கேஜிஎஃப் 2 NewsSense
தமிழ்நாடு

கேஜிஎஃப் 2: ரத்தம் சிந்திய கோலார் தமிழர் துயர வரலாறு - விரிவான தகவல்கள்

Govind

கேஜிஎஃப் 1 யாரும் எதிர்பாராத வகையில் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற படம். கோலார் தங்க வயலில் பணி புரியும் தொழிலாளிகளைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன் திரைப்படம். அதன் வசனங்கள், அதிரடிக் காட்சிகள் என்று படம் பாக்ஸ் ஆபிசில் பெருவெற்றி பெற்றது.

2018 இல் வெளியான முதல் பாகத்தை அடுத்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியிடப்பட்டு இதுவரை 8 கோடியே 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் படம் குறித்த விவாதமும் சூடு பிடித்திருக்கிறது. கோலார் தங்க வயலின் களத்தில் நடக்கும் கதை இது. கோலார் தங்க வயல் என்பது தமிழ்ரகளின் இரத்தத்தால் எழுப்பப்பட்ட தங்கச் சுரங்கம்.

அதன் வரலாறு குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

Gold Mines

கேஜிஎஃப் கோலார் தங்க வயல் வரலாறு

சோழர் காலத்திலும், திப்பு சுல்தானின் காலத்திலும் கர்நாடகாவின் கோலார் பகுதியில் தங்கம் எடுக்கப்பட்டது பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

ஜான் டெய்லர் கம்பெனி

1880-ல் தான் முதன் முறையாக இங்கிலாந்தின் ஜான் டெய்லர் நிறுவனத்தாரால் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆழ்துளைகள் மூலம் தங்கம் வெட்டியெடுக்கும் பணி துவங்கியது. அன்று துவங்கி சுரங்கம் மூடப்பட்ட நாள் வரை சுமார் நூற்றி இருபது ஆண்டுகளில் கோலார் தங்க வயலில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 800 டன்.

47-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும் கோலார் தங்க வயலை நடத்தி வந்த ஜான் டெய்லர் கம்பேனியார் 1956-ம் ஆண்டு வரை எந்த சிக்கலும் இன்றி தங்கத்தைச் சுரண்டியே வந்தனர்.

1956-ல் ஜான் டெய்லர் நிறுவனம் நிர்வாகப் பொறுப்பை மைசூர் அரசுக்கு கைமாற்றிக் கொடுத்த பின்னரும், “பொறியியல் ஆலோசகர்” என்ற பொறுப்பு வழங்கப்பட்டு 1971-ம் ஆண்டு வரை நிர்வாகத்தில் அமர்த்தப்பட்டனர்.

மத்திய அரசின் கீழ் வந்த தங்கச் சுரங்கம் நட்டமானது ஏன்?

மைசூர் அரசாங்கத்துக்கு கைமாற்றப்பட்ட சுரங்கம் ஆறாண்டுகளுக்குப் பின் மத்திய அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. பின் 71-ம் ஆண்டு மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துறையின் கீழும், பின் 72-ம் ஆண்டு பாரத தங்க சுரங்க நிறுவனம் என்ற பொதுத்துறையின் கீழும் செல்கிறது.

ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது.

கோலாரின் மேற்கே 40 கிமி தொலையில் இருந்து கோலார், குப்பம், தர்மபுரி வழியாக சேலம் வரை பூமிக்கடியில் தங்கப் படிமங்கள் வேர் போல் பரவிச் செல்வதை ஆங்கிலேய சர்வேயர்கள் ஆராய்ந்து மதிப்பிட்டு வைத்திருந்தனர்.

’சுதந்திரத்திற்குப்’ பின் அதிகாரத்திற்கு வந்த இந்திய அதிகாரிகளோ, நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி மீண்டும் சர்வே எடுக்கவும் இல்லை, ஆங்கிலேய அதிகாரிகள் சர்வே செய்யாத இடங்களை சர்வே செய்யவும் இல்லை.

இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டாக படிப்படியாக ஒரு டன் மூலப் பொருளில் இருந்து சுத்திகரிக்கப்படும் தங்கத்தின் அளவு குறைந்து நட்டத்தின் அளவு கூடியது. சுரங்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து பத்தே ஆண்டில் கொள்கை அளவில் ’நட்டத்தை’ காரணம் காட்டி மூடி விடுவது என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்து விட்டது.

போராட்டங்களை முன்னெடுத்த தொழிலாளிகள்

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து சுரங்கத்தை மூடுவது குறித்த விவாதங்களை அரசாங்கம் துவங்கி விட்டது. இந்த தகவல் கீழ்மட்ட தொழிலாளிகளை எட்டிய போது தங்களுக்கு வாழ்வளித்த சுரங்கம் தங்கள் கண் முன்னே கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அனல் கக்கும் போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினர்.

கோலார் நகரமே சுரங்கத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான். சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் ஏதாவது ஒரு வகையில் சுரங்கத்தோடு நெருக்கமான இணைப்பைக் கொண்டது.

நட்டத்திற்கு காரணத்தை கண்டுபிடித்த கமிட்டிகள்

மக்களின் கோபாவேசத்தைத் தணிக்க மத்திய அரசு வழக்கம் போல மூன்று வெவ்வேறு கமிட்டிகளை அமர்த்தியது. சுரங்கத்தில் நட்டம் ஏற்படுத்திய காரணிகளையும், அவற்றைக் களைந்து கொள்ளும் வழிமுறைகளையும் ஆராய ஏற்படுத்தப்பட்ட இக்கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாராம்சம் – அதிகார வர்க்க நிர்வாக சீர்கேடு.

கமிட்டியின் பரிந்துரைகளின் படி, கோலாரில் எடுக்கப்படும் தங்கம் வெளிச் சந்தையின் விலைக்கு கொள்முதல் செய்யவில்லை. லண்டன் உலோகச் சந்தையின் மதிப்பில் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு பண நோட்டுகள் அச்சிடப்படுவதற்கான பின்புல ரிசர்வாக பயன்படுத்தப்படுவது நட்டத்திற்கு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டது.

சுரங்கத்தை மூடிய மத்திய அரசு

மேலும், ஜான் டெய்லர் சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய பழைய தொழில்நுட்பங்களையே இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தங்க மகசூலின் அளவு அதிகரிக்காமல், சையனைடு கழிவுகளில் அதிக தங்கம் கலந்து வெளியேறுவதையும் கமிட்டி சுட்டிக் காட்டப்பட்டது. இந்த மிட்டிகளின் பரிந்துரைகளை அரசு அலட்சியம் செய்தது.

அதிகாரிகள் செய்த அடுத்த வேலை, சுரங்கத்தை மூடுவதற்கான கோப்புகளை மத்திய தொழிற்சாலைகள் மற்றும் நிதி விவகாரங்கள் மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு (BIFR – Board for Industrial and Financial Reconstruction) அனுப்பி வைத்தது தான். மேற்படி ஆணையம், காலம் கடத்தாமல் சுரங்கத்தை மூடும் பணியைத் துவங்கியது.

சுரங்கத்தின் உள்ளே பல இடங்களில் நீர்க் கசிவு இருக்கும். இதைச் சமாளிக்க சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும். இந்த அணைகளை பராமரிக்காத அதிகாரிகள் ஒருபுறமிருக்க 94 – 96 காலகட்டத்தில் பல அணைகள் சதித்தனமாக உடைக்கப்பட்டன.

இதன் காரணமாக சுரங்கத்தின் ஆழமான பகுதிகள் நீரில் மூழ்கி விலை மதிப்பு வாய்ந்த பல கருவிகள் மீட்கப் படாமல் மூழ்கிப் போயின. வேலை செய்யத் தகுந்த ஆழத்தின் அளவும் படிப்படியாக சுருங்கி ஒரு கட்டத்தில் 2500 அடிகளுக்கு மேல் தொழிலாளர்களால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

வாழ்விழந்த தொழிலாளர்கள்

லாபமில்லாததால் மூட வேண்டும் என்கிற பச்சைப் பொய்யை தங்கள் உழைப்பால் தவிடு பொடியாக்கினர் தொழிலாளிகள். அடுத்த சில மாதங்களில் மாதாந்திரம் ஐந்து கிலோ என்கிற வகையில் உற்பத்தியை பெருக்கி அதிகபட்சமாக 86 கிலோ என்கிற அளவை எட்டிப் பிடித்தனர்.

சுரங்கத்தை நட்ட கணக்கு காட்டி மூடி விட்டு சர்வதேச டெண்டர் என்கிற பெயரில் அதைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்தே தீருவது என்று ஏற்கனவே அரசு முடிவு செய்து விட்ட பின் தொழிலாளிகளின் உழைப்பை விரயமானது.

இறுதியில்சூழ்ச்சிகள் வென்று தொழிலாளிகள் வீழ்த்தப்பட்டனர்; சுரங்கம் மூடப்பட்டது.

சதித்தனமாக மூடப்பட்ட தங்கச் சுரங்கம்

தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிக்காமலேயே 2001-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சுரங்கம் மூடப்பட்டது. வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக வேலை செய்த இடத்துக்குள் இனிமேல் தங்களால் நுழைய முடியாது என்கிற யதார்த்தத்தை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

சுரங்கம் மூடப்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2008-ம் ஆண்டு கருநாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பு வரும் வரையில் அவர்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. 30,000த்திற்கும் மேல் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மூடப்பட்ட போது வெறும் 3000 மாக சுருங்கியிருந்தது.

கேஜிஎஃப்பில் தங்க அகழ்வு 121 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. 2001 ஆம் ஆண்டு வரை அங்கு தங்கம் எடுக்கப்பட்டது. அந்த 121 ஆண்டுகளில் அங்குள்ள சுரங்கங்களில் இருந்து 900 டன்களுக்கும் அதிகமான தங்கம் எடுக்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

மீண்டும் பணி தொடங்கப்படலாம் என்ற 2016ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு தெரிவித்தது. கேஜிஎஃப் சுரங்கங்களில் இன்னும் ஏராளமான தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

நுரையீரலை ஓட்டை போட்டு தியாகம் செய்த தொழிலாளிகள்

கோலார் சுரங்கத்தின் அதிகபட்ச ஆழம் சுமார் 12,000 அடி – அதிகபட்ச வெப்பம் 160 டிகிரி பாரன்ஹீட். இந்த ஆழத்தில் இயற்கையாகவே நிலவும் வெப்பமும், சூழலின் இறுக்கமும் அழுத்தமும் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்களின் நுரையீரலை இயல்பாக வேலை செய்ய அனுமதிக்காது. இதனால் கேன்சர் வந்து, இளவயதிலேயே நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் இறந்து போயினர்.

கோலார் நகரின் சிறப்பு

கோலார் தங்க வயலுக்கென்று சில சிறப்புகள் உண்டு. இந்தியாவில் முதன் முறையாக மின்சாரம் 1902-ம் வருடம் கோலார் தங்க வயலில் அறிமுகமானது. அதே போல், இந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது கோலார் தங்க வயலுக்காகத் தான். இந்த வரிசையில் உலகில் முதன் முறையாக மணல் துகளால் உண்டாகும் ந்யூமகொனோசிஸ் நோய் கண்டறியப்பட்டதும் கோலார் தங்க வயலில் தான்.

கோலாரில் தமிழ் தொழிலாளிகள்

கோலார் தங்க வயலின் மக்கள் தொகையில் எண்பதுக்கும் அதிகமான சதவீதம் தமிழர்கள். தமிழர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தலித்துகள்.

கங்காணிகள் எனப்படுவோர் அன்றைய வட ஆற்காடு, தருமபுரி, சித்தூர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஆதி திராவிடர் வகுப்புகளைச் சேர்ந்த அப்பாவி ஏழைகளை ஆசை காட்டி கோலார் தங்க வயலுக்கு வரவழைத்தனர். ஏறக்குறைய கொத்தடிமைகளின் நிலையில், எந்த உரிமையும் இன்றி சுரங்கத்தில் வேலை பார்க்க அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். செத்து விழுந்த தொழிலாளிகளைப் புதைக்க சுடுகாடு கூட அன்றைக்கு இருக்கவில்லை.

இப்படி இரத்தம் சிந்திய தமிழ் தொழிலாளிகளின் உழைப்பில்தான் கோலார் தங்க வயல் இயங்கியது. இன்று அது இழுத்து மூடப்பட்டிருக்கிறது. கேஜிஎஃப் 2 திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு இந்த வரலாறு நமக்குத் தெரிய வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?