``இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் பெரும்பாலும் பிரதமர் மோடியின் திட்டங்களைத் தமிழ்ப்படுத்தியதுபோல இருந்தது. தமிழக மக்களின் பண்பாடு, வரலாறு, தொன்மைகள் அடையாளமாகப் பழமையான கோயில்கள் உள்ளன என்பதை தமிழக பட்ஜெட்டில் ஒப்புக்கொண்டதற்கு முதல்வருக்கு நன்றி. ஆக, தமிழகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
``நேரடியாக மக்களுக்குப் பயன் தரக்கூடிய திட்டங்கள் இல்லாத நிதிநிலை அறிக்கையாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது” - அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.
``நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும்கூட, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது” - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
``மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை. தொலைநோக்குத் திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும்போது ரூ.1,000 வழங்கப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதிபோல் இல்லாமல்’ செயல்படுத்தப்பட வேண்டும்” - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
"தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க. அரசின் பட்ஜெட் வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல். இதனை வாய் வாடகைதாரர்கள் வேண்டுமானால் தங்கள் ஆதாயத்திற்காக பாராட்டலாம். மக்கள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது. தி.மு.க.வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது." - எடப்பாடி பழனிச்சாமி
மோடி, போரிஸ் ஜான்சன்
கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்று வரும் உக்ரைன் - ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடி கூறும் போது, "போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுடன் பொருளாதார ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக, கல்வி ரீதியாக, அரசியல் ரீதியாக இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது. இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போரானது உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று இந்தியா நம்புகிறது" என்று தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டைப் பற்றி பிரிட்டனின் வர்த்தக அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் செய்தியாளர்களிடம் கூறும் போது, "உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்.
ஆனாலும், நாங்கள் இந்திய வர்த்தகத்துடன் தொடர்ந்து பயணிக்கிறோம். இங்கிலாந்தின் முக்கிய வர்த்தக பங்காளியாக இந்தியாவும் உள்ளது. தொடர்ந்து நாங்கள் பயணிப்போம். எதிர்காலத்தில் உக்ரைனுக்கு எதிரான இந்த போருக்கு ரஷ்யாவால் சரியான நிதியளிக்க முடியாது என்பதை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
கனா
கனா திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியானது. தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளிலும் நல்ல விமர்சனங்களை பெற்ற கனா தற்போது சீன மொழியிலும் வெளியாவது குறித்து பெருமிதமான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.
'பாகுபலி'க்குப் பிறகு சத்யராஜ் நடித்த படமொன்று சீனாவில் வெளியாகியிருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' சீனா மொழியில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒரு தென்னிந்திய நடிகர் நடித்த இரண்டு படங்கள் சீன மொழியில் வெளியாகியிருக்கிறது என்ற பெருமை சத்யராஜுக்கு கிடைத்திருக்கிறது. இதற்காக சத்யராஜை பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
India Team
மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளை வரிசையாக துவம்சம் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரைஇறுதியை உறுதி செய்து விடும்.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்திடம் சரண் அடைந்தது. 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கிய இந்தியா முந்தைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது.
உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 3-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Mars
உக்ரைன் மீது ரஷியா போர் புரிந்துவரும் நிலையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல நாடுகள் பொருளாதாரத்தடைகளை விதித்து வருகின்றன.
இந்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷிய விண்வெளி நிறுவனம் ஏற்கனவே ஐரோப்பாவுடன் விண்வெளி ஏவுதலுக்கான ஒத்துழைப்பை நிறுத்தி, அமெரிக்காவிற்கு ராக்கெட் என்ஜின்களை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் செவ்வாய் கிரகத்திற்கு ஐரோப்பிய தயாரிப்பான ரோவரை ரஷிய ராக்கெட் கொண்டு செல்ல இருந்த நிலையில், தற்போது வின்வெளி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து ரஷிய விண்வெளி நிறுவனத்தின் தலைவரான டிமிட்ரி ரோகோசின் கூறுகையில், "மிக விரைவில் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தை செயல்படுத்துவதில் நாங்கள் பணியாற்றத் தொடங்குவோம்.
ஐரோப்பிய தயாரிப்பான ரோவரைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ரஷ்யாவின் தற்போதைய தரையிறங்கும் அம்சமானது தேவையான அறிவியல் பணிகளைச் செய்ய முடியும் என்பதால், ரோவர் அவசியமாகத் தேவைப்படும் என்று தான் நினைக்கவில்லை.
ராக்கெட், ஏவுதளம் மற்றும் தரையிறங்கும் தொகுதி ஆகியவற்றைக் கொண்டிருந்த ரஷ்யா இல்லாமல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தனித்து செயல்பட குறைந்தது ஆறு ஆண்டுகள் தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்.