கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதையொட்டி மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியபோது," ரஷ்யா-உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடக்கிறது. அப்படியிருக்கையில் இப்போதுமட்டும் ஏன் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்படுகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இது உண்மையல்ல. கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை 2 வாரங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், கடந்த 8 நாட்களாக இங்கு விலை உயர்வு காணப்படுகிறது." என்றார். மேலும், பெட்ரோலியப் பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. அதற்கு மக்கள் இப்போதும் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 2026-ம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் அதுவரை மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்." என்றார்.
2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன் பிறகு அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் 2 பேரின் இலாகா திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவிவகித்த ராஜ கண்ணப்பனுக்கு பிற்பட்டோர் நலத்துறையும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவ சங்கருக்கு போக்குவரத்து துறையும் வழங்கி இலாகா மாற்றம் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ.) யை சாதிப் பெரைச் சொல்லித் தி்ட்டியது, பொது வேலை நிறுத்தத்தின்போது பேருந்துகள் இயக்க திட்டமிடாதது போன்ற குற்றச்சாட்டுகளால் ராஜ கண்ணப்பனின் துறை மாற்றப்பட்டது எனச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு வருகிற ஜூலை 24-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கா.பாலச்சந்திரன் அறிவித்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தன. இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் அசிஸ்டென்ட், பில் கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஒரு ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்தத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பின்னர் தற்போது கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 95,793 பக்தர்கள் தரிசனம் செய்ததாகச் சொல்கின்றனர். இதையொட்டி உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 13 லட்சம் கிடைத்துள்ளது.
அமெரிக்கா, உலக நாடுகளை கொரோனா தொற்று அடிப்படையில் மிக அதிக ஆபத்தான நாடுகள், குறைந்த ஆபத்தான நாடுகள் என பிரித்து வைக்கிறது. இதுகுறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) நேற்று முன்தினம் விடுத்த அறிக்கை ஒன்றில், " இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன்பு நீங்கள் தடுப்பூசி செலுத்தியதையும், உங்கள் கொரோனா தடுப்பூசிகளைப் புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 2 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசத்தை சரியாக அணிய வேண்டும். இந்தியாவில் உள்ள கொரோன பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும்" என அதில் கூறியுள்ளது. இந்தியாவை நிலை 1 (குறைந்த ஆபத்து) நாடாக அமெரிக்கா தற்போது வகைப்படுத்தியிருக்கிறது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, கடந்த 25-ம் தேதி திடீர் பயணமாக இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவால் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமரைச் சந்திக்க கேட்டபோது, பிரதமர் அலுவலகம் சந்திப்பை மறுத்துவிட்டது. இந்நிலையில் நாடு திரும்பிய வாங் யி
"சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இந்தியப் பயணத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் எப்படி வளர்ச்சியில் பங்கெடுப்பது, சிக்கல்களைக் குறைப்பது உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டது. மேலும், இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்." எனக் கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஏப்ரல் 2 -ம் தேதி, டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் நாளை (31.3.2022) பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அந்தச் சந்திப்பில், அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதுடன், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்க உள்ளார்.