RCB  Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2022 : ''நா வந்துட்டிருக்கேன்னு சொல்லு, என்னோட கோப்பைக்காக'' - கெத்து காட்டும் RCB

NewsSense Editorial Team

பெங்களூரு அணியின் 15 ஆண்டு தவம் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது. ஒவ்வொரு ஆண்டும்' ஈ சாலா கப் நம்தே' என நம்பிக்கையுடன் இறங்கினாலும் எதாவது ஒரு இடத்தில் சொதப்பி கோப்பையை நழுவவிடும்.


இதோ நீண்ட காலத்துக்குப் பிறகு பெங்களூருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு அந்த அணிக்கு தேவை இரண்டே வெற்றிகள். வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தானையும் ஞாயிற்றுக் கிழமை ஆட்டத்தில் குஜராத்தையும் வீழ்த்தினால் கோப்பை கைகளின் தவழும்.


நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு பேட்டிங்கில் நாயகனாக உருவெடுத்தவர் ரஜத் பட்டிடர். ஃபாப் டு பிளசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் என முப்பெரும் நட்சத்திரங்கள் கைவிட இளம் வீரரின் ஆட்டத்தால் அபாரமான இலக்கை நிர்ணயித்தது பெங்களூரு.

Rajat Patidar

208 என்ற இலக்கை துரத்திய லக்நௌ, சேஸிங்கில் 17வது ஓவர் வரை ஆட்டத்தைத் தனது பிடியில் வைத்திருந்தது. ஆனால் கடைசி மூன்று ஓவர்களில் எல்லாம் தலைகீழாய் மாறியது. இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு.


நேற்று இரவு மழை காரணமாக டாஸ் போடுவதே தாமதமானது. ஓவர்கள் குறைக்கப்படுமோ அல்லது ஐந்து ஓவர் மேட்ச் நடத்தப்படுமா அல்லது சூப்பர் ஓவர் மட்டும் நடக்குமா என ஏகப்பட்ட யூகங்கள் நிலவினாலும் ஒருவழியாக மழை நின்றதால் 40 ஓவர்கள் கொண்ட முழு ஆட்டமும் நடத்தப்பட்டது.


கொல்கத்தா மண்ணில் டாஸ் வென்றது லக்நௌ அணி கேப்டன் ராகுல், சேஸிங்கை தேர்ந்தெடுத்தார். ராகுலின் முடிவு சரியே என நிரூபிக்கும் வகையில் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார் ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ்.

பவர்பிளேவின் கடைசி ஓவரை க்ரூனால் பாண்டியா வீசியபோது மூன்று பௌண்டரி ஒரு சிக்ஸர் என ரஜத் அடுத்தடுத்து நான்கு பந்துகளை வெளுத்துவாங்க, அந்த ஓவரில் மட்டும் 20 ஓட்டங்கள் எடுத்தது பெங்களூரு. அங்கிருந்து தான் பெங்களூரு அணியின் ரன்வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. பவர்பிளே முடிவில் 52 ரன்கள் எடுத்திருந்தது ஆர்சிபி.

DK-Rajat

அதன் பின்னர் 24 பந்துகளைச் சந்தித்து 25 ரன்களை எடுத்திருந்த கோலி ஆவேஷ் கான் பந்தில் வீழ்ந்தார். வழக்கம் போல க்ரூனால் பாண்ட்யாவின் ஸ்பின்னுக்கு இறையானார் மேக்ஸ்வெல். அப்போது 86 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆர்சிபி.


லாம்ரோர் இரண்டு பௌண்டரிகளை அடித்துவிட்டு அவுட் ஆக தினேஷ் கார்த்திக் மற்றும் ரஜத் இணைந்தனர். ரவி பிஷ்னோய் வீசிய 16வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் இரண்டு பௌண்டரி என 27 ரன்கள் குவித்து மிரட்டல் ஆட்டம் ஆடினார் ரஜத். அதற்கடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஹாட்ரிக் பௌண்டரி அடித்து அசத்தினார். ஒரு சிக்ஸரை விளாசி தன் 49வது பந்தில் சதத்தை பதிவு செய்தார் ரஜத்.


பெங்களூரு அணிக்காக விளையாடும் வீரர் ஒருவர் பிளே ஆஃப் சுற்றுகளில் சதமடிப்பது இதுவே முதல் முறையாகும். மற்றும் பிளே ஆஃப்-ல் கேப் செய்யப்படாமல் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் ரஜத்திற்கு சேரும். ஆட்டத்தின் பத்தொன்பதாவது ஓவரை எதிர்கொண்ட கார்த்திக் - ரஜத் ஜோடி ஆளுக்கு ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் வைத்து 21 ரன்கள் குவித்தது.


கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க ஆர்சிபி ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 207-ஐ தொட்டது. கார்த்திக் 37 ரன்களுடனும் ரஜத் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 84 ரன்கள் அடித்து மாஸ் காட்டியது ஆர்சிபி.

Virat Kohli

தன் இறுதி கனவு பயணத்தை மேற்கொண்ட எல் எஸ் ஜி, மிகப்பெரிய இலக்கை நொக்கி தன் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.


முதல் ஓவரிலேயே டீ காக் விக்கெட்டை தூக்கி லக்நௌக்கு அதிர்ச்சி கொடுத்தார் முகமது சிராஜ். நேற்றைய தினம் இரு அணிகளிலும் மிக அஞ்சப்படும் நட்சத்திர வீரர்களான தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்களுமான டீ காக் மற்றும் டு பிளசிஸ் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பவர்பிளேவுக்குளேயே வோஹ்ரா விக்கெட்டை ஹேசில்வுட் தூக்கினாலும் கே எல் ராகுல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்த்தால் மேட்ச்சை நகர்த்தினார். பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது லக்நௌ.


அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஹூடா - ராகுல் இணை பொறுப்பாகவும் தேவையான பந்துகளை அடித்தும் ரன்ரேட் சரசரவென அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டது. இதனால் ஆட்டம் லக்நௌ கையை விட்டு நழுவவே இல்லை. ஹூடா சிக்ஸர்களிலேயே ஆட்டத்தை டீல் செய்தார். அவர் 26 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருந்தது. இதனால் ஆர்சிபி கனவு டமால் என்றே முடிவுக்கு வரவேண்டி இருந்தது.


16,17 ஓவர்களையும் சிறப்பாக எதிர்கொண்டது லக்நௌ. கடைசி மூன்று ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 41 ரன்கள். அப்போது ஹர்ஷல் படேல் பந்துவீச வந்தார். முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 8 ரன் மட்டுமே கொடுத்திருந்த ஹர்ஷல், முதல் பந்தை உருப்படியாக போடுவதற்கு முன்பே வைடு மூலம் ஆறு ரன்களை கொடுத்துவிட்டார். இதனால் 18 பந்துகளில் வெற்றிக்கு தேவை 35 ரன்கள் மட்டுமே.

Faf Du Plessis

இப்படியொரு சூழலிலிருந்து ஆர்சிபி ஆட்டத்தை மீட்டெடுத்தார் ஹர்ஷல். அடுத்தடுத்து வீசிய பந்துகளில் வெறும் 8 ரன் கொடுத்து, 18வது ஓவரில் ஸ்டாய்னிஸின் ராட்சத விக்கெட்டை தூக்கினார்.

19வது ஓவர் ஹேசில்வுட் கைகளில் விழ, மூன்று வைடு வீசி சொதப்பலாக ஆரம்பித்தாலும் கே.எல்.ராகுல் மற்றும் க்ரூனால் பாண்டியா என இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி திருப்புமுனை தந்தார். ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் அடித்து அவுட் ஆனார். க்ரூனால் முதல் பந்தை லாவகமாக ஹேசில்வுடிடமே கேட்ச் கொடுத்து, டக் அவுட் ஆனார். அந்த ஓவரில் ஒன்பது ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


கடைசி ஓவரை சிக்கனமாக வீசிய ஹர்ஷல் 9 ரன்கள் மட்டுமே தந்தார். 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெல்ல கோலி ஆர்ப்பரித்தார். ஃபைனல் செல்வதற்கான டிக்கெட்டை வாங்க வெள்ளிக்கிழமை குஜராத் மண்ணில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது பெங்களூரு.

Virat-Rajat

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?