ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52. தாய்லாந்தில் இருக்கும் அவரது வீட்டில் உயிரிழந்ததாக, அவரது நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் கோ சாமூய்யில் வார்னேவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் இருந்தபோது, எந்தவித அசைவுமின்றி இருந்துள்ளார். சந்தேகமடைந்த வீட்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் வார்னேவை பரிசோதித்தபோது, மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர்.
வார்னேவின் இழப்பு கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியபோது சுழற்பந்துவீச்சில் எதிரணியினரை கலங்கடித்த அவர், பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். டெஸ்டில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார். 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பல பிரபலங்கள் ஷேன் வார்னேவின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவக், "உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ஷேன் இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை" என ட்விட் செய்திருக்கிறார்.