளில் அவர் ஐந்து பௌண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 31 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இறுதியில் 192 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ்.

சேஸிங்கில் பட்லரும் முதல் ஓவரை மூன்று பௌண்டரிகளுடன் தொடங்கினார். இரண்டாவது ஓவரில் இரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் என புயல் வேகத்தில் ரன்களை சேகரித்துக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்முனையில் இருந்த படிக்கல் அதே ஓவரின் கடைசி பந்தில் வீழ்ந்தார்.

அப்போது ஒரு வினோதமான யுத்தியை கையாண்டது ராஜஸ்தான், அஷ்வினை மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கியது. ஆனால் அஷ்வின் தடுமாறினார், பட்லர் மட்டும் இந்த பௌலர் வந்தாலும் வெளுப்பேன் என்ற தொனியில் விளையாடிக் கொண்டிருந்தார்,

பவர்பிளேவின் கடைசி ஓவரை ஃபெர்குசன் வீசினார். இது தான் குஜராத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்ட முக்கியமான ஓவர்.

முதல் பந்தில் அஷ்வினை இழந்த ராஜஸ்தான், அதே ஓவரில் பட்லர் சிக்ஸர் அடித்து அரை சதம் விளாச பட்லரை கொண்டாடியது,

23 பந்துகளில் அரைசதம் விளாசிய பட்லர் பவர்பிளேவின் கடைசி பந்தில் வீழ்ந்தார்.

இப்படி இரு தரப்புக்கும் முக்கியமான ஓவராக ஆறாவது ஓவர் அமைந்தது. அதன்பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது.

பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை ஹர்டிக் வென்றார்.

குஜராத் டைட்டன்ஸின் அடுத்த போட்டி வரும் ஞாயிற்று கிழமை நடக்கவிருக்கிறது, குஜராத்துடன் மோதப்போவது யார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் !

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?