Valluvar Silai

 

Twitter

தமிழ்நாடு

Kanniyakumari Tourism : வள்ளுவர் சிலை முதல் வட்டக் கோட்டை வரை | 10 சுற்றுலாத் தலங்கள்

Antony Ajay R

முக்கடலும் கூடும் கன்னியாகுமரி வரலாற்றுச் சிறப்பு மிக்க நிலம். தமிழகத்தின் சுற்றுலாத் தலங்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிக்கிறது கன்னியாகுமரி. அரண்மனைகள், அருவிகள், கடற்கரைகள், கற்சிற்பங்கள் என கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

திருவள்ளுவர் சிலை


133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. கடலில் போட்டிங் செய்து சிலையை அடைந்து சிலையின் மேலிருந்து கடற்கரையைப் பார்க்கும் வியூ அருமையாக இருக்கும்.

அருகிலேயே விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபம் உள்ளிட்ட தலங்கள் அமைந்துள்ளன. கடற்கரையில் கடல் சார்ந்த பொருட்களான சங்கு, சோவி போன்றவற்றை பர்சேஸ் பண்ணலாம். அப்படியே கடற்கரையில் நடப்பவர்கள் அங்கிருக்கும் தொல்லியல் பூங்காவையும் பார்வையிட முடியும்.

திற்பரப்பு Falls

மாத்தூர் தொட்டிப்பாலம்

1204 அடி நீளமும் 104 அடி உயரமும் கொண்டது தொட்டிப்பாலம். இதனை 28 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் 32 அடி சுற்றளவு கொண்டது. இது தான் தெற்காசியாவின் மிகப் பெரிய பாலமாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரியில் உள்ள மாத்தூர் கிராமத்தின் பெயர் இந்த பாலத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. பாலத்தின் மேலிருந்து அருகில் ஓடும் பராளி நதியின் ரம்மியமான காட்சிகளைப் பார்க்கலாம்.

திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு , திற்பரப்பு பகுதியில் அருவியாக விழுந்து செல்கிறது. கன்னியாகுமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் அளவு இந்த அருவி பிரசித்தி பெற்றது.

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறுநகரத்தில் வெள்ளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் அரண்மனை.

ரவிவர்மா குலசேகரப் பெருமாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த அரண்மனை, 17 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைமையகமாக விளங்கிய பத்மநாபபுரம் அரண்மனை, கேரளக் கட்டிடக் கலையின் நிகழ்கால சாட்சியாக இருக்கிறது. கன்னியாகுமரி செல்பவர்கள் நிச்சயம் நாகர்கோவில் பக்கம் சென்று அரண்மனையைப் பார்வையிட வேண்டும்.

உதயகிரி கோட்டை

புலியூர் குறிச்சி உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனையைத் தலைமையிடமாகக்கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சி நடந்தபோது, போருக்குத் தேவையான படைக்கலம் தயாரிக்கும் பகுதியாக அமைந்த சிறு கோட்டைதான் உதயகிரி. இந்தக் கோட்டைக்குள் அமைந்திருக்கும் மலையில், துப்பாக்கித் தயாரிப்பதற்கான வார்ப்பு உலை முன்பு இருந்திருக்கிறது. 1600- ம் ஆண்டு வாக்கில் இந்தக் கோட்டை உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாகர்கோவில் நகரிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோட்டை. இது மார்த்தாண்ட வர்மா எனும் அரசரால் கட்டப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 90 ஏக்கர் ஆகும். 200 அடி உயரம் கொண்ட குன்று ஒன்று உள்ளது.

இந்தக் கோட்டையில் தமிழக வனத்துறை சார்பில் உயிரியல் பூங்கா மற்றும் மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்குப் பறவைகள், விலங்குகளை நேரில் கண்டு ரசிக்கலாம். இது தவிர, கோட்டைக்குள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் விதமாக `பர்மா பாலம்' என்கிற சுமார் 10 அடி உயரத்தில் தொங்கும் மரப்பாலாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்து.

சிதறால் சமணக்கோவில்

சிதறால் மலைக் கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில், குழித்துறைக்கு வடகிழக்கில் 4 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது சிதறால் என்னும் ஊர். அங்குள்ள திருச்சாணத்து மலைமீது அமைந்திருக்கும் குடைவரைக் கோயில், பல்வேறு வரலாற்று அதிசயங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.

அழகிய கடற்கரைகள்

குமரி கடற்கரை அழகிய பல சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளவை. பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு முன், சூரிய உதயம் காணும் கடற்கரைக்குச் செல்லவேண்டியது அவசியமாகும். அங்குச் சூரியன் உதிக்கும் அழகிய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம்.

சூரியன் மறைவைக் காண மேற்கு திசையில் இருக்கும் கடற்கரைக்குச் செல்லவேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து மிக அருகில் அமைந்துள்ள சொத்தவிளை பீச் மொத்தம் 4 கிமீ அளவுக்குப் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்குச் சிறிய அழகிய குடில்கள், காட்சி கோபுரம், அழகிய புல்வெளிகள், சிறுவர் பூங்காக்கள் என அழகு படுத்தியுள்ளது தமிழக சுற்றுலாத் துறை.

வட்டக்கோட்டை

வட்டக் கோட்டை

வட்டக் கோட்டை பற்றி அறிந்துகொள்ள மீண்டும் திருவிதாங்கூர் அரசாங்கத்துக்குச் செல்வோம். 18ம் நூற்றாண்டில் கடல் வழி எதிரிகள் வருவதைக் கண்காணிக்கக் கட்டப்பட்டது வட்டக் கோட்டை. வட்ட வடிவில் இந்தக் கோட்டை அமைந்திருக்கும். 3.5 ஏக்கர் பரப்பளவில், 25 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோட்டைக்குள் செல்லும்போது உங்களை யானை சிலைகள் வரவேற்கும், கோட்டைக்குள் கண்காணிப்பு அறை, ஓய்வறை, ஆயுத சாலை ஆகியவற்றையும் காணலாம்.

கன்னியாக்குமரியில் இவை தவிரவும் பார்க்கப் பூங்காக்கள், கண்காட்சிகள், மியூசியங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் எனப் பல உள்ளன. சலிப்பே இல்லாமல் 3,4 நாட்கள் முழுவதும் தங்கியிருந்து சுற்றிப் பார்க்கச் சரியான ஊர் கன்னியாகுமரி!

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?