திமுக அரசின் ரெய்டு பட்டியலில் ஆறாவதாக இடம் பிடித்திருக்கும் இந்த கே.பி.அன்பழகன் யார். இவர் மீது ரெய்டு நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன? என்பதைப் பார்க்கலாம்.
கே.பி அன்பழகன்
தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி செல்லும் மெயின் ரோட்டில் இருக்கிறது கே.பி.அன்பழகனின் கெரகோட அள்ளி கிராமம். கிராமத்தில் பெரிய பங்களா கட்டி வசித்து வருகிறார் அன்பழகன். அவரின் அப்பா மற்றும் சித்தப்பா அரசியல் பின்புலம் கொண்டவர்கள். 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்காரரான அவரது சித்தப்பா கே.டி.கோவிந்தனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது இதனால் ஆத்திரமடைந்த அவர் பிரிந்து அதிமுக வந்தார். அவருடைய அண்ணன் மகனான அன்பழகன் அதிமுக-வில் இருந்ததால் அவரை கவுன்சிலராக்க முழு உதவியும் செய்தார். இதனால் முதன் முதலாகப் பதவிக்கு வந்தார் அன்பழகன். அன்று முதல் அவர் பதவியில்லாமல் ஒரு நாளைக்கூடக் கழித்தது இல்லை.
2001 முதல் இதுவரை 5 தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் அதில் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கவுன்சிலர் பதவி கிடைத்த போது முதல் இப்போது வரை பணிவும் பொறுமையுமே அவரின் அடையாளங்கள்.
Jayalalitha
கவுன்சிலராக இருந்த அவர் காரிமங்கல ஒன்றிய செயலாளர் தர்மபுரி மாவட்டச் செயலாளர் எனக் கட்சியில் படிப்படியாக வளர்ந்தார். 2001-ம் ஆண்டு பாக்கோடு தொகுதி சட்டமன்ற தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். இவரது வளர்ச்சி போயஸ்கார்டன் வரை பேசப்பட்டது. இதை அறிந்து கொண்டவர் அமைதியாக அம்மா புகழ் பாடத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் சட்டமன்றத்தில் அம்மாவை வாழ்த்துவதை வழக்கமாக வைத்துக்கொண்டு செயல்பட்டார். இதனால் 2003ம் ஆண்டு செய்தித்துறை அமைச்சர் பதவி கிடைத்தது.
அடுத்து வந்த 2006 தேர்தலிலும் வெற்றி பெற்றார் ஆனால் திமுக ஆட்சியமைத்ததால் எதிர்க்கட்சி உறுப்பினராகச் செயலாற்றினார். 2011 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது ஆனாலும் அப்போது அவர் சிக்கியிருந்த சர்ச்சைகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோபத்தைச் சம்பாதித்துக் கொடுத்ததனால் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2016-ம் ஆண்டு தொடர்ந்து நான்காவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். கொஞ்சம் மனதிறங்கியிருந்த ஜெயலலிதா உயர் கல்வித்துறை அமைச்சர் பதவியைக்கொடுத்தார். இப்போது 2021ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று பாலக்கோடு தொகுதியைத் தான் கோட்டையாக வைத்துள்ளார்.
கே.பி அன்பழகன் இல்லம்
இப்படி அதிகாரத்தில் தொடர்ந்தபோதும், தொகுதிக்கு எதையுமே செய்யவில்லை என்று அன்பழகன் மீது குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. ‘தக்காளியிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்திசெய்ய ஆலைகள் அமைக்க வேண்டும்’ என்ற விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை. நீண்டநாள்களாக நிலுவையிலுள்ள அலியாளம்-தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம், எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், ஒகேனக்கல் மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பாலக்கோடு சுற்றியுள்ள சிறு கிராமங்களில் உள்ள மக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் இருந்தது. அங்கு புளோரைடு கலந்த நீரைப் பருகி வந்த மக்கள் பல உபாதைகளுக்கு ஆளாகினர். இதனையும் முன்னாள் அமைச்சர் கண்டு கொள்ளாமல் விட்டதனால் திமுக அரசு “ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை” அறிவித்து ஸ்கோர் செய்திருக்கிறது. அதிமுக-வின் கோட்டையைத் தகர்க்கும் நடவடிக்கையாகவே இந்த திட்டமும் ரெய்டும் விளங்குகிறது.
கே.பி அன்பழகன் இல்லம்
காரிமங்கலத்திலிருந்து தருமபுரி செல்லும் வழியில் மனைகளாகவும், நிலங்களாகவும் பலர் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்கள் அன்பழகனின் குடும்பத்தினர். தருமபுரி நகருக்குள் உள்ள திரையரங்கத்தையொட்டி சமீபத்தில் 15 கோடி ரூபாயில் நிலம் ஒன்று கைமாறியுள்ளது. அவரைச் சுற்றிலும் பத்து பினாமிகள் இருக்கிறார்கள்.
கெரகோட அள்ளி கிராமத்தில், தாத்தா பெயரில் பள்ளி நடத்துகிறார். அதற்கு எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கும் அவர் குடும்பத்துக்குச் சொந்தமானதுதான். இன்னும் சில இடங்களிலும் பினாமிகள் பெயரில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. ஆனால், தன்மீது எந்தச் சர்ச்சையும் வரக்கூடாது என்பதில் அன்பழகன் கவனமாக இருப்பார்’’ என்கிறார்கள் அவர்கள்.
Banwarilal Purohit
அன்பழகன் அமைச்சராக இருந்த காலத்தில் ‘பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் புரள்கிறது. இதைக் கண்டு வேதனை அடைந்தேன்’ என்று அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு முறை வெளிப்படையாகவே பேசும் அளவுக்கும் இருந்தது தமிழக உயர் கல்வித்துறையின் நிலை. ‘துணைவேந்தர்களை நியமிப்பதே ஆளுநர்தான்’ என்று பதிலடி கொடுத்தார் அன்பழகன். ஆனாலும், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் புரையோடியதை இருவருமே மறுக்கவில்லை!
இதனால் அவருக்குத் தொடர்புடைய 57 இடங்களில் நடைபெறும் சோதனையில் 1.60 கோடி ரூபாய், 3கிலோ தங்கம். 10 கிலோ வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை.