தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கவர்னர் அலுவலகமான ராஜ்பவனில் நடந்த தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதில் பங்கேற்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை என்பது பற்றியும் நீட் விவகாரம் குறித்தும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், `அரசியல் சாசன நிகழ்வாகவும், விரிவாக விவாதித்துப் பல விளக்கங்களைக் கொடுத்தும் நீட் மசோதாவை மீண்டும் உங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைத்தோம். அதன்பிறகு நடந்த உங்களுடனான சந்திப்புகளில் நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதன் முக்கியத்துவத்தையும் உங்களுக்கு நான் வலியுறுத்தி இருக்கிறேன். கடந்த சந்திப்பில் கூட அதற்கான நடைமுறை விரைவுபடுத்தப்படும் என்று நீங்கள் உறுதியளித்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆனால் தற்போது மீண்டும் அதை மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை என்பது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. 2 மூத்த அமைச்சர்களை உங்களிடம் அனுப்பி அந்த மசோதாவை அனுப்பி வைப்பதற்கான காலளவு குறித்த ஒரு தெளிவான பதிலைக் கேட்டிருந்தேன்.ஆனால் துரதிர்ஷ்டமாக அது தொடர்பான எந்த ஒரு சாதகமான உத்தரவாதமும் தரப்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில்தான் ராஜ்பவனில் நீங்கள் நடத்தும் தேநீர் விருந்து விழாவில் கலந்து கொள்வது சரியானதாக இருக்காது என்று உணர்ந்தோம். அதாவது அது எங்கள் சமூகம் மற்றும் சட்டசபையில் ஒட்டுமொத்த கருத்துக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்கிறபோது நாங்கள் மேற்கண்ட முடிவை எடுத்தோம்.' எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாகக் கோயிலின் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி திருக்கல்யாணம் நடந்தது. இந்த ஆண்டுக்கான விழாவுக்கு வழக்கம்போல் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. கடந்த 10 -ம் தேதி கார்கோனில் ராமநவமி விழாவையொட்டி, பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, சில மர்ம நபர்கள் ஊர்வலத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்பிற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கலவரத்தில் தொடர்புடைய, 121 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்; 89 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகக் கார்கோனில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 4 நாட்கள் அமலிலிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 10:00 மணி முதல், நண்பகல் 12:00 மணி வரை தளர்த்தப்பட்டது. இதில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கப் பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ட்விட்டா் நிறுவனத்தில் சுமாா் 9 சதவிகித பங்குகளை வைத்துள்ளார் டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க். இருப்பினும், அதன் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து எலான் மஸ்க், `உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருக்கும் என நம்பியதால் ட்விட்டா் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். எனினும், தற்போதைய வடிவத்தில் சமூகத்துக்கு ட்விட்டர் நிறுவனத்தால் சேவையாற்ற முடியாது என இப்போது உணர்கிறேன். ட்விட்டா் ஒரு தனியார் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். எனது கருத்தைப் பரிசீலனை செய்யவில்லையென்றால், பங்குதாரராக எனது நிலையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான உறவு பல்லாண்டு காலமாகச் சிதைந்துள்ளது. மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேம், காசா உள்ளிட்ட பகுதிகளுடன் தங்கள் சுதந்திர அரசுக்கு அங்கீகாரத்தை பாலஸ்தீனம் நாடுகிறது. ஆனால் அதற்கு இஸ்ரேல் மறுக்கிறது. அதுமட்டுமின்றி ஐ.நா. சபையின் எதிர்ப்பையும் மீறி அங்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற்றங்களை உருவாக்குகிறது. இதனால் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் மோதல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com